09) உண்மையை உரைத்த ஒப்பற்ற தோழர்கள்
உண்மையை உரைத்த ஒப்பற்ற தோழர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வார்த்தெடுத்த அருமைத் தோழர்கள் நம்மை போன்று வாயில் வடை சுடுபவர்களோ வாய்ச்சவடால் விடுபவர்களோ இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சமயம் உண்மையை பேசியும் காட்டியுள்ளார்கள். தாங்கள் செய்த பெரும் பெரும் தவறுகளையும் தயங்காமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
இதை ஒப்புக் கொண்டால் நம்மை மற்றவர்கள் கேவலமாக பார்ப்பார்களே என்று இவ்வுலகை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் நாளை மறுமையில் நம்மை படைத்த இறைவன் நம்மை கேவலமாக பார்த்து விடக்கூடாது என்பதிலேயே குறியாய் இருந்துள்ளார்கள். இதோ பின்வரும் சம்பவங்களை பாருங்கள். சிறிதும் தயக்கமின்றி இக்கருத்தினை ஏற்றுக்கொள்வீர்கள்.
மாஇஸ் பின் மாலிக் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்து விட்டதாக வாக்குமூலம் அளித்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம் அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம் அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்! என்று சொன்னார்கள் அவர் (அவ்வாறெல்லாம்) இல்லை: அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் அவளுடன் உடலுறவு நீர் கொண்டீரா என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர் ஆம் என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிட்டவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்களை நான் பார்த்தேன். அவர் உயரம் குறைந்த மனிதராகவும் கட்டுடல் கொண்டவராகவும் இருந்தார். அவரது உடலில் மேல்துண்டு இருக்கவில்லை. அவர் தாம் விபசாரம் செய்துவிட்டதாகத் தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இப்படிச் செய்திருக்கலாம் முத்தமிட்டிருக்கலாம் அணைத்திருக்கலாம்) என்று கூறினார்கள் மாஇஸ் (ரலி அவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக இந்த அற்பன் விபச்சாரம் செய்துவிட்டேன் என்று கூறினார் ஆகவே அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி)
பிறகு அஸ்த் குலத்தின் ஒரு கிளையான ஃகாமித் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே ! என்னைத் தூய்மைப்படுத்துங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண் மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார். நபி (ஸல்)அவர்கள் என்ன அது? என்று கேட்டார்கள். அப்பெண் நான் விபசாரத்தால் கர்ப்பமுற்றவள் என்றார் நபி (ஸல்) அவர்கள் நீயா (அது என்று கேட்டார்கள் அப்பெண் ஆம் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு: பிறகு வா) என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது அல்லாஹ்வின் தூதரே! என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்
அறிவிப்பவர் : புரைதா பின் அல்ஹசீப் (ரலி)
இந்த ஹதீஸ்கள் நம்முடைய இறையச்சத்தை உரசிப்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளதை காணலாம். நம்மில் பலரும் உண்மை பேசுவோம் தான். ஆனால் இந்த இடத்தில் உண்மையை சொன்னால் நாம் கேவலப்படுவோம் என்ற நிலை ஏற்படும் போது யாராக இருந்தாலும் உண்மையை சொல்ல சற்றே தயங்குவோம். என்ன பொய்யை சொல்லி இதிலிருந்து தப்பிக்கலாம். அல்லது பழியை வேறு யாரின் மீதாவது போட்டுவிடலாமா? என்று தப்பெண்ணம் கொள்பவர்களும் நம்மில் உண்டு.
இக்காலகட்டத்தில் கல்லெறி தண்டனையெல்லாம் இல்லை என்றாலும் இது தான் நம்முடைய நிலை. ஆனால் மேற்கூறப்பட்ட இருவரின் நிலையையும் எண்ணிப்பாருங்கள். இந்த அருமை ஸஹாபாக்களைப் போல நாமும் எந்நேரமும் உண்மையை மட்டும் பேசுவோம் என்று சூழுரைப்பதோடு நடைமுறையில் கொண்டு வர வேண்டும்.