06) இறைவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவைகள்
இறைவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவைகள்
காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
அழிவுகளிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் காக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது.
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக!
அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன்.
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
பாக்கியங்களை வழங்குதல்
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அல்லாஹ்வே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான். இதை அறியாத காரணத்தினால் தர்ஹாக்களுக்குச் சென்று இறந்து விட்ட மனிதரிடத்தில் தங்கள் தேவைகைள வேண்டி இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ண முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப்பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும் போது அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வசகானா வகஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய என்று கூறுவார்கள்.
பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால், போதுமாக்கி வைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தல்
அல்லாஹ்வின் அதிகாரம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தர்ஹாக்களையும், கோயில்களையும் கிரித்தவ ஆலயங்களையும் நோக்கிச் சென்று சக்தியற்ற மனிதர்களிடம் இந்த பாக்கியத்தை வேண்டுகிறார்கள். திருமணத்தில் வாழைக் குலையைத் தொங்க விட்டால் குழந்தைச் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள். இதுவெல்லாம் இணைவைப்பாகும். ஏனென்றால் குழந்தையைத் தரும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது.
لِّـلَّـهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ
اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًاؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான்.தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான்.தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்லாஹ்விடம் மட்டுமே குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்
குழந்தை பாக்கியத்தைக் கொடுக்காமல் இறைத் தூதர்களை அல்லாஹ் கடுமையாகச் சோதித்தான். ஆனால் அவர்கள் எந்த நிலையிலும் இறைவனை விட்டு விட்டு மற்றவர்களிடத்தில் சென்று குழந்தை பாக்கியத்தைத் தருமாறு பிரார்த்தித்து இணைவைப்பில் விழுந்துவிடவில்லை. மாறாக இறுதிவரை அவன் ஒருவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
இறைவனிடம் பல வருடங்களாகப் பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. தொடர்ந்து வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து விடுவான். ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை.
எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! என்று (ஸக்கரிய்யா) கூறினார்.
இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தம் இறைவனிடம் ஸக்கரிய்யா வேண்டினார்.
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக! என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.
வறுமையை நீக்குதல்
வறுமை நீங்கி செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காக மனிதன் எத்தனையோ மூட நம்பிக்கைகளிலும் இணைவைப்புக் காரியங்களிலும் விழுகிறான். ஆனால் வறுமையை நீக்கும் சக்தி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை இவர்கள் விளங்கியிருந்தால் ஒரு போதும் மற்றவர்களை நாடிச் செல்லவே மாட்டார்கள்.
வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.
உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
மழையை வரவழைத்தல்
மழை பொழிய வேண்டும் என்பதற்கு எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்களையும் இணைவைப்புக்காரியங்களை மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மழையைக் கொடுக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் இருப்பதால் மழையை அவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு காரியங்களில் ஈடுபடக் கூடாது.
உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக!
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
துன்பத்தை நீக்குதல்
அல்லாஹ்வின் ஆற்றல் துன்பங்கள் வரும் போது முஹ்யித்தீனே, அப்துல்காதர் ஜீய்லானியே என்று அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது இணைவைப்பாகும். ஏனென்றால் துன்பத்தை நீக்குவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குள் உட்பட்டதாகும்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக!
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
நோயை குணப்படுத்துதல் அல்லாஹ்வின் அதிகாரம்
நோயை நீக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டும் உரியது. அல்லாஹ்வைத் தவிர்த்து அவன் குணப்படுத்துவது போல் மற்றவரோ, மற்ற பொருளோ நோயை நீக்கும் சக்தி கொண்டது என்று நம்பினால் அது இணைவைப்பாகிவிடும்.
எந்த ஊருக்கு நபியை நாம் அனுப்பினாலும் அவ்வூரார் பணிய வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையினாலும், நோயினாலும் நாம் பிடிக்காமல் இருந்ததில்லை.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான் (என்று இப்ராஹீம் கூறினார்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால் அல்லது நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால் அவர்கள், அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வஅன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)