1) முன்னுரை

நூல்கள்: இறை நேசர்களைக் கண்டறிய இயலுமா?

  1. முன்னுரை

மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று சிலருக்குப் பட்டம் சூட்டி அவர்களைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமும் காலை பத்து மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்று தனது ஊழியருக்கு ஒரு நிறுவனம் கட்டளையிடுகிறது. அப்படி வருபவர்களுக்குத் தான் சம்பளம் தரப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அங்கே பணியாற்றும் ஊழியர்களில் ஓரிருவர் மட்டுமே குறித்த நேரத்தில் வருகிறார்கள். மற்றவர்கள் 10 மணிக்கு வருவதற்குப் பதிலாக அலுவல் நேரம் முடியும் போது ஆளுக்கு ஒரு மாலையுடன் வந்து குறித்த நேரத்தில் பணி செய்ய வந்தவர்களின் கழுத்தில் போட்டு பாராட்டுகின்றனர். இப்படி நடந்தால் இவர்களை நாம் என்னவென்போம்?

நீங்கள் எனது சொல் கேட்டு எனது நேசர்களாக ஆகுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அந்தக் கட்டளையைப் பேணாமல், இறை நேசராக முயற்சிக்காமல் இறைவனின் சொல் கேட்டு நடந்தவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துபவர்களுக்கும், பொறுப்பற்ற அந்த ஊழியர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் சம்பளத்தை இழப்பதைப் போல் இவர்களும் சொர்க்கத்தை இழக்க மாட்டார்களா?

குறித்த  நேரத்தில் ஒருவர் வேலைக்கு வருவதை நாம் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதில் சிறிதளவாவது நியாயம் உள்ளது. ஆனால் இறைவனுக்கு  நேசராகுதல் என்பது செயல்களை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. அதைச் செய்பவரின் தூய எண்ணத்தை வைத்து இறைவனால் முடிவு செய்யப்படுவதாகும். இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பொறுப்பற்ற அந்த ஊழியர்களாவது தங்களால் கண்டுபிடிக்க முடிந்த விஷயத்தைக் கண்டுபிடித்து பாராட்டினார்கள். ஆனால் அவ்லியா பட்டம் கொடுப்பவர்கள் தங்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தைப் பற்றி முடிவு செய்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் அந்த பொறுப்பற்ற ஊழியரை விட இழிந்தவர்களாக உள்ளனர்.

சிலரைப் பற்றி இறைவனின் நேசர்கள் என்று இவர்களாகவே தவறான முடிவு எடுத்துக் கொண்டு இறைவனின் நேசர்கள் என்பதால் அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம்; அவர்களை வழிபடலாம் எனவும் நினைக்கின்றனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தர்கா எனும் வழிபாட்டுத் தலத்தை எழுப்பி, பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்து வருகின்றனர்.

எத்தனை குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டி இச்செயல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல என்று நாம் அறிவுரை கூறினாலும் அதை அவர்கள் மதிப்பதில்லை.

காரணம் இவர்கள் மகான்கள்; இவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் எப்படியும் நம்மைக் காப்பாற்றி விடுவார்கள். நாம் வைக்கும் கோரிக்கைகளை அல்லாஹ்விடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை இவர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளதால் எந்த போதனையும் இவர்களின் உள்ளங்களில் இறங்குவதில்லை.

ஒருவரை மகான் என்று நாம் முடிவு செய்வது மார்க்கத்தில் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்கினால் தான் இந்த மாயையில் இருந்து இவர்கள் விடுபடுவார்கள்.

எனவே தான் ஒருவரை இறைநேசர் என்று கண்டுபிடிக்க முடியுமா? நாம் யாரை மகான்கள் என்கிறோமோ அவர்கள் அல்லாஹ்வின் நேசர்கள் தாமா என்ற அடிப்படையை விளக்குவதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம். முஸ்லிம்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடியவர்களாக வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த நூல் உதவும் என்று நம்பிக்கை வைக்கிறோம்.