05) அறிவீனர்களின் வழிமுறையல்ல அறிஞர்களின் வழிமுறை
05) அறிவீனர்களின் வழிமுறையல்ல அறிஞர்களின் வழிமுறை
இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.
நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (அல்குர்ஆன்: 6:164) ➚ என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342
இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்பட்டாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்கு பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம்.
அறிஞர்களின் பார்வை
ஒரு ஹதீஸைச் சரிகாணுவதற்கு அறிஞர்கள் கடைப்பிடித்த வழிமுறையை நம்மை விமர்சனம் செய்பவர்கள் முறையாக அறிந்து கொள்ளவில்லை. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லையே என்று பாமர மக்கள் கேட்பதைப் போல் கேட்கிறார்கள். அறிவிப்பாளர் தொடரில் குறை இல்லாவிட்டால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடும் என்ற தவறான இவர்களின் எண்ணமே இதற்குக் காரணம். ஹதீஸ் கலை மாமேதைகள் ஹதீஸைச் சரிகாணுவதற்கு இரு வழிமுறைகளைக் கடைப் பிடித்துள்ளனர்.
- அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது
- அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.
இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.
ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும்.. அத்துடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸின் கருத்து இருக்க வேண்டும்.
- அதன் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.
- ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக் கூடாது.
- நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக் கூடாது.
- முரண்பாடாக பல விதங்களில் அறிவிக்கப்படக் கூடாது.
அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இது போன்ற நிலையில் அறிஞ:ர்கள் அந்த ஹதீஸிற்கு (சஹீஹுல் இஸ்னாத்) அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி என்று மட்டுமே கூறுவார்கள். செய்தி சரி என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.
இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் விளக்கம்
السابع قولهم هذا حديث صحيح الإسناد أو حسن الإسناد دون قولهم: هذا حديث صحيح أو حديث حسن، لأنه قد يقال: هذا حديث صحيح الإسناد، ولا يصح، لكونه شاذا أو
இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல் இது அறிவிப்பாளர் தொடரில் சரியான செய்தி என்றோ அல்லது அறிவிப்பாளர் தொடரில் ஹசனானது என்றோ அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தைக் கவனிக்கும் போது) வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதினால் அல்லது ஏதோ ஒரு குறை (அதிலே) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும் இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.
நூல் : முகத்திமது இப்னிஸ்ஸலாஹ் பாகம் : 1 பக்கம் : 6
அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று
வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.
இமாம் நவவீ அவர்களின் கூற்று
வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.
நூல் : அல்இர்ஷாத்
இமாம் ஹாகிமின் கூற்று
குறை தெரியாத காரணத்தினால் நம்பகமான அறிவிப்பாளர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறிவிடும். நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.
நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 261
இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும் இப்னு ஜமாஆ என்பவரும் கூறியுள்ளார்கள்.
நூல் : அல்மன்ஹலுர்ரவீ பாகம் : 1 பக்கம் : 37
நூல் : அல்முக்னிஃ பாகம் : 1 பக்கம் : 89
இப்னு ஜவ்ஸியின் கூற்று
சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றிக் கூறப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.
நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99
இப்னு தய்மியா அவர்களின் கூற்று
முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும், குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.
நூல் : மஜ்மூஉல் ஃபதாவா பாகம் : 18 பக்கம் : 47
இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று
அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.
நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.
நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77
சன்ஆனீயின் கூற்று
ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொடருக்கு சரியானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது.
நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234
கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை
அறிஞர்கள் எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களுக்கு தங்கள் புறத்திலிருந்து சரியானவை என்று தீர்ப்பு வழங்கிவிட்டு செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள். இதற்கான சான்றுகள் பின்வருகிறது.
இமாம் இப்னு ஹஜர் :
ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்கு சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.
இப்னு ஹஜர் கூறுகிறார் : இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள். என்றாலும் இதில் மறுக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 4 பக்கம் : 178
இமாம் நவவீ
நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயனத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
இது தொடர்பாக ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற வார்த்தையைச் சுருக்கி பதிவு செய்ததன் மூலம் இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற இந்த வார்த்தை தவறாக ஏற்பட்டு விட்டதாகும். இதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனென்றால் விண்ணுலகப் பயணம் தொடர்பாகக் (கூறப்படும் கால அளவில்) மிகவும் குறைவாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயணம் செய்தார்கள் என்பதாகும். (ஆனால் விண்ணுலகப் பயணம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகிறது)
இன்னும் தொழுகை விண்ணுலகப் பயணத்தின் இரவின் போது தான் கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் விண்ணுலகப் பயணம் எப்படி நடந்திருக்க முடியும்?
விண்ணுலகப் பயணத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது அது வரை நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை. என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் இதன் கருத்து உறுதி பெற்ற விஷயத்திற்கு மாற்றமாக இருப்பதினால் இதை மறுக்கிறார்கள்.
இமாம் ஹாகிம்
1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவு மற்றும் பகல் தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்துகள் தான். வித்ரு என்பது இரவின் கடைசியில் ஒரு ரக்அத் ஆகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
இமாம் ஹாகிம் கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உறுதிமிக்க நம்பகமானவரைத் தவிர வேறு யாரும் இல்லை. இதிலே பகல் என்ற வார்த்தையைக் கூறியிருப்பது தவறாகும்.
நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 94
2 . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூச்சல் நிறைந்த சபையில் கலந்து கொண்ட ஒருவர் எழுவதற்கு முன்பாக சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக என்று சொன்னால் அவரது சபையில் ஏற்பட்ட அந்தத் தீமை அவருக்காக மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ்
ஹாகிம் கூறுகிறார் : இந்த ஹதீஸை உற்று நோக்குபவர் இது புகாரியின் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதிலே சந்தேகம் கொள்ள மாட்டார். என்றாலும் இதிலே மோசமான குறை உள்ளது.
நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 263
இமாம் தஹபீ
1 . மரண வேளையில் தவித்துக் கொண்டிருந்த எனது உறவினருக்கருகில் நான் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த கவலையைப் பார்த்த போது (ஆயிஷாவே) உனது உறவினருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்தச் சிரமமும் அவரது நன்மைகளில் ஒன்றாகி விடுகிறது என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
தஹபீ கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் நம்பகமானவர்கள். என்றாலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல் : தத்கிரதுல் ஹுஃப்பாள் பாகம் : 2 பக்கம் : 688
2 . இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார் : அஹம்மது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்) ஹாரிஸ் அவர்கள் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். அவரை உங்கள் வீட்டிருக்கு (ஒரு முறை) வரவழைத்து அவரது பேச்சைக் கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைக்கலாமே என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு இஷாத் தொழுதார்கள். பின்பு அவர்கள் சுமார் இரவின் பாதிவரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள்.
அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தார். ஹாரிஸ் பேசத் தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுது விட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள்.
அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் நான் இவரைப் போன்று யாரையும் பார்த்ததில்லை . இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை என்று கூறினார்கள்.
இமாம் தஹபீ கூறுகிறார் : இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம் என்றாலும் இது. மறுக்கப்பட வேண்டியதாகும். எனது உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது. அஹ்மத் போன்றவரிடம் இது போன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் சாத்தியமற்றதாகக் கருதுகிறேன்.
நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 1 பக்கம் : 430
ஹாரிஸ் என்பாரின் பேச்சில் சாதாரண மக்கள் மயங்குவதைப் போல் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்த இமாம் அஹ்மத் மயங்கினார்கள் என்று இச்சம்பவம் கூறுவதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அஹ்மதின் தன்மைக்கு மாற்றமாக இருப்பதினால் இதை ஏற்க மாட்டேன் என்று தஹபீ கூறுகிறார்.
ஞானத்தைத் தொலைத்துவிட்ட அறிஞர்களே. இமாம் அஹ்மதை விட நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? அஹ்மது இமாமின் கண்ணியத்தைப் பாதுகாக்க அவர்களின் செய்திக்கு இந்த அளவுகோல் என்றால் ஏன் உத்தமத் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அளவுகோலை கையில் எடுக்கத் தயங்குகிறீர்கள்?
3 . அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் சொல்கிறார் : எனது நண்பர் ஒருவர் பிரயாணியாக இருக்கும் போது மரணித்து விட்டார். அவருடைய மண்ணறையில் நானும் இப்னு உமர் அவர்களும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களும் இருந்தோம். (அப்போது) எங்களுடைய பெயர் அல்ஆஸ் என்றிருந்தது.
அப்போது எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும் நிலையில் இவரது கப்ரில் இறங்குங்கள் என்று கூறினார்கள். நாங்கள் எங்களது சகோதரரை அடக்கம் செய்துவிட்டு எங்கள் பெயர் மாற்றப்பட்ட நிலையில் மேலே ஏறி வந்தோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்
நூல் : பைஹகீ பாகம் : 9 பக்கம் : 307
இமாம் தஹபீ கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய கருத்தைத் தருகிறது. (ஏனென்றால்) இப்னு உமர் அவர்களின் பெயர் ஹிஜ்ரீ ஏழு வருடத்திற்கு பிறகு வரை மாற்றப்படாமல் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கிறது. இக்கருத்து ஏற்கத் தகுந்ததல்ல.
நூல் : சியரு அஃலாமின் நுபலா பாகம் : 3 பக்கம் : 209
- ஹாகிமில் 1868 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (குறையை விட்டும்) தூய்மையாக இருந்தலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 1 பக்கம் : 506, 507
- ஹாகிமில் 3387 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.
இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக உள்ளது. செய்தி மறுக்கப்பட வேண்டியதாக உள்ளது.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 2 பக்கம் : 366, 367
- ஹாகிமில் 4640 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டியது. இட்டுக்கட்டப்பட்ட வகையை விட்டும் தூரமானதாக இது இல்லை.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 3 பக்கம் : 127, 128
- ஹாகிமில் 6738 வதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸை அதன் கருத்தைக் கவனித்து மறுக்கிறார்.
இதன் அறிவிப்பாளர் தொடர் தரமாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.
- ஹாகிமில் 7048 வதாக பதிவாகியுள்ள செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.
இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய ஹதீஸாகும்.
நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 4 பக்கம் : 99
இமாம் அல்பானியின் பார்வை
- எனது சமுதாயத்தில் அப்தால்கள் (என்ற நல்லடியார்களை அறிந்து கொள்வதற்கான) அடையாளம் அவர்கள் யாரையும் எப்போதும் சபிக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் என்பவர் கிதாபுல் அவ்லியா என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல்பானீ அவர்கள் குறைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இதன் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறை காணுகிறார். ஹதீஸைச் சரிகாணுவதற்கான இரண்டு அளவுகோலையும் இங்கே அல்பானீ பயன்படுத்துகிறார்.
எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி இந்தச் செய்தி மோசமான கருத்தைக் கொண்டதாக உள்ளது. ஏன் இது இட்டுக்கட்டப்ப.ட்டது. (என்று கூட சொல்லலாம்). ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பல முறை சபித்துள்ளார்கள். இதை அவர்களே பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.
(நபியவர்கள் சபித்ததாக வரும்) பல ஹதீஸ்களை இன்னொரு சில்சிலாவில் நான் பதிவு செய்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட இந்த அப்தால்கள் (நல்லடியார்கள்) முழுமையடைந்தவர்களா?
நூல் : சில்சிலதுல் லயீஃபா பாகம் : 3 பக்கம் : 474
குறையுள்ள தொடரைக் கொண்ட செய்திக்கும் குறையில்லாத தொடரைக் கொண்ட செய்திக்கும் இந்த அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இப்னு சய்யிதின்னாஸ்
நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது ஆபூதாலிபுடன் ஷாம் நாட்டிற்கு கூட்டமாக வியாபாரத்திற்காகச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு பாதிரியார் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளைக் கவனத்தில் கொண்டு இவர் நபியாவார் என்ற தகவலை அவர்களுக்கு அறிவித்தார். ரோம் நாட்டிற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றால் அவர்கள் நபியைக் கொன்று விடுவார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார்.
ரோம் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏழு நபர்கள் அங்கு வந்தார்கள். இவர்களுடன் நபியவர்களை அனுப்புவதற்கு அபூதாலிப் ஒத்துக் கொண்டார். அபூபக்கர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிலாலை அனுப்பினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)
(திர்மிதீ: 3553), ஹாகிம் (பாகம் : 1 பக்கம் : 672)
இவ்வாறு திர்மிதி, ஹாகிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சய்யித் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாவிட்டாலும் இதன் கருத்தில் குறை உள்ளது என்று கூறுகிறார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இத்துடன் இந்தச் செய்தியில் தவறான கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்கு பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படிச் சாத்தியமாகும்?
நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு தான் அபூபக்கரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அபூபக்கரின் பொறுப்பில் பிலால் இருந்ததாக உள்ளது.)
இதற்கு முன்பு அவர் பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமை செய்யப்பட்ட போது அவரின் மீது இரக்கப்பட்டும் அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர் பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.
நூல் : உயூனுல் அஸர் பாகம் : 1 பக்கம் : 105
ஒரு ஹதீஸைச் சரிகாணுவதாக இருந்தால் அதன் தொடர் மற்றும் தகவல் ஆகிய இரண்டையும் உரசிப் பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்களின் இந்தக் கூற்றுக்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட செய்திகள் அல்லாமல் இன்னும் இது போன்று அறிஞர்கள் பல இடங்களில் நடந்துள்ளார்கள். இதனடிப்படையில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற செய்திகளில் உள்ள பிழையினால் அச்செய்தி மறுக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்களை எடைபோடுவது கூட செய்தியைச் சரிகாணும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தான் பல அறிவிப்பாளர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் செய்திகளைக் கவனித்து வலிமையானவர் என்றும் மோசமானவர் என்றும் அறிஞர்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
ஒரு அறிவிப்பாளர் நல்லவராக இருந்தாலும் அவரின் வழியாக பல மோசமான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் மோசமான செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்று கூறி அவரை நிராகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவிப்பதைப் போல் கூட்டாமல் குறைக்காமல் ஹதீஸ்களை அறிவித்தால் அவர் உயர்ந்த மனனத் தன்மை கொண்டவர் உறுதி மிக்கவர் என்று தீர்ப்பு சொல்வார்கள்.
இதிலிருந்து அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைக் கவனிப்பதில் எவ்வளவு அக்கரை காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?
குர்ஆனிற்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் இதில் நம்பகமான ஆட்கள் இருந்தாலும் இவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம். அது எப்படி நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து தவறு வரும் என்று இதை அங்கீகரிக்காதவர்கள் கேட்கிறார்கள்.
மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது. இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு தவறாக விளங்கியிருப்பார்கள் என்று கூறினார்கள்.
இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதர்கெடுத்தாலும் ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா? என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் :
அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார் : ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை.
ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குب சொல்லப்படும்.
நூல் : அல்இலல் பாகம் : 1 பக்கம் : 20
இமாம் தஹபீ :
நம்பகமானவர் சிலவேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.
இமாம் சுயூத்தி :
இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 75
மஹ்மூத் தஹ்ஹான் :
இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல. ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு.
நூல் : தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ் பக்கம் : 36
நம்பகமானவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனிற்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனிற்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.
நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனிற்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கிவிடக் கூடாது.
குர்ஆனிற்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.