09) அல்லாஹ் அல்லாதவர்களின் பலவீனங்கள்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

அல்லாஹ் அல்லாதவர்களின் பலவீனங்கள்

செவியுற மாட்டார்கள்

இறந்துவிட்ட நல்லடியார்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்ற எண்ணத்தில் பலர் அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வேண்டுவதை கேட்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு இல்லை. இவர்களின் தேவைகளை நிறைவேற்றும் சக்தியும் இறந்தவர்களுக்கு இல்லை.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:14)

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:198)

கியாமத் நாள் வரை தமக்குப் பதில்தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்: 46:5)

பதில் தரமாட்டார்கள்

உயிருள்ளவனைப் பிறர் அழைக்கும் போது அந்த அழைப்பிற்கு அவனால் பதிலளிக்க முடியும். இறந்து போன பிறகு உயிருடன் இருக்கும் போது செய்த காரியங்களைக் கூட இறந்தவர்களால் செய்ய இயலாது. எனவேதான் கப்ர் வழிபாட்டுக்காரர்கள் எப்படி பிரார்த்தித்தாலும் அவர்களின் பிரார்த்தனைக்கு இறந்தவர்களிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்: 46:5)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்: 7:194)

மனிதர்கள் செய்வதை கூட செய்ய முடியாது

உயிரோடு இருக்கும் போது இருந்த ஆற்றலை விட இறந்த பிறகு மகான்களுக்கு பன்மடங்கு ஆற்றல் கூடுகிறது என்று கப்ரு வழிபாட்டுக்காரர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வால் மட்டுமே செய்வதற்கு சாத்தியமான விசயங்களை இறந்தவர்கள் செய்வார்கள் என்ற மூடத்தனத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

அல்லாஹ் செய்யக்கூடிய பெரிய பெரிய காரியங்களை இறந்து போன இவர்கள் செய்ய வேண்டாம். உயிருள்ள உயிரினம் செய்யக் கூடிய காரியத்தையாவது இவர்களால் செய்ய முடியுமா? ஆடுகளும் மாடுகளும் நடக்கிறது. கத்துகிறது. மனிதன் பேசுகிறான். பொருட்களை கையால் பிடிக்கிறான். இது போன்று இறந்தவர்களால் எழுந்து வந்து நடந்து காட்ட முடியுமா?

பொருட்களை பிடித்துக் காட்ட முடியுமா? கால்நடை செய்யக்கூடிய காரியங்களையே இவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அல்லாஹ்வால் மட்டும் செய்வதற்கு சாத்தியமான விசயங்களை இவர்களால் எப்படிச் செய்ய முடியும்? இப்படி அல்லாஹ் திருக்குர்ஆனில் கேட்கிறான்.

அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:195)

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்பதையும் அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

(அல்குர்ஆன்: 7:148)

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

(அல்குர்ஆன்: 7:193)

உதவி செய்ய முடியாது

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன்: 7:197)

இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 7:192)

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்: 29:41)

நன்மையோ தீமையோ செய்ய இயலாது

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 10:106)

அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழி கேடாகும்.

(அல்குர்ஆன்: 22:12)

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.

(அல்குர்ஆன்: 21:66)

உணவளிக்க முடியாது

வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்குகின்றனர்.

(அல்குர்ஆன்: 16:73)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப்பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன்: 35:3)

அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

(அல்குர்ஆன்: 67:21)

செல்வத்தை அளிக்க முடியாது

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்!அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன்: 29:17)

அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். அல்குர்ஆன் (51 : 58) அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்கினால் பூமியில் வரம்பு மீறுகின்றனர். எனினும் தான் நாடியதை அளவோடு அவன் இறக்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 42:27)

படைக்க இயலாது

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கிற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 35:40)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன்: 16:20)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப் படுகின்றனர்.

(அல்குர்ஆன்: 7:191)

குழந்தை பாக்கியத்தைத் தர முடியாது

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான்.தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான்.தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 42:49)