07) நிறைவான மார்க்க அறிவு
07) நிறைவான மார்க்க அறிவு
பொதுவாக வயதானவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஆர்வம் இருந்தாலும் வயது முதிர்வின் காரணத்தினால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடியாது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் பொது விஷயங்களை அறிந்ததுடன் மார்க்க அறிவையும் நிறையப் பெற்றிருந்தார்கள். எனவே தான் மக்கா வெற்றிக்குப் பிறகு முதன் முதலில் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட கூட்டத்திற்கு இவர்களை நபி (ஸல்) அவர்கள் தலைவராக நியமித்தார்கள்.
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் நிர்வாணமாக எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக் கூடாது என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட தோழமையைப் அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தமையால் மற்றவர்களுக்குத் தெரியாத பல ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் தோழர்கள் (நபியவர்களின் மரணத்தில்) சந்தேகப்பட முனையும் அளவிற்கு கவலையுற்றார்கள். நானும் அவர்களில் ஒருவன். உயரமான ஒரு கட்டடத்தின் நிழலில் நான் அமர்ந்திருந்த போது உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்கள் எனக்கு சலாம் கூறினார்கள். ஆனால் அவர்கள் என்னைக் கடந்து சென்றதையோ எனக்கு சலாம் கூறியதையோ நான் உணரவில்லை. உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நான் உஸ்மானைக் கடந்து சென்ற போது சலாம் கூறினேன். ஆனால் அவர் எனக்கு பதிலுறைக்கவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாய் இல்லையா? என்று கேட்டார்கள்.
பின்பு அவரும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடத்தில் வந்து சலாம் கூறிவிட்டு எனது சகோதரர் உமர் உம்மிடம் வந்து உமக்கு சலாம் கூறியதாகச் சொல்கிறார். ஆனால் நீங்கள் அவருக்கு பதிலுறைக்கவில்லையாம். ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அப்படித் தான் செய்தீர்கள், பனூ உமய்யா கோத்திரத்தாரே உங்களின் குலப் பெருமை தான் (இவ்வாறு உங்களை செய்ய வைத்தது) என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் என்னைக் கடந்து சென்றதையும் எனக்கு சலாம் கூறியதையும் நான் உணரவில்லை என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் (குறிக்கிட்டு) உஸ்மான் உண்மை சொல்கிறார்.
ஏதோ ஒரு விஷயம் உம் கவனத்தை மாற்றி விட்டது என்று கூறினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அது வென்ன? என்று அபூபக்ர் கேட்டார். நாம் வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்பதற்கு முன்பே அல்லாஹ் தனது நபியை கைப்பற்றிக் கொண்டான் என்று நான் கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நான் அவர்களிடத்தில் (முன்பே) கேட்டு விட்டேன் என்று கூறினார்.
எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் தான் அந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்று நான் கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதரே நாம் எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் நான் எந்த வார்த்தையை எனது சிறிய தந்தையிடம் எடுத்துக் கூறி அவர் நிராகரித்தாரோ அந்த வார்த்தையை எவர் என்னிடமிருந்து ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அந்த வார்த்தை வெற்றியாக இருக்கும் என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் சலாமிற்குப் பதில் கூறவில்லை என்ற குற்றச்சாட்டை உமர் (ரலி) அவர்கள் கொண்டு வந்த போது அதை உதாசீனப்படுத்தி விடாமல் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நியாயம் கேட்கிறார்கள். தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் வீர உணர்வை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குலப் பெருமையினால் தான் உஸ்மான் சலாம் கூறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் குற்றம்சாட்டும் போது உஸ்மான் (ரலி) அவர்களின் மீது நல்லெண்ணம் வைத்து இருவருக்கும் மத்தியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் இணக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். சிறிய சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி இருவருக்கிடையே சண்டையை மூட்டுபவர்கள் இந்த நிகழ்விலிருந்து பாடம்பெற கடமைப்பட்டிருக்கிறார்கள்.
குர்ஆன் வசனத்தை மக்கள் தவறான முறையில் விளங்கி விடாமல் இருப்பதற்காக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி மக்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தும் சீறிய சிந்தனை கொண்டவராகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (5 : 105) (இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்றைக்கு நல்லதை மட்டும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் நிலவும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் நழுவிச் செல்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைக்க வேண்டும். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை உண்மையில் நேசிக்கக்கூடியவராக இருந்தால் அவர்கள் கூறிய இந்த உபதேசத்தை ஏற்றுச் செயல்பட வேண்டும்.