02) நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது
02) நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
வேதத்தை மக்களுக்கு விளக்குவதற்காக போதனையை அதாவது ஹதீஸை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். ஹதீஸிற்கும் குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.
குர்ஆன் மட்டும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே. இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அவனுடைய கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் இந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகிவிடும். தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)
திருக்குர்ஆன் கூறும் இக்கருத்தையே நாமும் கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை குர்ஆன் அடிப்படையில் தான் அமைந்திருந்தது. அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு ஒத்திருக்கும். அல்லது குர்ஆனிற்கு விளக்கமாக இருக்கும். குர்ஆனிற்கு மாற்றமாக அவர்களின் வாழ்க்கையில் எந்த சிறு அம்சத்தையும் காண முடியாது.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் பின் ஹிஷாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால்,இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)