01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாமியப் பொருளாதாரம்

முன்னுரை

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் கூறும் பொருளியல் எனும் தலைப்பில் ரமலான் மாதம்  தொடர் உரை நிகழ்த்தினேன். அந்த உரை சஹர் நேரத்தில் தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்தத் தொடரை நூல் வடிவில் அளித்தால் தேடி எடுக்க எளிதாக இருக்கும் என்று பல சகோதரர்கள் அடிக்கடி ஆர்வமூட்டி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த உரையை எழுத்து வடிவில் மாற்றி இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில் தந்துள்ளேன். மேலும் அந்த உரையில் சொல்லாமல் விடுபட்ட பொருளாதாரம் தொடர்பான இன்னும் பல சட்டங்களையும் இதில் சேர்த்துள்ளேன்.

உரையில் சொன்ன விஷயங்களில் தேவையான திருத்தங்களையும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் விளக்கத்தையும் இதில் சேர்த்துள்ளேன். எல்லா ஆதாரங்களும் அரபு மூலத்துடன் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உரையில் நான் குறிப்பிட்டதும் அதைவிட சற்று அதிகப்படுத்தி இந்நூலில் நான் சேர்த்திருப்பதும் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் சிறு பகுதி தான்.

ஜகாத்துடைய சட்டங்கள், வாரிசுரிமைச் சட்டங்கள், பொருளாதாரத்தைச் செலவிடுவது குறித்த சட்டங்கள் என இன்னும் பல விஷயங்களை இந்த நூலில் நான் குறிப்பிடவில்லை. அந்த தலைப்புகள் ஒவ்வொன்றும் தனி நூலாக எழுதும் அளவுக்கு விரிவானவை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் வாய்ப்பளித்தால் இன்னும் சில நூல்களை தனிநூலாக வெளியிட எண்ணியுள்ளேன்.

இவற்றைத் தவிர்த்து விட்டு பார்க்கும் போது முஸ்லிம்கள் பொருளாதாரம் குறித்து கொண்டிருக்கும் அதிகமான சந்தேகங்களை நீக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளதாகக் கருதுகிறேன். இதில் காணும் குறைகளை எனக்குச் சுட்டிக் காட்டுமாறும், அடுத்த பதிப்புகளில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏதும் உள்ளதாக உங்களுக்குத் தெரிந்தால் அதையும் என் கவனத்துக்கு கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்