02) ஏகத்துவம்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

ஏகத்துவம்

இறைவனுடைய பண்புகளையும் அதிகாரங்களையும் முறையாக விளங்கி, அப்பண்புகளில் அவனுடன் மற்றவர்களை இணையாக்கி விடாமல் அவனை மட்டும் வணங்கி, அவன் கூறிய விஷயங்களை நம்பிக்கை கொண்டு, அவனது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏகத்துவம் ஆகும்.

ஏகத்துவம் ஒரு மாபெரும் பாக்கியம் 

செல்வமும், சொத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருக்கின்றது. எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரசர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி அவர்களை விட நம்மை மேம்படுத்தியுள்ளான்.

ஒரு மனிதன் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறுமையிலும் பல நன்மைகளை அடைகிறான். எனவே இதைப் பெரும் பாக்கியமாக உணர்ந்து, மரணிக்கும் வரை ஏகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.

12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ‏

என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும், மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள். எனினும் அதிகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.

(அல்குர்ஆன்: 12:38)

கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது

தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு உடல் உழைப்பு தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் அவனை நம்புவதற்கு எந்தக் கஷ்டமும் இல்லை.

பல பொருட்களை வழிபடுவது சிரமமாகும். சகல ஆற்றலுடன் கொண்ட ஒரே ஒரு இறைவனை வழிபடுவது இலகுவானதாகும். இணை வைக்கக்கூடாது என்பதைத் தான் அல்லாஹ் நம்மிடத்தில் முதலில் எதிர்பார்க்கிறான்.

عَنْ أَنَسٍ، يَرْفَعُهُ
إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ، أَنْ لاَ تُشْرِكَ بِي، فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்’ என்று பதிலளிப்பான்.

அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை’ என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

(புகாரி: 3334)

ஏகத்துவமே முதன்மையானது

ஒவ்வொரு மனிதனும் முதலில் ஓரிறைக் கொள்கையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். ஏகத்துவத்தை ஏற்ற பிறகு தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். ஏகத்துவம் இஸ்லாத்தின் முதல் முக்கியக் தூணாக இருக்குறது.

يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ
لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ اليَمَنِ قَالَ لَهُ: «إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الكِتَابِ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى، فَإِذَا عَرَفُوا ذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلَّوْا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ»

நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 7372)

மறைவான விஷயங்களை நம்ப வேண்டும் 

ஒரு முஸ்லிம் அவசியம் நம்ப வேண்டிய விஷயங்களை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இவற்றை நம்பினால் தான் ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக நாம் இருக்க முடியும். இவற்றை மறுத்து விட்டால் இறை மறுப்பாளர்களாக மரணிக்கும் நிலை ஏற்படும்.

அல்லாஹ்வையும், தூதர்களையும், வானவர்களையும், வேதங்களையும், சொர்க்கம் நரகத்தையும், மறுமையையும், மண்ணறை வாழ்க்கையையும் விதியையும் நாம் நம்ப வேண்டும்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ .

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 50)

கலிமாவை எப்படி மொழிய வேண்டும்?

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இந்தக் கலிமா சொர்க்கத்தின் சாவியாக இருக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

சாவியை வைத்துத் திறக்க வேண்டுமானால் அந்த சாவிக்குப் பற்கள் இருக்க வேண்டும். பல் இல்லாத சாவியை வைத்து எதையும் திறக்க முடியாது. லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் தான். இந்த வார்த்தையின் பொருளை விளங்காமல் இதன் கருத்துக்கு மாற்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் இந்த வார்த்தையை வாயால் மொழிவதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படாது

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையின் பொருளை விளங்கி செயல்படாத காரணத்தினால் தான் சமுதாய மக்கள் இணை வைப்பில் இலகுவாக ஈடுபட்டு விடுகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கிடையாது என்று வாயால் மொழிவதோடு அதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கட்டளையிடுகிறது.

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ

(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

(அல்குர்ஆன்: 47:19)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்தவராக எவர் மரணிக்கிறாரோ அவர் சொர்க்கம் புகுந்துவிட்டார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

(அஹ்மத்: 434)

இந்தக் கலிமா கூறும் கருத்தை மனதில் ஆழப்பதித்து அதில் தடம் புரளாமல் உறுதியாக வாழ்ந்து வந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 128)

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 52)

வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையை முறையாகப் புரிந்து அதன் கருத்திற்கு முரணில்லாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் இந்த வார்த்தை மறுமையில் நமக்கு மிகப் பலனாக இருக்கும் நன்மை தீமைகள் எடை போடப்படும் தராசில் மிகுந்த எடை கொண்ட நன்மையாக இந்த வார்த்தை விளங்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் படைப்பினங்கள் கூடியிருக்கும் போது எனது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அழைக்கப்படுவார். அவரிடம் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு (பாவ)ஏடும் பார்வை எட்டுகின்ற அளவிற்கு (பெரிதாக) இருக்கும்.

“இவற்றில் எதையாவது நீ மறுக்கிறாயா? காவலர்களான எனது எழுத்தர்கள் (வானவர்கள்) உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா?” என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “(பாவங்கள் செய்ததற்கான) காரணம் ஏதும் உள்ளிடத்தில் உண்டா?” என்று இறைவன் கேட்டான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “உனக்கு நம்மிடத்தில் நல்ல வாழ்வே உள்ளது.

இன்றைய தினம் நீ அநீதியிழைக்கப்பட மாட்டாய்” என்று இறைவன் அப்போது ஒரு சிறிய அட்டை வெளிவரும். அதில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளார் என்று நான் நம்புகிறேன்) என்று இருக்கும்.

“உன்னுடைய (நன்மை தீமையின்) எடையை நிறுத்துப்பார்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அவர் “எனது இறைவா!. இந்தப் பெரும் (பாவ) ஏடுகள் இருக்கும் போது இந்தச் சிறிய அட்டை என்னவாகும்?” என்று கேட்பார். அதற்கு இறைவன் “உனக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது” என்று கூறுவான். பெரும் (பாவ) ஏடுகள் (தராசின்) ஒரு தட்டிலும் அந்தச் சிறிய அட்டை மறு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பெரும் ஏடுகள் எடை குறைந்து விடும். சிறிய அட்டை கனத்து விடும். அல்லாஹ்வின் பெயர் இருக்கும் போது எதுவும் கனக்காது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

(திர்மிதீ: 2563)

எனவே எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு போதும் அல்லாஹ்விற்கு இணை வைத்து விடாமல் லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை கூறும் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்து ஈருலகில் வெற்றியடையும் பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

மறுமை நாளின் அடையாளம்

இன்றைய முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டு அவனை நம்புகிறார்கள். நம் சமுதாயத்தில் பெரும்பாலோரின் நிலை இப்படித் தான் இருக்கிறது.

 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன்: 12:106)

நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது, இணை வைக்காமல் ஒரிறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாபெரும் சமுதாயத்தை உருவாக்கிச் சென்றார்கள்.

இதன் பிறகு வரக்கூடிய சமூகத்தாரில் பலர் இணை வைப்பில் விழுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவர்கள் கூறியது போன்றே, தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு இணை வைத்துக் கொண்டிருக்கின்ற மக்களைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமூகத்தில் சில கூட்டத்தார்கள் இணை வைப்பாளர்களுடன் இணையும் வரை மறுமை நாள் வராது. என் சமூகத்தாரில் சில கூட்டத்தினர் சிலைகளை வணங்கும் வரை மறுமை நாள் வராது.

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)

(அபூதாவூத்: 3710)