06) ஆண்மகனுக்கு அழகல்ல

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

ஆண்மகனுக்கு அழகல்ல

அல்லாஹ் இயற்கையாகவே பெண்களை விட ஆண்களை உடல் வலிமையுள்ளவர்களாக ஆக்கியுள்ளான். வெளியில் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதற்கு ஏற்ற உடல் அமைப்பை ஆண்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான்.

எனவே ஆண் பலவீனமான படைப்பான பெண்ணுக்கு கொடுத்து திருமணம் முடித்தால் தான் அவன் உண்மையான ஆண்மகன். ஆண் பொருளாதாரத்தை பெண்ணுக்கு வழங்குகிறான் என்ற காரணத்துக்காகவே அல்லாஹ் பெண்ணை விட ஆணுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளான்.

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.

(அல்குர்ஆன்: 4:34)

அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் ஆண்களுக்கு குறிப்பிடும் சிறப்பை வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைகள் இழந்துவிடுகிறார்கள். பெண்ணிடம் வாங்குவதால் இவன் பெண்ணை விட தாழ்ந்துவிடுகிறான். குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியையும் இழந்துவிடுகிறான். இவன் உடலளவில் மட்டும் ஆணாக இருப்பதால் இவன் முழுமையான ஆண்மகன் அல்ல.

எனவே தான் நபி (ஸல்) அவர்கள் திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கொடுப்பதை கட்டாயமாக ஆக்கினார்கள். மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள். இதை பின்வரும் சம்பவத்தில் அறியலாம்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ
أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ»، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: «أَعْطِهَا ثَوْبًا»، قَالَ: لاَ أَجِدُ، قَالَ: «أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ»، فَاعْتَلَّ لَهُ، فَقَالَ: «مَا مَعَكَ مِنَ القُرْآنِ؟» قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: «فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை’ என்று கூறினார்கள்.

அப்போது அங்கிருந்த ஒருவர் ‘இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (‘மஹ்ர்’ எனும் விவாகக் கொடையாக)க் கொடு!’ என்று (அந்த மனிதரிடம்) கூறினார்கள். அவர், ‘என்னிடம் இல்லை’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே’ என்று கூறினார்கள்.

இதைக்கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன ( மனனமாக) இருக்கிறது?’ என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் இருக்கும் (குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :  ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)

(புகாரி: 5029)

மஹர் ஏன் கொடுக்க வேண்டும்?

திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும். ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான். இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும். பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது. 

பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள். எனவே தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌  ؕ فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன்: 4:04)

எவ்வளவு கொடுத்தாலும் தகும்

குடும்ப வாழ்க்கையில் பெண்கள் மிகப்பெரிய சிரமங்களை அனுபவித்து பல தியாகங்களை செய்கின்றனர். எனவே ஆண் பெண்ணுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கொடுக்கலாம். மணப்பெண் மாப்பிள்ளையிடம் எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்கலாம். குவியல் போன்று பெரும் செல்வத்தை மஹராக கொடுத்தாலும் அது தகும் என்று பின்வரும் வசனத்தல் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். 

وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

(அல்குர்ஆன்: 4:20)

நபி மூசா (அலை) அவர்கள் பிறருக்கு தொண்டு செய்வதில் அக்கரை உள்ள நல்ல வாலிபராக இருந்தார்கள். அவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது அந்த பெண்ணுடைய தந்தை மூசா தன்னிடம் 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். விரும்பினால் பத்து வருடம் கூட வேலை செய்யலாம் என்று இதை மஹராக மூசா நபியிடம் கேட்டார். மூசா (அலை) அவர்களும் இதை ஏற்று நீண்ட காலம் வேலை செய்து தனது மஹரை நிறைவேற்றினார்கள்.

قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏

“”எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூ- வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 28:27)

எனவே ஆண் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தாலும் அதை இஸ்லாம் வரவேற்கின்றது. இதை ஆர்வமூட்டுகின்றது. பெண்ணுக்கு தராளமாக கொடுக்க வேண்டும் என்று சொன்ன மார்க்கத்தில் இருந்துகொண்டு பெண்ணிடமிருந்து ஏராளமாக வாங்குவது எவ்வளவு பெரிய பாவம்? என்பதை சமுதாயம் உணர வேண்டும்.

நம் நாட்டில் சில சுன்னத் ஜமாத் ஆலிம்கள் லட்சக்கணக்கில் வரதட்சணை வாங்கும் திருமணங்களுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர். இந்தத் திருமணங்களில் மாப்பிள்ளையிடமிருந்து பெண்ணுக்கு இவர்கள் வாங்கிக் கொடுக்கும் மஹர் தொகையோ வெறும் 101 ரூபாய். பாவப்பட்ட பெண் இனத்தை வேண்டுமானால் இப்படி இவர்கள் ஏமாற்ற முடியும். வல்ல ரஹ்மானை இவர்களால் ஏமாற்ற முடியாது. இதற்கு கட்டாயம் அவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.