10) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-10
நபி (ஸல்) கூறினார்கள் : செல்வ வளம் வழங்கப்பட வேண்டும் அல்லது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு சென்றால் தமது உள்ளங்கைகளை இணைத்து. அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் தமது உடலில் இயன்ற வரை தடவிக் கொள்வார்கள். தலையில் ஆரம்பித்து, முகம், உடலின் முற்பகுதியில் கைகளால் மூன்று முறை தடவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாதென எங்களுக்குக் காலம் விதிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
சண்டையிடும் போது) முகத்தில் அடிப்பதையும், முகத்தில் சூடிடுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.
பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள்.
(இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்’ என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.’
அறிவிப்பவர் : பராவு இப்னு ஆஸிப் (ரலி)