01) முன்னுரை
முன்னுரை
திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது.
வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட அனுமதியில்லை. மனிதனை பாதிக்கும் எந்த செயலானாலும் அதை வன்மையாக கண்டிக்கின்ற மார்க்கம் இஸ்லாம். ஆண்மீக ரீதியில் இது போன்ற பாவங்களை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாமைத் தவிர வேறில்லை எனலாம்.
ஆனால் இஸ்லாமிய சமூகம் இஸ்லாமை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் வரதட்சணைக் கொடுமை நம் சமுதாயத்திலும் தலைவிரித்தாடுகின்றது. சொல்லப்போனால் மற்ற சமூகங்களை விட நம் சமூகத்தில் தான் அதிக அளவில் வரதட்சணை வாங்கப்படுகின்றது.
முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாமைப் பற்றி நாம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் எழுப்புகின்ற சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் வாங்கும் அளவுக்கு மற்ற சமூகங்களில் அதிக வரதட்சணை வாங்கும் பழக்கமில்லை. முஸ்லிம்கள் ஏன் அதிக வரதட்சணை வாங்குகிறார்கள்? என்று கேட்கின்றனர். இக்கேள்விக்கு இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் சொல்ல முடியும்?
இவர்கள் இஸ்லாமை கடைபிடிக்காத காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தை செய்கிறார்கள் என்று கூறுவதைத் தவிர வேறு பதில் சொல்ல முடியாது. வரதட்சணையால் ஏற்படும் விளைவுகளையும் இது குறித்து இஸ்லாம் கூறுவதையும் மக்கள் அறியாத காரணத்தால் இந்த பாவத்தை சர்வசாதாரணமாக செய்கின்றனர். இன்று கணிசமான மக்கள் இந்த பாவத்திருந்து மீண்டு வரதட்சணை வாங்காமல் நபிவழி அடிப்படையில் திருமணம் செய்கின்றனர்.
எனினும் பலர் இன்னும் இது பற்றிய தெளிவில்லாமலும் அச்சமில்லாமலும் இருக்கின்றனர். வரதட்சணை வாங்குவோருடன் ஒப்பிடுகையில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை சமுதாயத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே வரதட்சணை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய தமிழகத்தில் அதற்கு எதிராக பல மார்க்க அறிஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இவர்களின் உரையின் மூலமாக பலர் இப்பாவத்திருந்து விடுபட்டார்கள். வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் ஒரு கூட்டம் உருவானது. அல்லாஹ் இவர்களுக்கு மகத்தான் நற்கூலியை வழங்குவானாக!
இந்நூலை நாம் விற்பனை செய்யவில்லை. இதை படிக்கும் சகோதரர்களிடம் நாம் ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கின்றோம். இதில் சொல்லப்பட்டுள்ள உபதேசங்களுக்கு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கும் இதனை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு. அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!
இப்படிக்கு
S. அப்பாஸ் அலீ MIsc