06) பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா?
06) பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா?
பொருளாதாரத்தைத் திரட்டுவதில் எந்த நெறிமுறையையும் பேணவேண்டியதில்லை என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கியுள்ளதாகவும் நல்லவர்களுக்கு ஒரு இன்பத்தையும் வழங்கவில்லை என்றும் நம்புவதுதான். இறைவன் அளித்துள்ள நற்பேறுகள் கோடாணு கோடிகள் உள்ளன. ஆனால் பொருளாதாரம் மட்டுமே பாக்கியம் என்று கருதுவதால்தான் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது.
ஒருவனுக்குப் பல்லாயிரம் கோடி பண வசதி இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையைக் கவனித்தால் நூறு சதவிகிதம் நிறைவாக இருக்காது. எத்தனையோ பணக்காரர்கள் தம்மிடம் உள்ள பணத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதைக் காண்கிறோம்.
உயர்தரமான உணவை அவர்கள் சாப்பிட முடியாத அளவுக்குப் பல நோய்கள் அவர்களுக்கு இருக்கும். முக்கியமான பல உறுப்புக்கள் செயல்படாத நிலைக்குச் சென்று விடும். அவரது முழுச் சொத்தையும் செலவிட்டாலும் அதைச் சரி செய்ய முடியாது.
ஆனால் ஒரு ஏழை எதையும் சாப்பிட முடியும். அவனது உடல் உறுப்புக்கள் அனைத்தும் சீராக இருக்கும். மருத்துவத்துக்காக பெரிய அளவில் செலவு செய்யும் நிலை இருக்காது. செல்வந்தரின் நிலையை விட நமது நிலை இந்த வகையில் மேலானது என்று அவன் சிந்தித்தால் அவனுக்கு எந்தத் தடுமாற்றமும் ஏற்படாது.
உலகில் எந்த மனிதனுக்கும் நூறு சதவிகித பாக்கியங்கள் வழங்கப்படவில்லை. குறைகளும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன. சிலருக்குப் பணத்தில் குறை இருந்தால் மற்றும் சிலருக்கு ஆரோக்கியத்தில் குறை இருக்கும். மனநிம்மதியில் குறை இருக்கும். குழந்தையின்மை என்ற குறை வேறு சிலருக்கு இருக்கும். மனைவி மக்களால் ஏற்படும் அவப்பெயர்கள் இன்னும் சிலருக்கு உள்ள குறையாக இருக்கும்.
சிந்தித்துப் பார்த்தால் செல்வத்தை விட பெரும் பாக்கியங்கள் உலகில் இருப்பதையும், எத்தனையோ செல்வந்தர்களுக்குக் கொடுக்காத அந்த பாக்கியங்களை அல்லாஹ் தனக்கு வழங்கியுள்ளான் என்பதையும் ஒருவன் அறிந்து கொள்ள முடியும்.
கோடிகளுக்கு அதிபதிகள் பலரை நாம் பார்க்கிறோம். விரும்பிய அனைத்தையும் அனுபவிக்கும் அளவுக்கு அவர்களிடம் செல்வம் குவிந்து கிடக்கும். ஆனால் அவர்கள் இனிப்பு, இறைச்சி, மற்றும் கொழுப்புச் சத்துள்ள பல உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
ஆனால் அவர்கள் வீட்டில் அற்ப ஊதியத்திற்காகப் பணி செய்யும் ஊழியர்கள் விரும்பிய உணவை எல்லாம் சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருப்பதைக் காண்கிறோம். இது பணத்தை விட மாபெரும் பாக்கியம் அல்லவா? எந்த மனிதனுக்கும் அனைத்து பாக்கியங்களும் வழங்கப்படவே இல்லை.
அல்லாஹ் சிலருக்குப் பணத்தை வழங்கி ஆரோக்கியத்தைக் குறைத்து விடுகிறான். ஆரோக்கியத்தைக் குறைவில்லாமல் கொடுத்து குழந்தைப் பேறு இல்லாமல் ஆக்கி விடுகிறான். குழந்தைப் பேறைக் கொடுத்து வேறு ஏதேனும் சில குறைகளை அமைத்து விடுகிறான்.
இறைவன் எத்தனையோ குறைகளை நமக்குத் தராமல் வறுமை என்ற குறையைத் தந்துள்ளான் என்று புரிந்து கொண்டால் வறுமை ஒரு பிரச்சனையே அல்ல என்ற மன நிம்மதி நமக்குக் கிடைக்கும். மனிதனின் இந்த மனநிலையை அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறான்.
89:15 فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ
89:16 وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِۚ
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.
இந்த வாழ்க்கைப் பாடத்தைப் படித்துக் கொண்டால் நல்லவர்களாக வாழ்ந்து நாம் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறோம் என்று ஒருவன் எண்ண மாட்டான். நமக்குப் பணக் கஷ்டம் இருப்பது போல் மற்றவர்களுக்கு வேறு விதமான கஷ்டங்கள் உள்ளன என்று வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளும்போது நல்லவனாக வாழ்வதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வான்.
பட்ட கஷ்டங்கள் வீணாவதில்லை
நமக்கு அதிகமான கஷ்டத்தை அல்லாஹ் கொடுக்கும் போது அதைச் சகித்துக் கொண்டால் நாம் பட்ட கஷ்டங்களுக்கான பலனை மறுமையில் குறைவின்றி அல்லாஹ் வழங்குவான். நல்லவனாக வாழ்வதால் நமக்கு இழப்பு ஏதும் இல்லை; மறுமையில் நமக்கு மாபெரும் பரிசுகள் காத்துக் கிடக்கின்றன என்று நம்பும்போது நல்லவனாக வாழ்வதற்கான உறுதி அதிகரிக்கும்.
இந்த உலகில் நல்லவனாக வாழும்போது சிரமங்கள் ஏற்பட்டால் நல்லவனாக வாழ்ந்ததற்கான பரிசை இன்னொரு உலகத்தில் நாம் பெறப் போகிறோம். இவ்வுலகத்தில் சொகுசாக வாழ்வதற்காக நெறிமுறைகளை மீறினால் அதற்கான தண்டனையை நாம் இன்னொரு உலகத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை நம்மைத் தடம் புரளாமல் காப்பாற்றும்.
இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான அறிவுரைகளைக் கூறியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.
صحيح البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன்.
அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள்.
இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போல் துன்பங்களைச் சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு இந்த நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரண்டை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.
இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண்ணிருப்பதால்தான் அதிகம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம்; அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானவையாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் கண்கள்தான்.
இவ்வளவு பெரிய பாக்கியம் மற்றவர்களுக்கு இருப்பது போல் நமக்கு இல்லாமல் போய் விட்டால் நாம் அடையும் துன்பம் கொஞ்சமல்ல. கண்களை இழந்து விட்டாலும் அதனைச் சகித்துக் கொண்டு ஒழுங்காக வாழ்ந்தால் அதற்காக இறைவன் சொர்க்கத்தைத் தருகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை.
அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
இவ்வுலகில் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இறைவனிடம் பரிசு உண்டு என்று நம்பும்போது பொருளீட்டுவதற்காக நாம் மார்க்க நெறிமுறைகளை மீற மாட்டோம். மேலும் நம்மைவிடப் பன்மடங்கு சிறந்தவர்களான இறைத்தூதர்கள்கூட பலவித இன்னல்களை அனுபவித்தனர். மறுமையின் மாபெரும் பரிசை எதிர்பார்த்ததால் அந்தத் துன்பங்கள் அவர்களை நிலைகுலையச் செய்யவில்லை.
சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் சோதிக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்த்தால் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை நமக்கு அதிகரிக்கும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள்.
நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.
எனவே நாம் நல்லவர்களாக வாழ்வதால் இவ்வுலகில் எதையும் இழப்பதில்லை. மறுமையில் நாம் இதற்கான கூலியைப் பெறவிருக்கிறோம் என்பதை நினைவு கூர்வதன் மூலம் தவறான முறையில் பொருளீட்டுவதை விட்டு விலகிக் கொள்ள முடியும்.