1) மண்ணகமும் விண்வெளியும் மர்மத் தராசில்
மண்ணகமும் விண்வெளியும் மர்மத் தராசில்
திருக்குர்ஆனை வாசிக்கும் ஒருவர் அதில் பற்பல நற்கரு மங்களை பற்றிய விபரங்களும் அவைகளைப் பின்பற்றி வாழும்படி கட்டளை இடப்படுவதையும் பார்க்க முடியும். அவற்றுள் பலவும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட கடைபிடித்து ஒழுகுவதைப் பார்க்கலாம். அவ்வகையான திருமறையின் கட்டளைகளில் ஒன்று நிறுத்தலளவையை குறையின்றிச் சரியாக நிலை நிறுத்துவதற்கான கட்டளையாகும்.
இக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு துல்லியமாக நிறுத்தக்கூடிய அளவைக் கருவிகள் நமக்குத் தேவை. இத் தேவையை நிறைவேற்ற உலக நாடுகளின் அளவையியல் துறையினர் (Metrology Department) அவ்வப்போது செயல்பட்டு மிகத் துல்லியமான அளவைக் கருவிகள் உருவாக்கி (திருக்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்ற) பெரிதும் உதவி செய்கின்றனர்.
அளவைகள் வணிகத்தின் உயிராகவும் வணிகம் சமூகத்தின் முதுகெலும்பாகவும் இருப்பதால் வணிகத்தைத் திறம்பட நடத்திச் செல்ல துல்லியமான அளவைகள் நமக்குத் தேவை. மேலும் ஒரு சமூகத்தின் சாந்தியும் ஒற்றுமையும் அதில் நிலவும் நீதியைப் பொருத்தே அமையும். நீதியை நிலைநாட்டுவதில் துல்லியமான அளவைகளை நிலை நாட்டலும் தவிர்க்க முடியாததாகும்.
எனவே அளவையியல் துறையினர் அறிமுகப்படுத்தும் துல்லியமான அளவை முறை களை மொத்த மனிதர்களுமே விரும்பி ஏற்றுக்கொள்கின்ற னர். இவ்வாறு திருக்குர்ஆனின் அளவை சம்பந்தமான கட்டளையை குறைந்தபட்சம் சொந்த விருப்பத்தின் பேரிலேனும் உலக மக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
சீர் குன்றிய அளவை முறைகள் :
அளவை இயல் என்பது அளக்கும் கலையாகும். இன் றுள்ளதைப் போன்று துல்லியமான அளவைக் கருவிகளோ அல்லது அளவை முறைகளோ இல்லையென்றாலும் அளவை இயல் என்பது மனித நாகரீகத்தின் அளவிற்குப் பழமை வாய்ந்ததாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் வரை உலகின் பெரும் பகுதிகளில் இராத்தல் (Pound) எனும் நிறுத்தலளவை பரவலாகப் புழக்கத்தில் இருந்து வந்தது. இராத்தலின் பிறப்பிடம் ரோமதேசம் எனக் கூறப்படுகிறது.
பண்டைக் காலத்தில் ரோமானியப் பேரரசு உலகின் வல்லரசு களில் ஒன்றாக விளங்கியபோது அவர்களிடமிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய நிறுத்தலளவையே இராத்தல் ஆகும். இராத்தல் என்பதற்கு `லிப்ரா (Libra) எனும் சொல் ரோமாபுரியில் வழங்கப்பட்டு வந்தது. எனவே பவுண்டு (Pound) என்பதன் சுருக்கமான லிப்ரா என்பதன் சுருக்கமே (Lb) நிலை பெற்று விட்டது. லிப்ரா என்பது 7680 கோதுமை மணிகளின் எடைக்குச் சமமானதாகும்.
இதைப்போன்று தூரத்தை அளப்பதற்கு `மைல் (Mile) எனும் அளவையைப் பயன்படுத்தி வந்தோம். (நவீனப்படுத் தப்பட்ட மைல் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது) இச்சொல் இலத்தீன் மொழியின் `மில்லி பாசம் (Millee Passuum) எனும் சொற்களிலிருந்து தருவிக்கப்பட்டதாகும்.
இதன் பொருள் ஆயிரம் காலடிகளின் நடை தூரம் என்பதா கும். இந்த அளவை முறையும் ரோமானியர்களின் அளவை முறையாகும். ரோமானிய வீரரின் கால் நடையில் இரண்டு காலடிகளின் தூரம் ஒவ்வொன்றும் இரண்டரை அடிகளாகக் கருதப்பட்டு ஒரு மைல் என்பது 5000 அடிகளாக நிர்ணயிக் கப்பட்டது. (நவீனப்படுத்தப்பட்ட மைல் என்பது 5280 அடிக ளாக நிர்ணயிக்கப்பட்டு இப்போதும் உபயோகத்தில் உள்ளது.)
நேரத்தை அளத்தல் என்பது நமது மூதாதையர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. எளிதாக எடுத்துச் சொல்லக் கூடிய நேரத்தை அளக்கும் கருவிகள் அவர்களிடம் இருக்க வில்லை. அவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டும் பணியாற்றும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்ததால் நேரத்தை அறிவதற்கு நிழலை அளக்கும் முறையைக் கையாண்டு வந்தார்கள்.
கொள்ளளவை (Volume) அளப்பதற்கு பொதுவாக அறியப்பட்ட அலகுகள் ஏதும் முற்காலத்தில் இருக்கவில்லை என்பதால் ஒவ்வொரு பிரதேசத்தாரும் அவர்களுக்குச் சொந்த மான அளவை முறைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். திருக் குர்ஆன் வழங்கப்பட்ட காலத்தில் அரேபியாவில் இருந்த கொள்ளளவை அலகுகள் `முத்து மற்றும் `சாஉ ஆகியவை களாகும். `முத்து என்பது ஒருவர் தம்முடைய இரு உள்ளங் கைகளையும் குழியாக இணைத்துப் பிடித்து அள்ளி எடுக்கும் அளவும் `சாஉ என்பது அதன் மும்மடங்குமாகும்.
இதுவரை கூறப்பட்ட விபரங்களிலிருந்து பண்டைக் கால அளவைமுறை எந்த அளவுக்கு அறிவியலுக்கு அன்னிய மாக இருந்தது என்பதை விளக்கும் மிகச் சில எடுத்துக் காட்டுகளாகும். இந்த அளவைமுறைகளை வைத்துக் கொண்டு வளர்ந்து வரும் மக்களின் நவீனத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய நீதிபூர்வமுமான சமுதாய அமைப்புக் களை நடத்திச் செல்ல இயலாது என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே நவீன அளவையியல் துறையினர் இத்துறையில் மிகத் துல்லியமான அளவைக் கருவிகளையும்,அளவைமுறைகளையும் உருவாக்கித் தந்துள்ளனர்.
நவீன அளவை இயல் துறையினரின் சாதனைகள் :
இன்றைய உலகின் விஞ்ஞானிகள் ஒரு வினாடியின் பத்து இலட்சம் பாகங்களில் ஒரு பாகத்தைக்கூட துல்லிய மாகக் கணக்கிடும் அணுக் கடிகாரத்தைப் பெற்றுள்ளனர். நமது பொறியாளர்கள் அங்குலத்தின் ஐம்பதாயிரம் பாகங் களில் ஒரு பாகத்தைக்கூட அளக்கக்கூடிய நுண்ணோக்கி (Microscope) பொருத்தப்பட்ட மைக்ரோ மீட்டரைப் (Micro Meter)பயன்படுத்துகின்றனர். நாம் எழுதுவதற்குப் பயன்படுத் தும் சாதரண தாள்கள் கூட இங்கு குறிப்பிடப்பட்ட அளவை விட நூறு மடங்கு அதிகப் பருமன் கொண்டதாக இருக்கும். அவ்வளவு நுண்மையாக நமது பொறியாளர்களால் அளக்க முடிகிறது.
நிறுத்தலளவையில் நாம் `ஈக்கி ஆர்ம் தராசை (Equi – Arm Balance) பெற்றுள்ளோம். இது ஒரு அவுன்சில் (அவுன்சு என்பது ஒரு இராத்தலில் பதினாறில் ஒரு பங்காகும்) இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பாகங்களில் ஒரு பாகத்தைத் துல்லியமாக எடை போடும் திறன் பெற்றதாகும்.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நமது அளவையியல் துறையினர் நவீன உலகின் பல்வேறு அளவைத் தேவை களை நிறைவேற்ற மிகத் துல்லியமான அளவைக் கருவிகளை உருவாக்கித் தந்து நீதி சிறந்த சமுதாயத்தை மட்டுமின்றி ஆற்றல் மிக்க சமுதாயத்தையும் உருவாக்க உதவி செய்துள் ளார்கள் என அறிகிறோம். நமது ஆற்றல் என்பது நமது ஒற்றுமையில் மட்டுமின்றி மற்றொரு விதத்தில் பார்க்கும் போது நாம் பெற்றுள்ள தொழில் நுணுக்கம் மற்றும் இயந்திரங்களையும் (Technology and Machineries)சார்ந்திருக் கிறது.
தொழில் நுணுக்கத்தை உயர் தரத்திற்குக் கொண்டு செல்வதற்கும் நமது இயந்திரங்களை வலிமை மிக்கதாக மாற்றுவதற்கும் நுண்மை வாய்ந்த மற்றும் துல்லியமான அளவை முறைகள் தேவையாகும். எனவே மனித சமூகத்தை நீதி காக்கும் சமூகமாகவும், ஆற்றல் மிக்க சமூகமாகவும் நிலை நாட்டுவதற்கு அளவையியல் துறையினரின் பணி பெரிதும் உதவி செய்திருப்பதோடு திருக்குர்ஆனுடைய கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவி செய்துள்ளது.
மனிதன் தன்னுடைய அறிவையும் வளர்ந்து வரும் மனித குலத்திற்கு பயனளிக்கும் கலைகளையும் பயிலும்படி திருக்குர்ஆன் பல முறை அதன் நம்பிக்கையாளர்களைத் தூண்டுகிறது. ஆயினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதைத் தேவையான அளவிற்குப் பொருட்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையும் வருந்தத்தக்க செய்தியுமாகும்.
உயர்த்தப்பட்ட வானம்
நிறுத்தல் அளவையைச் சீராக நிலைநாட்டும்படி திருக்குர்ஆன் கூறும் செய்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறது :
“அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலை நாட்டினான். தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.
என்ன சொல்கின்றன இந்த வசனங்கள்? முதலாவதாக அல்லாஹ் வானத்தை உயர்த்தினான் எனக் கூறுகிறது. இந்த வசனம் கூறும் விஷயம் உண்மையாக இருந்தால் ஒரு காலத்தில் வானம் மிகத் தாழ்வாக இருந்தது என்பதும் பிறகு அதை உயர்த்தக்கூடிய ஆற்றலின் செயற்பாடு காரணமாக வானம் உயர்ந்துள்ளது என்பதும் உண்மையாக இருக்க வேண்டும்.
ஆனால் கல் தோன்றி, முள் தோன்றி, மனிதனும் தோன்றிய காலம் முதல் இவ்வானம் இப்படியே இருந்து வருவதாகவே மனித குலம் எண்ணிக்கொண்டு இருக்கிறது. எனவே அதற்கும் முந்திய காலத்தில் வானம் எப்படி இருந்தது என்பது யாருக்குத் தெரியும்? அதையும் கூறக்கூடிய திறமை அறிவியலுக்கே உண்டு என்பதும் அந்த அறிவியல் வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே நாம் பெற்றுள்ளோம் என்பதும் நமக்குத் தெரியும். எனவே இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் இதைக் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்புக் களில் ஒன்றாம் பெருவெடிப்புக் கோட்பாட்டை நாம் முதல் தொகுதியில் முதல் அத்தியாயத்தில் கண்டோம். அந்த அத்தி யாயத்தில் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் ஆகாயம் சின்னஞ் சிறிய உருவத்துடன் காலக்சிகள் மிக நெருக்கமாக வும் நட்சத்திரங்கள்கூட பூமிக்கு மிக நெருக்கமாகவும் இருந் தன எனக் கூறியுள்ளது. மேலும் பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலின் தொடர்ச்சியாகவே வானமும் வானகப் பொருட்களும் உயர்ந்து சென்றுள்ளன எனவும் கூறி, “வானத்தை இறைவன் உயர்த்தினான் என்று இவ்வசனத்தில் கூறப் பட்டுள்ள திருக்குர்ஆனின் அறிவியலை உண்மைப் படுத்தும் அதனுடைய பணியைச் செவ்வனே செய்துள்ளது.
எனவே திருக்குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கும் ஏராளமான அறிவியல் சான்றுகளில் ஒன்றாக இந்தச் செய்தியும் இடம் பிடித்துக் கொண்டது. இரண்டாவது செய்தியாக இவ்வசனங்களில் குறிப்பிடப் பட்டிருப்பது “(வானத்தை உயர்த்தி) தராசை நிலை நாட்டினான் என்பதாகும். உண்மையிலேயே இது ஒரு மெய்ச் சிலிர்க்கச் செய்யும் அபாரமான அறிவியல் பேருண்மையாகும்.
வானத்தில் ஒரு விந்தைத் தராசு :
திருக்குர்ஆன் வழங்கப்பெற்ற காலத்தில் வாழ்ந்த பாமர மக்களின் அறிவியல் மட்டுமின்றி அக்காலத்திலோ அதற் கடுத்த சில நூற்றாண்டுகளிலோ வாழ்ந்த உலகின் திறமை மிக்க அறிவியலாளர்களின் அறிவியல் அறிவைக்கூட அரபி யர்களோ அல்லது அதிலும் குறிப்பாக எழுதப்படிக்கத் தெரியாத இறைத்தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டுமாக!) அவர்களோ பெற்றிருந்தார்கள் என்றோ ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்.
அப்போதும் கூட இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மை யாதென்று ஒருவர் விளங்கிக்கொண்டால் திருக்குர்ஆனின் ஈடு இணையற்ற அறிவியல் அற்புதங்களின்அழுத்தம் அந்த நபருக்கு மூச்சுத் திணறலைத் தோற்றுவிக்கும். (அந்த நபருக்குத் தேவையான அறிவியல் அறிவோடு நியாயமான இறையச்சமும் தேவையாக இருக்கவேண்டும் என்பது அடிவரை இடப்பட வேண்டியதாகும்.)
அந்த மூச்சுத் திணறலை நாமும் சற்று அனுபவிக்கும் பொருட்டு வானத்தை உயர்த்தி தராசை நிறுவியதாகக் கூறும் திருக் குர்ஆன் அவ்வாறு நிறுவப்பட்ட தராசின் பயன்பாடு என்ன என்பதையும் அவ்வசனங்களில் கூறியுள்ளது. அந்த விபரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
வானத்தை உயர்த்தி தராசை நிறுவியது ஏன் என்று ஒரு வினாவை இங்கு எழுப்பினால் அதற்கு அவ்வசனத்திலிருந்து பெறப்படும் பதில் “தராசில் நீங்கள் நீதி தவறக்கூடாது என்பதற்காக என்பதாகும். இதன் பொருள், நாம் தராசில் பொருட்களை நிறுத்தும்போது நமக்கு நீதி தவறாமல் இருப்பதற்காகவே அத்தராசு நிறுவப்பட்டுள்ளது என்பதாகும்.
இதையே வேறு வார்த்தையில் கூறினால் `அத்தராசு நிறுவப் படாமல் இருந்திருந்தால் நம்மால் தராசில் நீதி தவறாமல் எடைபோட முடியாது என்பதாகும். இத்தராசை நிறுவியதன் பொருட்டு நம்மிடமிருந்து ஒன்றை இறைவன் எதிர்பார்ப்ப தாகவும் அவ்வசனங்கள் குறிப்பிடுகின்றன. நாம் நிறுப்பதில் குறைத்து விடாமல் நியாயமான நிறுத்தல் முறையை நிலை நாட்ட வேண்டுமென்பதே அந்த எதிர்பார்க்கப்படும் செயல் – ஒழுக்க நெறி – ஆகும் எனவும் அவ்வசனங்கள் குறிப்பிடுகின்றன.
சுருங்கக்கூறின், நாம் பொருட்களை நிறுத்தும்போது சரியாக நிறுத்தவேண்டும். நிறுத்தலில் நமக்குத் தவறு நேராதிருப்பதற்காக அல்லாஹ் வானத்தை உயர்த்தி ஒரு தராசை நிறுவியுள்ளான் என்பது இவ்வசனங்களின் பொருளாகும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தராசு இந்த பூலோகத்தில் எங்குள்ளது? நாம் பொருட்களை எடைபோடும் போது தவறு நேராமல் இருப்பதற்காக அந்தத் தராசில் தாம் எடை போடுகிறோமா? என்ன கூறுகின்றன இவ்வசனங்கள்? தலை சுற்றுகிறதா?!
நம்மால் உருவாக்கப்பட்ட தராசுகளிலேயே நாம் ஒவ் வொருவரும் எடைபோட்டுக் கொள்கிறோம். அவ்வாறன்றி ஆகாயத்திலிருந்து எங்கேனும் ஒரு தராசு தொங்கிக் கொண்டிருக்க உலக மக்களெல்லாம் அந்தத் தராசில் சென்று எடைபோட்டுக் கொள்வதில்லை. அப்படி இருந்தும் நாம் எடைபோட்டுக் கொள்வதெல்லாம் சரியாகவே இருக்கின்றன. இதெப்படி சாத்தியமாகிறது?
எடையும் பொருண்மையும் :
இப்போது திருக்குர்ஆன் கூறும் அறிவியலைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு `தாரசு மற்றும் எடை (Weight) என்பவற்றின் அறிவியல் விளக்கத்தை முதலாவதாகப் பார்ப்போம். தராசு என்பதை எடை காட்டும் கருவி என்றும் `எடை என்பதை பொருட்களின் பொருண்மை (Mass) என்றும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இக்கருத்துக் கள் எந்த அளவிற்குச் சரியானவை எனப் பார்ப்போம்.
நம்மிடம் ஒரு மரக்கட்டையும், ஒரு இரும்புக் கட்டியும் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சரியாக 10 கன சென்டி மீட்டர் கொள்ளளவு கொண்டது. அவை ஒவ்வொன்றையும் தராசின் எடைத் தட்டுகளில் வைத்தால் இரும்புக் கட்டி வைத்திருக்கும் தட்டு கீழிறங்கியும் மரக்கட்டை வைத்திருக் கும் தட்டு மேல் ஏறியும் நிற்கும். இது ஏன் என்று கேட்டால் இரும்புக் கட்டி அதிகம் பொருண்மை கொண்டது என பதில் கூறப்படும்.
மரத்தை விட இரும்பு அதிகப் பொருண்மை கொண்டது என்பது உண்மையாக இருந்தாலும் மற்றொரு அர்த்தத்தில் இந்த பதில் தவறானதாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் உள்ளடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வெவ்வேறானவையாகும்.
இப்போது கூறப்பட்ட விபரங்களை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாம் விண்வெளியில் ஒரு சோதனையைச் செய்து பார்ப்பதாகக் கற்பனை செய்வோம். நாம் இப்போது எடை போட்டுப் பார்த்த அதே இரும்புக் கட்டி, மரக்கட்டை மற்றும் எடை காட்டும் கருவி (தராசு) களை எடுத்துக்கொண்டு ஆயிரம் மைலுக்கு அப்பால் விண் வெளிக்குச் சென்று பூமியில் செய்து பார்த்ததைப் போன்று எந்தப் பொருள் எடை அதிகம் என எடை போட்டுப் பார்க் கிறோம். இப்போது என்ன காட்சியைக் காண்கிறோம்?
எடைத் தட்டுகளில் இரும்புக் கட்டியையும் மரக்கட்டையையும் வைத்த பின்னரும் எடைத் தட்டுக்கள் சலனமின்றி நிற்கின்றன. இப்போது நாம் இரும்புக் கட்டி வைத்திருக்கும் தட்டை மரக்கட்டை வைத்திருக்கும் தட்டை விட அதிக உயரத்திற்கு உயர்த்தினால் நாம் கைகளை எடுத்த பின்னரும் இரும்புக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் எடைத் தட்டு மரக்கட்டை வைத் திருக்கும் எடைத்தட்டை விட உயர்ந்தே நிற்கிறது! என்ன விசித்திரமான காட்சி இது?
இரும்புக் கட்டியைவிட மரக்கட்டை அதிகப் பொருண்மை உடையதா? என்ன நேர்ந்து விட்டது நமது எடை காட்டும் கருவிக்கு? இந்த விஷயத்தில் எடை காட்டும் கருவிக்கு எந்தப் பிரச்சனையும் நேரவில்லை. பிரச்னை நேர்ந்தது நமது பொதுவான ஒரு கருத்துக்கே ஆகும்! ஆம். பொருண்மையும் எடையும் ஒன்று என்ற பொதுவான கருத்து தவறாகும் என இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவதில்லை.
எனவே எடை காட்டும் கருவி காட்டுவது பொருண்மையாக இருந்தால் பூமியில் எடையைக் காட்டியதைப் போன்று விண்வெளியிலும் எடையைக் காட்ட வேண்டும். ஆனால் விண்வெளிக்கு வந்தவுடன் எடை காட்டும் கருவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதிலிருந்து எடை காட்டும் கருவி காட்டுவது பொருண்மை இல்லையென்றும்,எனவே பொருண்மையும் எடையும் வெவ்வெறானவை என்றும் இச்சோதனை தெளிவாக்கிவிட்டது. எனவே `எடை என்றால் என்ன எனும் கேள்வி இப்போதும் நீடிக்கிறது!
புதிர் போடும் எடை :
பொருண்மையும், எடையும் வெவ்வேறானவை என்பதை இனம் காட்டியதோடு மட்டுமின்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய மற்றொரு செய்தியும் இச்சோதனையி லிருந்து வெளிப்படுகிறது. பூமியில் எடை காட்ட பயன் படுத்திக் கொண்டிருந்த அதே கருவியைத் தாம் நாம் விண்வெளியிலும் எடை காட்டப் பயன்படுத்தினோம். ஆனால் விண்வெளிக்குச் சென்றதும் அக்கருவி எடை காட்ட மறுத்து விட்டது.
இந்தத் தராசை வைத்துக் கொண்டன்றோ நமது உலக விவகாரங்களை நாம் நடத்திச் செல்கிறோம். இந்தத் தராசை நம்பித்தானே நாங்கள் எடை போட்டுக் கொள்வதற்கு எங்களுக்கு வேறு எந்தத் தராசும் தேவை யில்லை எனப் பலரும் கருதி வந்தனர். ஆனால் நமது தராசுகள் யாவும் விண்வெளியில் செயல்படுவதைப் போன்றே பூமியிலும் செயல்படத் தொடங்கினால் எப்பொருளையாவது நம்மால் சரியாக எடை போட முடியுமா? முடியாது என்பதற்கு மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா?
திருக்குர்ஆனின் அறிவியல் எவ்வளவு ஆழமானது! பூமியில் எடை காட்டும் கருவி விண்ணில் எடை காட்ட மறுப்பதில் இருந்து எடை காட்டுதல் என்பது அக்கருவியின் சுயத் திறமையன்று எனவும் வேறு ஏதோ ஒரு கட்புலனாகாத அதிசயமான ஒரு சக்தி பூமியில் அதை எடை காட்டும் கருவியாகச் செயல்படச் செய்கிறது என்பதும் நாம் மேற்கண்ட ஆய்விலிருந்து தெரிந்து கொண்டோம்.
இந்தச் செய்தியை வார்த்தைக்கு வார்த்தை முன்னறிவிப்புச் செய்யும் விதத்திலேயே திருக்கர்ஆனின் வார்த்தைகளும் அமைந்துள்ளன. மனிதர்கள் வாழ்வது பூமியிலே அன்றி விண்ணில் அல்ல என்பதால் நமது எடை காட்டும் கருவியை விண்ணில் எடை காட்டச் செய்யாமல் பூமியில் எடை காட்டும்படிச் செய்து விட்டது! இந்த விபரத்தைக்கூட திருக்குர்ஆன் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கும்“தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக எனும் வார்த்தை அமைப்புக்களில் வெளிப்படுகிற இறைஞானத்தைக் காண்கிறோமல்லவா!
நாம் (மனிதர்களாகிய நாம்) நீதி தவறாமல் எடை போட வேண்டுமென்பதற்காகவே தராசு நிலைநாட்டப்பட்டது எனில் நாம் வாழும் பூமியில் நமக்குத் தவறு நேர்ந்து விடாமல் எடைபோட இயலும் விதத்தில் அத்தராசு நிலைநாட்டப் பட்டிருந்தால் போதுமானதன்றோ!
எடையின் வரைவிலக்கணம் :
நாம் இப்போது, எடை என்பது எதைக் குறிக்கிறது என்றும் எடைக்கும் பொருண்மைக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன என்பதையும் பார்ப்போம். எடை என்பதின் அறிவியல் வரைவிலக்கணம் “ஈர்ப்பாற்றலின் இழுவிசை (Weight is the pull of Gravitation) எனக் கூறலாம். எனவே ஒரு பொருளின் எடை என்பது அப்பொருள் இருக்கும் இடத்தைச் சார்ந்ததாகும். அதே நேரத்தில் பொருண்மை என்பது “பொருட்களின் நகர்வுக்கு எதிரான தடை (Mass is the resistance against to motion on a given quantity of matter) எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பொருண்மை என்பது அப்பொருள் இருக்கும் இடத்தைச் சார்ந்து வேறுபடுவதில்லை.
மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடைபோடும்போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். அதே பொருளை நாம் நிலவில் எடை போடும்போது அப்பொருளின்மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது அதன் பொருளாகும். சான்றாக, நமது மரக்கட்டையை பூமியில் நாம் ஒரு வில் தராசில் எடை போடுகிறோம் எனக் கொள்வோம்.
அதன் எடை 600 கிராம்கள் எனக் காண்போம். அதே தராசில் அதே மரக்கட்டையை நிலவில் எடை போட்டுப் பார்த்தால் 100கிராம் எடையைத் தாம் காட்டும். ஏனெனில் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும். இவ்வாறே வெவ்வேறு கோள்களுக்குச் சென்று ஒரு பொருளை எடை போட்டுப் பார்த்தால் அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பு விசை அப்பொருட்களின் மீது எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பதையே காட்டும் என்பதால்,ஒவ்வொரு கோளிலும் அப்பொருளின் எடை வேறுபட்டுக்கொண்டே இருக்கும். ஆயினும் அப்பொருளின் பொருண்மையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.
இதுவரை நாம் கண்ட அறிவியல் தகவல்களிலிருந்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெறுகிறோம். நாம் பயன் படுத்தும் தராசுகளை எடை காட்டும் (எடையை அளக்கும்) கருவியாகப் பயன்படச் செய்வது ஈர்ப்பு ஆற்றலே என்பதால் ஈர்ப்பாற்றலின் செயற்பாடே தராசின் செயற்பாடாகும் என்பதே அந்த விளக்கமாகும். இதிலிருந்து எங்கு ஈர்ப்பாற்றலின் செயற்பாடு இல்லையோ அங்கு தராசின் செயற்பாடும் இல்லை. எனவே “வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது என்பதன் பொருள் “வானம் உயர்த்தப்பட்டு ஈர்ப்பாற்றல் நிறுவப்பட்டது என்பதாகும் எனப் புரிந்து கொள்வதில் இப்போது எவ்விதச் சிக்கலும் இல்லையல்லவா!
இம்மாமறைக் குர்ஆனின் இறைஞானம் ஈடு, இணை அற்றதே!