08) படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
09) படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏக இறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள்
உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்; எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!
வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்? என்று (முஹம்மதே!) கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக! அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்று கூறுவீராக! குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா?இருள்களும், ஒளியும் சமமாகுமா? என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன் என்று கூறுவீராக!
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்துடன் படைத்தான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்து, புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்; தேர்வு செய்வான். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழி கேட்டில் உள்ளனர்.
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.
அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகின்றீர்கள்?
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (முஹம்மதே!) கேட்பீராக!
காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்?நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.
நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும்,உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.
நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!
பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.
நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;
நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
21:70 وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَۚ 21:71 وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ
நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும்,பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).
26:65 وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَۚ 26:66 ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَؕ
உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.