06) நரகிலிருந்து தப்பிக்க

நூல்கள்: நாவை பேணுவோம்

நரகிலிருந்து தப்பிக்க

இஸ்லாமியர்கள் அனைவர்களும் சொர்க்கத்தில் நுழைவதையும் நரகிலிருந்து தப்பிப்பதையுமே குறியாக லட்சியமாக கொண்டுள்ளனர். ஒவ்வொருவர்களும் அவரவர்களுக்கு இயன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் இந்த லட்சியத்தை நிறைவேற்றிட முயல்கின்றனர். பலவழிகளின் மூலமும் நரகிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அதில் நல்ல சொல்லை சொல்வதின் மூலம் கூட நம்மை நரகிலிருந்து காப்பாற்றி அந்த பேரிடரிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று நபிகளார் சொல்லித் தருகின்றார்கள்

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று தமது முகத்தைத் திருப்பிக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன் சொல்லைக்கொண்டேனும் (தப்பித்துக் கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அதி பின் ஹாத்திம் (ரலி)

(புகாரி: 6563)

நாம் சொல்லும் எந்த வார்த்தையையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. ஏதேனும் சந்தர்ப்பத்தில் நம்மையறியாமலேயே ஒரு இன்சொல்லை உதிர்த்தியிருப்போம். இது ஏதோ தீவிர யோசனைக்குப்பின் வெளிப்பட்ட வார்த்தையாக இருக்காது நம்மையும் அறியாமல் வெளிவந்த வார்த்தையாக இருக்கும்.

இந்த வார்த்தையின் மூலம் கூட நம்மை நரகிலிருந்து இறைவன் காப்பாற்றக்கூடும் என்ற நற்செய்தியை இறைத்தூதர் தெரிவிக்கின்றார்கள் நாம் பேசவிருக்கும் பேச்சை ஆழ்ந்து யோசித்து தீய சொற்களை முற்றிலுமாக தவிர்த்து நல்சொற்களையே பேசுவோம் என்றால் அவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் நம்மை நரகிலிருந்து காப்பாற்றும் தானே. நரகிலிருந்து தப்பிக்க நல்ல சொல் ஓர் வலுவான ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள்.