04) அறியாமைக் காலத்தை நோக்கி

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

அறியாமைக் காலத்தை நோக்கி…

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னால் அவர்களின் சமுதாய மக்கள் பெண் குழந்தைகளை கடுமையாக வெறுத்தனர். பெண் குழந்தை பிறப்பதை கேவலமாகக் கருதினர். பலர் தங்கள் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து கொலையும் செய்தனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கண்டிக்கின்றான்.

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌ۚ‏
يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ‌ ؕ اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ‏

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 58:49)

கேடுகெட்ட கலாச்சாரத்தை கொண்டிருந்த அரபு மக்களிடத்தில் கூட வரதட்சணை கொடுமை இருக்கவில்லை. அவர்கள் வரதட்சணை கொடுமைக்கு பயந்து பெண்களை கொல்லவில்லை. அரபுகள் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காமல் அவர்களை ஆடு மாடுகளைப் போல் நடத்தினர். பெண் என்றால் விபச்சாரத்திற்கு மட்டும் பயன்படும் ஆயுதமாக அவளை பார்த்தனர்.

இதன் காரணத்தால் பெண் குழந்தையை இழிவாக கருதி கொலை செய்யும் நிலைக்கு சிலர் சென்றனர். இஸ்லாம் வந்த பிறகு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளையும் கண்ணியத்தையும் கொடுத்து அவளும் மதிக்கப்பட வேண்டியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி முன்பிருந்த நிலையை தலைகீழாக மாற்றியது.

இன்று நமது சமுதாயத்தில் உள்ள வரதட்சணை கொடுமையால் 1400 வருடங்களுக்கு முன்பு அரபுகளிடம் குடிகொண்டிருந்த பெண்குழந்தைகளை கொலை செய்யும் அறியாமைக்கால அநாச்சாரம் அப்படியே நமது நாட்டிலும் பெருகிவிட்டது.

பெண் இனம் இல்லாவிட்டால்…

தற்போது உலகில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே தட்டுப்பாடு இல்லாமல் ஆண்களுக்கு வாழ்க்கைத் துணை இலகுவாக கிடைத்துவிடுகின்றது. வரதட்சணைக் கொடுமையால் பெண் இனம் அழிக்கப்படுமேயானால் இந்த நிலை மாறி ஆண் இனம் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகி பெண்கள் குறைந்துவிடுவார்கள். பெண் துணை இல்லாமல் ஆண்வர்க்கம் அல்லோலப்படும். இன்று வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் சந்திக்கும் அவலங்களை அந்த நேரத்தில் ஆண்கள் சந்திக்கும் நிலை ஏற்படும்.

பிள்ளைகளிடம் பாரபட்சம்

எல்லாவற்றிற்கும் வழி காட்டும் நம் மார்க்கம், தாய் தந்தையர் தமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் வழி காட்டுகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எப்படி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதும் அந்த வழி காட்டல்களில் உள்ள ஒன்றாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “”நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “”அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்.

அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “”இல்லை” என்று பதிலளித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “”அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல்,

(புகாரி: 2587)

மற்றொரு அறிவிப்பில், “”நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

இந்த வேறுபாட்டை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள்; வரக் கூடிய மாப்பிள்ளைகள் வைக்கும் கோரிக்கைக்குத் தக்கவும் இந்த வேறுபாட்டைச் செய்கின்றார்கள். இங்கு தான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.

பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள்.

மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீதமாக நடங்கள்! என்னைப் பாவத்திற்கு சாட்சியாக்காதீர்கள்!” என்ற நபி (ஸல்) அவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கருத்தில் கொண்டு பாருங்கள். இந்த வரதட்சணைக் கொடுமை எந்த அளவுக்குப் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீதம் தவற வைக்கின்றது? எனவே வரதட்சணை வாங்கக் கூடியவர்கள் இந்தப் பாவத்திற்காகவும் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றாக வேண்டும்.