02) பெண் இனம் வெறுக்கப்படுகின்றது

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

பெண் இனம் வெறுக்கப்படுகின்றது

மனிதன் தான் வளர்க்கும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் பெண் குட்டியை  பெற்றெடுத்டுத்தால் மகிழ்சியடை கிறான். பெண் இனம் இனவிருத்தி செய்யும் என்பதால் எல்லா உயிரினங்களிலும் மனிதன் பெண் இனத்தை விரும்புகிறான். செய்தியை கேட்டவுடன் பலருக்கு முகம் சுருங்கிவிடுகின்றது. பெற்றெடுத்த தாய் கேவலமாக பார்க்கப்படுகிறாள். நோவினை செய்யப்படுகிறாள். வரதட்சணைக் கொடுமையே இதற்குக் காரணம்.

பெண் குழந்தை வளர்ந்து திருமணத்துக்கு தகுதியாகிவிட்டால் அவளை பெண் பேச வரும் மாப்பிள்ளை வரதட்சணை கேட்பான். அவன் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால் பெண்ணைப் பார்த்துவிட்டு திருமணம் செய்ய முடியாது என்று கூறுவான். எனவே பெண் குழந்தை பிறந்துவிட்டால் அன்றிருந்து பெற்றோர்களுக்கு கவலை ஆரம்பமாகிவிடுகின்றது.

சொகுசு வாழ்வை விட்டுவிட்டு தந்தை இரத்தத்தை வேர்வையாய் சிந்துவார். அவர் கொடுக்கும் பணத்தை தாய் சிறிது சிறிதாக சேமிப்பாள். மகள் பருவ வயதை அடைந்துவிட்ட செய்தி மகிழ்சி தரும் செய்தியாக இருந்தாலும் அதை நினைத்து அவளால் மகிழ முடியாது.

திருமணத்துக்கு தகுதியாகிவிட்டாலே. இவளுடைய திருமணத்துக்கு என்ன தயார் செய்து வைத்துள்ளோம் என்று நினைத்து அழுகை வரும். தங்கையை கரை சேர்ப்பதற்காக அண்ணும் தன்னுடைய திருமண கணவை தியாகம் செய்து வெளிநாட்டுக்ச் சென்று படாதபாடு பட்டு சம்பாதிப்பான். இப்படி செல்பவர்களில் பல அண்ணன்மார்கள் வெளிநாட்டிலேயே மடிந்து ஊருக்கு வரும்போது ஜனாஸாவாக வரும் நிகழ்வுகளும் உண்டு.

பிச்சையெடுக்கும் அவலம்

இவ்வாறு பாடுபட்டு சேர்த்த பணம் போதாது என்று மிருகபுத்தியுள்ள மாப்பிள்ளை கூறினால் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி வரதட்சணை கொடுக்க வேண்டி வரும். வட்டி கடனில் சிக்கிவிட்டால் காலம் முழுக்க கடனாளியாக இருந்து மரணிக்க வேண்டியது தான். இவன் வட்டி என்ற பெரும்பாவத்தில் விழுவதற்கு வரதட்சணையே காரணம்.

சொந்த வீடு வைத்திருப்பவன் மகளை கரைசேர்ப்பதற்காக அதை விற்று விட்டு நடுத்தெருவுக்கு வந்துவிடுவான். ஒன்றுமில்லாதவன் வேறு வழியில்லாமல் மானத்தை மறந்துவிட்டு ஒவ்வொரு பள்ளிவாசல்களாகச் சென்று பாவா குமர் காரியமாக வந்திருகிறேன். 

எனக்கு உதவி செய்யுங்கள் என்று பிச்சையெடுக்கும் அவலத்தை நம் நாட்டில் காணலாம். இந்த அவலத்திற்கு வரதட்சணையே காரணம். பிச்சையெடுக்க அஞ்சுபவன் திருமணம் ஆகாத தனது மகளை பார்த்துப் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பான். பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டதே. அவளை விட வயதில் மூத்தவளான நமது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்று குமுறுவான்.