05) ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்
05) ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்
சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின்பால் ஆரம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள்.
எதிர்ப்புகள் இருந்தால் ஒரு மாதிரியும் ஆதரவுகள் இருந்தால் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்பவர்கள் சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அவசியம் பாடம் பெற வேண்டும்.
அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்னையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.
அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த போது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது. அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன்.
இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லி வருவதாக கேள்விப்பட்டேன். எனவே நான் என் வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டிருந்தார்கள். எனவே நான் அரவமின்றி மெதுவாக மக்காவிற்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன்.
அவர்களிடம் நான் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யார் உங்களுடன் இருக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு சுதந்திரவானும் ஒரு அடிமையும் உள்ளனர் என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தார்கள்.
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும், இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.
செல்வத்தையும், சமுதாய மரியாதையையும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வாரிக்கொடுத்த இறைவன் எவரிடத்திலும் இல்லாத அளவிற்கு ஈமானிய உறுதியையும் நிறைவாகக் கொடுத்திருந்தான். எனவே தான் இக்கட்டான அந்நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிலால் (ரலி) அவர்களை அடிமைத் தலையிலிருந்து விடுவித்து அவர்களும் இஸ்லாத்தைச் சுதந்திரமாக கடைபிடிக்கும் நிலையை அபூபக்ர் (ரலி) அவர்கள் உருவாக்கினார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் எங்கள் தலைவராவார். எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள் என்று சொல்வார்கள்.