03) இணை கற்பித்தல்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

இணை கற்பித்தல்

இணை கற்பித்தல் என்றால் என்ன?

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன்: 1124

மேற்கண்ட வசனங்கள் தான் இணை வைப்பைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகும். முதல் வசனத்தில் இறைவனுக்குப் பார்க்கும் கேட்கும் ஆற்றல் உள்ளது என்று கூறப்படுவதுடன் அவனைப் போன்று யாருமில்லை என்பதும் சேர்த்துக் கூறப்படுகிறது.

அல்லாஹ்வைப் போன்று எதுவும், எவரும் இருக்க முடியாது. அவனுடைய தன்மைகள் பண்புகள் செயல்பாடுகளைப் போன்று எவரது தன்மைகளும், பண்புகளும், செயல்பாடுகளும் இருக்காது என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் கொள்ளக் கூடாது.

இறைவன் கேட்பது போன்று யாராலும் கேட்க முடியாது

இறைவனுக்கும், படைப்பினங்களுக்கும் கேட்கும் ஆற்றல் இருந்தாலும் இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

  1. பிறர் கூறுவதை மனிதர்கள் கேட்க வேண்டுமானால் சப்தமிட்டுக் கூற வேண்டும். சப்தமிடாமல் மனதிற்குள் பிறர் நினைப்பதை எவராலும், எதுவாலும் அறிய முடியாது. ஆனால், சப்தமிட்டுக் கூறினால் தான்  அல்லாஹ்விற்கு விளங்கும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்கில்லை. எனவே தான் மனிதர்களிடம் சப்தமிட்டுப் பேசுகிறோம். அல்லாஹ்விடம் சப்தமில்லாமல் வேண்டுகிறோம் .
  2.  குறிப்பிட்ட அளவைத் தாண்டி ஒலி உயருமானால் அதை மனிதனால் கேட்க முடியாது. சில நேரங்களில் அவனுடைய செவி செயலிழந்து விடும். ஆனால் அல்லாஹ்விற்கு இந்தப் பலவீனம் இல்லை.
  3. பேசுபவர் அருகாமையில் இருந்தால் தான் அவர் சொல்வதை நம்மால் கேட்சு முடியும், பேசுபவருக்கும், கேட்பவருக்கும் நீண்ட தூரம் இருந்தால் சொல்லப்பட்டதை கருவிகளின் துணையின்றி கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ்விற்கு இத்தகைய பலவீனம் இல்ல.
  4. தனித்தனி நபர்களாகக் கூறினால் தான் கூறப்பட்டதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பலர் ஒரே நேரத்தில் பல கருத்துக்களைக் கூறினால் எல்லாருடைய கூற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் கோடான கோடி மக்கள் கூடி நின்று ஒரே நேரத்தில் அனைவரும் சேர்ந்து தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் முன்வைத்தாலும் ஒவ்வொருவரின் தேவைகள் என்ன என்பதை அல்லாஹ் புரிந்து கொள்வான். எனவே தான் மனிதர்களிடம் தனித் தனியாகச் சென்று கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். அல்லாஹ்விடம் ஒரே நேரத்தில் பலர் முறையிடுகிறோம்.
  5. நமக்குத் தெரிந்த மொழியில் பேசினால் தான் நமக்குப் புரியும். ஆனால் அல்லாஹ்வோ உலகில் எந்த மொழியில் யார் பேசினாலும் அதை அவன் புரிந்து கொள்வான். சொல்லப் போனால் அல்லாஹ்விடம் உரையாடுவதற்கு மொழியே தேவையில்லை.

இறைவன் பார்ப்பது போன்று யாராலும் பார்க்க முடியாது

மனிதர்களுக்கும், மற்ற பிற உயிரினங்களுக்கும் பார்க்கும் சக்தி உள்ளது. இறைவனுக்கும் பார்க்கும் சத்தி உள்ளது. இதனால் படைப்பினங்கள் அல்லாஹ்விற்கு நிகராகி விட்டன என்று நம்பிவிடக் கூடாது. ஏனென்றால் இறைவனுக்கும், படைப்பினங்களுக்கும் பார்க்கும் ஆற்றல் இருந்தாலும் பார்க்கும் முறையில் பலத்த வித்தியாசம் இருக்கிறது.

  1. வெளிச்சம் இருந்தால் தான் மனிதனால் பார்க்க முடியும். ஆனாக் கரும் இருட்டில் கூட மனிதர்கள் செய்வதை அல்லாஹ்வால் காண முடியும்
  2. அதிக வெளிச்சம் ஏற்பட்டாலும் மனிதர்களால் பார்க்க முடியாது. உதாரணமாக மேகமூட்டம் இல்லாமல் சூரியன் உச்சியில் இருக்கும் போது அதை நம்மால் உற்றுப் பார்க்க முடியாது. கண்கள் கூசும். ஆனால் ஒளி எவ்வளவு அதிகரித்தாலும் அல்லாஹ்வால் எதையும் பார்க்க முடியும்.
  3. நமது பார்வை தடுப்புகளைத் தாண்டிச் செல்லாது. திரைக்கு அப்பால், சுவற்றுக்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நம்மால் அறிய முடியாது. ஆனால் கதவைப் பூட்டிக் கொண்டு யார் என்ன செய்தாலும் அறைக்குள் நடப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
  4. நமது பார்வை குறிப்பிட்ட எல்லை வரைக்கும் மட்டுமே செல்கிறது. தூரம் அதிகமாக அதிகமாக காட்சிகள் கண்களுக்குத் தெரியாது. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அல்லாஹ் அதைக் காண்பான்.
  5.  நமது பார்வை குறிப்பிட்ட திசையை நோக்கி மட்டுமே இருக்கும். வடக்கே நோக்கி இருந்தால் தெற்கில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கே என்ன நடக்கிறது என்பதை நம்மால் காண முடியாது. ஆனால் அல்லாஹ்வோ எந்தத் திசையில் என்ன நடந்தாலும் அதைக் காண்பான்.

இறைவன் குணப்படுத்துவது போல் யாராலும் குணப்படுத்த முடியாது

இறைவனும் நோயைக் குணப்படுத்துகிறான்; மருத்துவரும் நோயைக் குணப்படுத்துகிறார். ஆனால் இவ்விருவரும் குணப்படுத்தும் முறையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ் குணப்படுத்துவதைப் போல் மருத்துவர் குணப்படுத்துவது கிடையாது. ஏனென்றால் அல்லாஹ்வைப் போன்று யாருமில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

  1. மருத்துவரிடம் நமக்கு ஏற்பட்ட குறை, பாதிப்புகள் என்னவென்பதைத் தெளிவாக எடுத்துரைத்தால் தான் அவரால் மருத்துவம்.  செய்ய முடியும். ஆனால் அல்லாஹ் நம்மிடம் எந்த விசாரணையும். செய்யாமல் நோயை அகற்றுகிறான்.
  2. ஒரு மருத்துவர். மருத்துவம் செய்வதற்கு இதயத் துடிப்பை அறியும் கருவி, உள்ளுறுப்புகளைப் படம்பிடிக்கும் கருவி போன்றவை தேவைப்படுகிறது. வயிற்றில் கட்டிகள் இருந்தால் அதை வெட்டி எடுக்க கத்தி தேவைப்படுகிறது. இன்னும் பல சாதனங்கள் இருந்தால் தான் அவரால் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அல்லாஹ்விற்கு கத்தியோ, புகைப்படக் கருவியோ, இதயத்துடிப்பை அறியும் கருவியோ எதுவும் தேவையில்லை. அறுவை சிகிச்சையோ வேறு எந்த சிகிச்சையுமே இல்லாமல் குணப்படுத்தும் சக்தி அவனுக்கு உள்ளது.
  3. நோய்க்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து அவற்றைச் சரியாக உண்டு வருமாறு மருத்துவர் கூறுவார். அவர் கூறியதைப் போன்று மருந்தைச் சாப்பிட்டால் தான் நோய் குணமாகும். ஆனால் அல்லாஹ்விற்கோ நோயைக் குணப்படுத்த எந்த மருந்தும், மாத்திரையும் தேவையில்லை.
  4. மருத்துவர் உடனடியாக நோயைக் குணப்படுத்திவிட மாட்டார். நீண்ட கால அவகாசம் அவருக்குத் தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கோ எந்த அவகாசமும் வேண்டியதில்லை.
  5. மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி இறப்பதுண்டு. மருத்துவரின் சிகிச்சை தோற்பதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் சிகிச்சை வெற்றியடைவது நிச்சயம்.

உதாரணத்திற்காகத் தான் கேட்கும் திறன், பார்வைத் திறன், குணப்படுத்தும் ஆற்றல் ஆகிய மூன்று விஷயங்களை இங்கு கூறியுள்ளோம். இது போன்று பல விஷயங்களில் அல்லாஹ்விற்கும், அடியார்களுக்கும் மத்தியில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வுடைய தனித் தன்மைகளில் பிறரைக் கூட்டுச் சேர்த்து விட்டால் இணைவைப்பு ஏற்பட்டு விடுகிறது.

அல்லாஹ் பார்ப்பது போன்றும், கேட்பது போன்றும், உதவி செய்வது போன்றும், நோயை நீக்குவது போன்றும் படைப்பினங்களில் யாராவது காண்பார் என்றோ, கேட்பார் என்றோ, உதவி செய்வார் என்றோ. நோயை நீக்குவார் என்றோ ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாக ஆகிவிடுவான்.

மேலும் அல்லாஹ் மட்டுமே செய்கின்ற காரியங்களை மற்றவர்களும் செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைப்பாகும். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்வதும் இணை வைப்பாகும்.

நபிமார்களானாலும் அல்லாஹ்விற்கு நிகராக முடியாது

நபிமார்கள் அனைவரும் இறை நேசர்கள் என்பது உறுதியான விஷயமாகும். அப்படிப்பட்ட இறைத் தூதர்களை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கிவிடக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் இறைத் தகுதியை எட்டாத மனிதர்களை அல்லாஹ்விற்கு இணையாக்குவது எவ்வளவு மோசமான செயல்?

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை, மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக்  கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகிவிடுங்கள்” (என்றே கூறினர்)

‘வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்” என்று அவர் உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?

(அல்குர்ஆன்: 3:79-80)

நபிமார்கள் உட்பட எவரும் அடிமை என்ற தகுதியைத் தாண்டி இறைவனின் தன்மைகளை ஒரு போதும் அடைய முடியாது.

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

(அல்குர்ஆன்: 19:93)

கிறீத்தவர்கள் ஏன் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்?

கிறித்தவர்கள், இறைநேசர் என்று நிரூபிக்கப்படாத சாதாரண மனிதரை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கவில்லை. மாறாக இறை நேசர் என்று அல்லாஹ்வால் நிரூபிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களிடமே பிரார்த்தித்தார்கள்.

தந்தையில்லாமல் அற்புதமாகப் பிறந்த சிறப்பு ஈஸா நபிக்கு உண்டு. குருடர்களுக்குப் பார்வைகளை வரவழைப்பது, இறந்தவர்களுக்கு உயிரூட்டுவது. குஷ்ட நோயாளிகளைக் குணப்படுத்துவது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்களை அறிவிப்பது, களிமண்ணால் செய்யப்பட்ட பறவைகளுக்கு உயிர் கொடுப்பது எண்ணற்ற அற்புதங்களை அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்,) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும். குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்றார்}

(அல்குர்ஆன்: 3:49)

எல்லா வகையிலும் சிறந்த ஈஸா (அலை) அவர்களிடம் பிரார்த்தித்த அவர்களை அல்லாஹ்விற்கு இணையாக ஆக்கிய கிறித்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் முஸ்லிம்கள் அல்ல என்றும் நாம் நம்பும் போது ஈஸா (அலை) அவர்களின் தகுதியை அடையாதவர்களிடம் பிரார்த்திப்பவர்கள் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்: 5:72)

ஈஸா (அலை) அவர்களிடம் பிரார்த்தனை செய்தால் மறுமையில் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கிறித்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனுடைய தகுதிக்கு உயர்த்தியுள்ளார்கள்.

இவர்களைப் போன்றே நம் சமுதாயத்தினரும், மகான்கள் மறுமையில் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தம்மிடம் பிரார்த்தித்தவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களால் மறுமையில் எந்த உதவியும் செய்ய முடியாது. அவ்வாறிருக்க முகவரி இல்லாமல் மகான்கள் என்று யூகிக்கப்படுபவர்களால் மறுமையில் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

“மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்’ போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார்.

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.”

“அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)

(அல்குர்ஆன்: 5:116)

மக்கத்துக் காஃபிர்கள் ஏன் வழிகெட்டார்கள்?

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை கடவுள் இல்லை என்று மறுக்கவில்லை. இந்த வானம் பூமி அனைத்தையும் படைத்ததும், மழையை இறக்குவதும். போழிவுகள் வரும் போது காப்பாற்றுவதும் அல்லாஹ் தான் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அல்லாஹ்விற்கு மேலாக அவர்கள் யாரையும் நினைக்கவில்லை.

இவர்கள் இவ்வாறு அல்லாஹ் விஷயத்தில் நம்பினாலும் அல்லாஹ்விற்கு இணை கற்பித்த ஒரே காரணத்தினால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள் முஸ்லிம்களாக இருக்கவில்லை.

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக எவற்றை நம்பினார்களோ அந்த அதிகாரங்கள் அப்துல்காதர் ஜீலானிக்கும். ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் உள்ளது என்று இன்றைக்கு நம்புபவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்க முடியாது. 

பெரும் துன்பங்கள் வரும் போது ‘முஹ்யித்தினே” என்று அழைப்பவர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால் மக்கத்துக் காஃபிர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள். மற்ற கடவுள்களை மறந்து விடுவார்கள். இந்த வகையில் மக்கத்துக் காஃபிர்களை விட மோசமான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன்: 29:61)

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக்கொள்வதில்லை.

(அல்குர்ஆன்: 29:63)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 31:25)

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன்: 31:32)

சிறந்த மகானும் இறைத் தூதருமான இப்ராஹீம் (அலை) அவர்களையே அல்லாஹ்விற்கு நிகராக மக்கத்துக் காஃபிர்கள் கருதினார்கள். இஸ்மாயில் (அலை) அவர்களையும் அல்லாஹ்விற்கு இணையாகக் கருதினார்கள். இதனால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்.

அப்படியானால் முகவரியில்லாதவர்களையெல்லாம் அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்கள் இருந்தன.

அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக..! அல்லாஹ்வின் மீது ஆணையாக…! இவ்விருவரும் இரு நபிமார்களும்) அம்புகள் மூலமாக குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்” என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள். அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி

(புகாரி: 1601)