05) கர்த்தரைத் தேடாத சமுதாயம் எது?
05) கர்த்தரைத் தேடாத சமுதாயம் எது?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா ஆகமத்தில் மற்றொரு முன் அறிவிப்பு காணப்படுகிறது. இந்த முன் அறிவிப்பும் அதில் கூறப்படுகின்ற விவரங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் மட்டுமே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அந்த முன் அறிவிப்பைக் காண்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும், அவர்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினார்களோ, அந்தச் சமுதாயம் குறித்தும் சில விவரங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்வது. இதைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த குறைஷி குலமும், மக்காவில் வாழ்ந்த ஏனைய குலத்தவர்களும் ஒரே இறைவனாகிய கர்த்தரைப் பற்றி சரியான விளக்கமற்றவர்களாகவே இருந்தார்கள். முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், கல்லையும் மண்ணையும் வணங்கக் கூடியவர்களாகவும், அவற்றுக்குப் பலியிடக் கூடியவர்களாகவும் இருந்தனர்.
அந்தச் சமுதாயத்தில் எந்த இறைத்தூதரும் இஸ்மவேலுக்குப் (இஸ்மாயில்) பிறகு தோன்றியது இல்லை. இத்தகைய சமுதாயத்தில் தான் வரக்கூடிய தீர்க்கதரிசி தோன்றுவார் என்று ஏசாயா 65:1 முதல் 65:7 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.
- 1. என்னைக் குறித்து விசாரித்துக் கேளாதர்களாலே தேடப்பட்டேன். என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி இதோ இருக்கிறேன் என்றேன்.
- 2. நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின் படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத் தண்டைக்கு நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
- 3. அந்த ஜனங்கள் என் சந்ததியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி தோட்டங்களிலே பலியிட்டு செங்கற்களின் மேல் தூபம் காட்டி.
- 4. பிரேதக் குழிகளண்டையில் உட்கார்ந்து பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி பன்றியிறைச்சியைத் தின்று தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆனத்தை வைத்திருந்து.
- 5. நீ உன் மட்டிலிரு! என் சமீபத்தில் வராதே! உன்னைப் பார்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள் முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
- 6. இதோ அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது. நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிகட்டுவேன்.
- 7. உங்கள் அக்கிரமங்களுக்கும், மலைகளின் மேல் தூபங்காட்டி மேடைகளின் மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிகட்டுவேன். நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பபேனென்று கர்த்தர் சொல்கிறார்.
”இதோ எனக்க முன்பாக எழுதியிருக்கிறது” என்ற வாக்கியம் இனி நடக்கக்கூடிய நிகழ்ச்சி குறித்த முன்னறிவிப்பு என்பதை விளக்குகின்றது. இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் விபரங்களை ஆராய்வோம்.
இறைவனைப் பற்றிச் சரியாக அறியாத – இறைத்தூதர்களின் வருகை நின்று போயிருந்த – ஒரு சமுதாயத்திற்கு ” இதோ நான் இருக்கிறேன்” என்று கர்த்தர் கூறுவார் என்று முதல் வசனம் கூறுகிறது.
ஏசாயா தீர்க்கதரிசிக்குப் பின் இயேசு வரை எத்தனையோ தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலர்களில் தோன்றினார்கள். அவர்கள் கர்த்தரைப் பற்றிச் சரியான முறையில் இஸ்ரவேலர்களுக்கு விளக்கினார்கள்.
இயேசு பிறக்கக் கூடிய காலத்திலும் அவர் பிறப்பதற்கு முன்பும் கர்த்தரைச் சரியாக விளங்கியிருந்த மக்கள் பலர் இருந்தனர். இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய யோவான், மேரியை வளர்த்த யோவானின் தந்தை ஸகரியா ஆகியோர் கர்த்தரை நன்கு அறிந்திருந்தார்கள்.
ஒழுக்கத்திற்கும், பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மக்களும் அன்று இருந்தார்கள். அதனால் தான் கணவனின்றி குழந்தை பெற்றதாக மேரியைப் பழித்தனர். சிலர் தவறான கொள்கையிலும், சிலர் தவறான நடத்தையிலும் ஈடுபட்டிருந்தாலும் மற்றும் சிலர் நல்லடியார்களாகவும் இருந்து வந்தனர். எனவே இந்த முன்னறிவிப்பு இயேசுவின் காலத்து மக்களையோ, இயேசுவையோ குறிப்பிட வில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு எந்தத் தீர்க்கதரிசியும் அதற்கு முன் வந்ததில்லை. ஒரு சில நல்ல மனிதர்கள் கூட அன்றைக்கு இருக்கவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.
இயேசுவின் காலத்திலும் கூட மக்கள் அனைவரும் கர்த்தரை விளங்காமல் இருந்தனர் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட இது இயேசுவின் சமுதாயத்திற்கு அறவே பொருந்தாது.
ஏனென்றால் இந்த வசனத்தில் ”அத்தகைய மக்களால் நான் தேடப்பட்டேன், அவர்களால் கண்டறியப்பட்டேன் எனக் கூறப்பட்டுள்ளது. கர்த்தரை அறியாதிருந்த அந்தச் சமுதாயம் கர்த்தரை தேடும், கர்த்தரை சரியாக அறிந்து கொள்ளும் என்று இந்த வசனம் கூறுகிறது.
இயேசுவின் காலத்து மக்கள் தவறாக நடந்து கொண்டால் கூட இயேசு வந்ததும் கர்த்தரைத் தேடவுமில்லை. கர்த்தரைக் கண்டறியவுமில்லை. மாறாக (கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி) இயேசுவையே சிலுவையில் அறைந்து கொள்ளும் அளவுக்குக் கொடூரமானவர்களாகவும், கர்த்தரின் மகிமையை உணராதவர்களாகவும் இருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தவர் கர்த்தரைவிட்டு எந்த அளவுக்கு விலகியிருந்தார்களோ அந்த அளவுக்கு நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் கர்த்தரிடம் நெருங்கினார்கள். கர்த்தருக்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள். கர்த்தருக்காகச் சொல்லொணாத துன்பங்களையும் சகித்துக் கொண்டனார்.
7வது வசனத்தில் இஸ்ரவேல் சமுதாயத்தை நோக்கி ”உங்கள் அக்கிரமத்துக்காகவும், உங்கள் முன்னோர்களின் அக்கிரமத்திற்காகவும் (புதிதாக வரக்கூடியவர்கள்) மடியில் கணக்குத் தீர்ப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார்.
இஸ்ரவேல் சமுதாயம் செய்த அக்கிரமங்களுக்குத் தண்டனையாக இஸ்ரவேல் அல்லாத இன்னொரு சமுதாயத்திற்கு அந்தஸ்தும் மதிப்பும் அளிக்கப்படுவதையே இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது.
மனோ இச்சைப்படி நடக்கின்ற முரட்டுத்தனம் கொண்ட – கல்லையும் மண்ணையும் வணங்கி வந்த – தாழ்ந்தவர்களாகவும் கருதி வந்த – மக்களே கர்த்தரைக் கண்டறிவார்கள் என்று 3,4,5 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மேலும் இஸ்ரவேலர்கள் செய்த அக்கிரமத்துக்குத் தண்டனையாக இன்னொரு சமுதாயம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் என்று இவ்வசனம் கூறுவதால் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு நிச்சயமாகப் பொருந்தாது.
இயேசுவின் காலத்து இஸ்ரவேலர்கள் உட்பட அனைத்து இஸ்ரவேலர்களும் செய்து வந்த அக்கிரமத்தின் காரணமாகத் தான் இன்னொரு சமுதாயத்திடம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பு வழங்கப்படுவதாக 7வது வசனம் கூறுகிறது. ஆகவே அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைக் குறித்த முன்னறிவிப்பு என்பதில் ஐயமில்லை.