06) சூரியன், சந்திரன் கடவுளாக முடியுமா?

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

சூரியன், சந்திரன் கடவுளாக முடியுமா?

மக்களில் ஒரு சாரார் சூரியன், சந்திரனை கடவுளாக வழிபடுகின்றனர். அவை கடவுளாக இருக்க முடியுமா? இதோ திருக்குர்ஆன் அதுபற்றிக் குறிப்பிடுகின்றது.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ” இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்தபோது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன் என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்” என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்” என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது” என்றார். அது மறைந்தபோது என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்” எனக் கூறினார்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்”

(அல்குர்ஆன்: 6:76-79) 

வானில் நீந்துகின்ற பிரம்மாண்டமான சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற எந்த ஒரு கோளும் கடவுளாக முடியாது. காரணம் அவை மறையக்கூடியவை. எனவே கடவுள்களாக இருக்க முடியாது என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. அதனால் பிரம்மாண்டமான சூரியனைப் படைத்த அந்த ஒரு பிரம்மாண்டமான கடவுளையே வணங்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

(அல்குர்ஆன்: 41:37) 

இது போன்று பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் இவற்றிற்கு சில குறிப்பிட்ட பணிகளைத் தவிர வேறு எந்த ஆற்றலும் இல்லை. மரம், செடி கொடிகளுக்கும் எந்த ஆற்றலும் இல்லை. அவையும் கடவுளாக ஆக முடியாது.