1. முர்ஸல் المرسل
1. முர்ஸல் المرسل
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும்.
ஹன்னாத்
வகீவு,
இஸ்ராயீல்,
ஸிமாக்,
முஸ்அப்,
நபிகள் நாயகம்
என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும்.ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும், ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.
அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ, அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.
ஒரு நம்பகமான தாபியீ, நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.