09) திருட்டு தண்டனையிலிருந்து விதி விலக்கு கேட்ட போது
திருட்டு தண்டனையிலிருந்து விதி விலக்கு கேட்ட போது
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது, (“மக்ஸூமி” எனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், “அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?” என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?” என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, “அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்” என்றார்கள்.
அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்” என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.