09) அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
10) அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.
நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள் என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் இது உம்மால் தான் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிக்காதிருக்கிறார்களே?
மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
எந்த ஊரையும் அதற்கென்று உள்ள கால நிர்ணயத்தின் படியே அழித்துள்ளோம். எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் என்று கூறுவீராக!
நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.
அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.
உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் நாம் இயலாதோர் அல்லர்.