02) கடனில் கிடைத்த பரக்கத்
02) கடனில் கிடைத்த பரக்கத்
என் தந்தை தன் மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். எனவே, நான் அவருக்குக் கடன் தந்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்கு பதிலாக பேரீச்சங் கனிகைளை எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். அதற்கு (உடன்பட) அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக் கொள்வதால் (தம் உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதரிடம் (என்னிடம்) தெரிவி’ என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும் உமர்(ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து (இறைவனின் அருளால் அதில்) பெருக்கம் ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு, ‘உன் (தந்தையின்) கடன்காரர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு’ என்று கூறினார்கள். என் தந்தை எவருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்தோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். மேலும், பதின்மூன்று வஸக்கு பேரீச்சங் கனிகள் எஞ்சிவிட்டன. ஏழு வஸக்குகள் ‘அஜ்வா’ (என்னும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், (அஜ்வா மற்றும் அது போன்றவையல்லாத) மற்றவகைப் பேரீச்சம் பழங்களும், அல்லது ஏழு வஸக்குகள் லவ்னும் ஆறு வஸக்குகள் அஜ்வாவும் மீதமாம்விட்டன.
(அன்று) நான் அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிப் தொழுகையைத் தொழுதேன்; இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘அபூ பக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி’ என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், ‘இறைத்தூதர், பெருக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)