04) இணைவைப்பின் வகைகள்
இணைவைப்பின் வகைகள்
1 . வணக்க வழிபாடுகளில் இணைவைக்கக் கூடாது அல்லாஹ்விற்கு மட்டும் நாம் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்தால் அதுவும் இணைவைப்பாகும். உதாரணமாக சத்தியம் செய்வது, நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, தொழுவது, பிரார்த்திப்பது, நோன்பு நோற்பது, சிரம் பணிவது இது போன்று அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களை எவருக்காவது ஒருவன் செய்து விடுவானால் அவன் இணைவைத்தவனாகி விடுவான். வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. இவற்றில் எதையாவது பிறருக்குச் செய்து விட்டால் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.
நான் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காமல் அவனை வணங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது என்று கூறுவீராக!
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்லாஹ்விற்கு நிகராக எதையும் ஆக்காமல் அவனை வணங்குங்கள்.
அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைவனின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும், உங்களுக்குமிடையே முளர் குலத்து இறை மறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்குங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச்
செலுத்துங்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
இணைவைக்காமல் வழிபடுவது அடியார்களின் கடமை இணைவைக்காமல் வணங்குவது நம்மீது கடமையாகும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் உஃபைர் என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும்.
அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும் என்று பதில் கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி)
இணைவைக்காமல் வழிபடுவதே இஸ்லாமில் முதல் கடமை
முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை முதலாவதாக அந்நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடத்தில் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம், நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏகஇறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்துநேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.
அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகின்ற ஸகாத்தை அவர்களுடைய செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஓப்புக் கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக்கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கை நபியவர்களின் பிரச்சாரத்தில் முதன்மையானதாக இருந்தது. அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்? என்று ஹெராக்ளியஸ் (என்னிடம்) கேட்டார். நான் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காமல் அவன் ஒருவனையே வணங்குங்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்’ கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.
அறிவிப்பவர் : அபூ சுஃப்யான் (ரலி)
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே நான் அவசியம் கடைபிடிக்க வேண்டியதை எனக்குக் கூறுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக நீர் எதையும் ஆக்காமல் அவனை வணங்க வேண்டும். கடமையான தொழுகையைத் தொழ வேண்டும். கடமையான ஸகாத்தை நீ நிறைவேற்ற வேண்டும். முஸ்லிமிற்கு நலம் நாட வேண்டும். இறை நிராகரிப்பாளனை விட்டு விலகிவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
இணைவைக்காமல் வழிபடுவதே இஸ்லாமிய கொள்கை
அல்லாஹ்வைûயும், மற்றவர்களையும் வழிபடுவது இஸ்லாமியக் கொள்கையல்ல. மாறாக அல்லாஹ்விற்கு எந்த இணையும் கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்குவதே இஸ்லாமியக் கொள்கையாகும். நபியவர்களிடத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்ட போது இணைவைக்காமல் வழிபடுவது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு நீர் எதனையும் இணையாக்காமல் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இஸ்லாமின் முதல் ஆணிவேராக விளங்கக் கூடிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையின் பொருளை விளங்கினால் யாரும் இணைவைக்க மாட்டார்கள். அல்லாஹ் கடவுள் ஆவான் என்ற பொருளை இந்த வார்த்தை தரவில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கடவுள்கள் கிடையாது என்று தெளிவான கருத்தை தரக்கூடிய விதத்தில் இந்த வார்த்தை அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
இணைவைக்காமல் இருப்பவரே முஸ்லிமாக இருக்க முடியும்
இஸ்லாமியப் பெயர்களைச் சூடிக் கொள்வதாலோ, தொப்பி தலைப்பாகை அணிவதாலோ, தாடியை மட்டும் வைப்பதாலோ, முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ்வதாலோ யாரும் முஸ்லிமாகி விட முடியாது. ஓரிறைக் கொள்கைக்கு முழுக்க முழுக்க எதிரான இணைவைப்பை வேறோடு கிள்ளி எறிந்தால்தான் முஸ்லிமாக இருக்க முடியும்.
இணைவைப்புத்தான் ஒருவரை இஸ்லாமிலிருந்து வெளியேற்றுகின்ற கொடிய பாவமாகும். இஸ்லாமும் இணைவைப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை ஆகும். இந்த இரண்டும் ஒருவரிடத்தில் ஒன்று சேரவே முடியாது. ஒருவர் இறந்தவராகவும் உயிருள்ளவராகவும் இருக்க முடியாது. இறந்தவர் என்றால் உயிரில்லை என்று பொருள். உயிருள்ளவர் என்றால் இறக்கவில்லை என்று பொருள்.
இது போன்றுதான் ஒருவர் முஸ்லிமாக இருந்தால் இணைவைப்பவராக இருக்க மாட்டார். இணைவைப்பவர் முஸ்லிமாக இருக்க மாட்டார்கள். இணைவைத்துக்கொண்டு அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْ
வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணைகற்பித்தவனல்லன்; (என்றும் கூறினார்).
எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைகற்பித்தவராக இருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணைகற்பிப்பவராக நீர் ஆகாதீர்!
இஸ்லாமை ஏற்குமாறு ரோம் நாட்டின் அரசருக்கு நபியவர்கள் கடிதம் எழுதிய போது இணைவைக்காதீர்கள் என்றே வலியுறுத்திக் கூறினார்கள். இணைவைக்காதவர்தான் முஸ்லிமாக இருக்க முடியும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வருமாறு ஹெராக்ளியஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, புஸ்ரா நகர ஆட்சியர் வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:
அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின் (விசயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.
வேதக்காரர்களே! எங்களுக்கும், உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அஃது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்கள்)தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்என்று கூறிவிடுங்கள்.
அறிவிப்பவர் : அபூ சுஃப்யான் (ரலி)
அல்லாஹ் விரும்பும் வணக்கம்
தன்னையும், பிறரையும் வணங்குவதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். தன்னை மட்டும் அடியார்கள் வணங்குவதே அல்லாஹ்விற்கு விருப்பமான வணக்கமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான். நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும், உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும், பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான். (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும் (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும் பொருளை விரையமாக்குவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(அஹ்மத்: 8718, 8361)(முஸ்லிம்: 3533)
இறைவன் வாங்கிய உறுதிமொழி
இணைவைக்கக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடத்தில் இறைவன் உறுதிமொழி வாங்கினான்.
அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும் என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.
எனக்கு எதையும் இணைகற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப் படுத்துவீராக! என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!
நபித்தோழர்களிடம் இறைத்தூதர் வாங்கிய உறுதிமொழி
நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடத்தில் இணைவைக்கக் கூடாது என்று உறுதிமொழி வாங்கினார்கள்.
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதி மொழி அளித்து விட்டோம் என்று கூறினோம். பின்னர் அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று (மீண்டும்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்து விட்டோம் என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்ட போது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்? என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைகற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபசாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்ல மாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என்ற அடிப்படையிலும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்து விட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்ற அடிப்படையிலும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.
அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
இணைவைக்காமல் வணங்கியவருக்கே வெற்றி உண்டு
இணைவைக்காமல் அல்லாஹ்விற்கு மட்டும் வணக்கங்களைப் புரிந்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)? என்றனர். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்) (என்று கூறிவிட்டு அவரிடம்), நீர் அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காமல் அவனை வணங்க வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியும் தொழுகையை நிலைநாட்டியும் ஸகாத்தைக் கொடுத்தும் பெரும்பாவங்களைச் செய்யாமல் (மறுமையில்) வருபவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)