02) நேசத்திற்குரியவர் யார் ?
நேசத்திற்குரியவர் யார் ?
தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்:(புகாரி: 15),(முஸ்லிம்: 69)
விளக்கம்:
இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது இந்த நபிமொழியை சரியாகப் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்களிடம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
மார்க்கச்சட்டங்கள் என்று வழக்கத்தில் இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை நிராகரித்து விட்டு, ‘எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள், என் தந்தை சொன்னார், என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.
இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக் கொள்வார்கள்