05) ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
06) ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம் என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். (அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்? என்று கேட்பீராக! மாறாக நீங்கள்,அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.
சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக! பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.
அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா? …
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். (உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்;மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.
வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.
பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.
அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள் என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும்,பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம்.
நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன் என்றும் கூறுவீராக!
அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.
என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்றார்.
அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான் என்று கூறுவீராக!
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!