01) முன்னுரை

நூல்கள்: இது தான் பைபிள்

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்…

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். சிலரைப் புண்படுத்தவும் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புண்படுத்துவதோ என் நோக்கம் அன்று. உங்களுக்கும், முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும், முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும், நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுள்ளோம்.

காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும், கருத்துகளுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரிசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும், நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்