01) முன்னுரை

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

01) முன்னுரை

கடவுள் ஒருவன் தான் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தக் கொள்கையைப் பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள்; அல்லது அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

இதனால் இறைவன் ஒருவன் என்ற சரியான கொள்கைக்கு மாற்றமான செயல்பாடுகளில் ஈடுபட்டுப் பல கடவுள் கொள்கைக்குச் சென்று விடுகிறார்கள். கடவுள் ஒருவன் தான் என்று இவர்களின் நாவு கூறினாலும் இவர்களின் நம்பிக்கையும். செயல்பாடுகளும் பல கடவுட்கொள்கையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்லாம் மட்டுமே ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாகக் கூறுவதுடன் அந்தக் கொள்கைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லா நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் தகர்த்து எறிகிறது. தவறான கொள்கைக்கு அழைப்பு விடும் காரணிகளை அறிந்து அவற்றையும் கிள்ளி எறிகிறது. ஓரிறைக் கொள்கையை விட்டு நழுவிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கிறது. அதனால் தான் தனது தனித் தன்மையை இஸ்லாம் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இனியும் தக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

இஸ்லாம் கூறும் சரியான ஏகத்துவக் கொள்கையைப் பல முஸ்லிம்கள் புரியாத காரணத்தினால் ஓரிறைக் கொள்கைக்குப் பங்கம் விளைவிக்கும் இணை வைப்புக் காரியங்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்லாமும் எல்லா மதங்களைப் போன்றது தான் என்று பிற மதத்தினர் நினைக்கின்ற வகையில் இவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.

இணை வைப்பு என்ற பாவம் மற்ற பாவங்களைப் போன்றதல்ல. திருட்டு, விபச்சாரம், பொய், அவதூறு போன்ற விஷயங்கள் பாவமாக இருந்தாலும் இவற்றை ஒருவன் செய்வதால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட பாட்டான் மாறாக பாவியாகி விடுவான். ஆனால் இணை வைப்பு என்ற பாவத்தைச் செய்து விட்டால் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகின்றது. மக்களிடம் அவன் முஸ்லிமாக இருந்தாலும் இறைவனிடத்தில் அவன் முஸ்லிமாகக் கருதப்பட மாட்டான்.

ஒரிறைக் கொள்கையில் தடம் புரண்டு விடாமல் ஏகத்துவவாதியாக மரணித்தால் தான் மறு வாழ்வில் வெற்றி உண்டு.

நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். ‘தங்களுக்குப் பிறகு யாரிடமும்’ அல்லது ‘தங்களைத் தவிர வேறு யாரிடமும்’ அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கக்கூடாது” என்று வினவினேன், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 62)

நபியவர்கள் கூறியவாறு ஈமானில் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஏகத்துவக் கொள்கையைப் பற்றியும் அதைத் தகர்த்தெறியும் இணை வைப்புக் காரியங்களைப் பற்றியும் தெளிவாக நாம். அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாத்தின் தூய கொள்கையை முழு அளவில் நம்மால் கடைப்பிடித்து முஸ்லிமாக வாழ முடியும்.

சமுதாயம் இத்தகைய நிலையை அடைவதற்கு உதவி செய்ய வேண்டும். என்ற நன்னோக்கில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. ஏகத்துவத்தை விளக்குவதற்கு, ‘அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்’ என்று சொல்வதைக் காட்டிலும் ‘அல்லாஹ்விற்கு எதனையும் யாரையும் இணையாக்கக் கூடாது’ என்று சொல்வது மிகப் பொருத்தமானதாகும். இணை வைப்பு என்ற நச்சுத் தன்மை மட்டும் முஸ்லிம்களிடமிருந்து அகன்று விட்டால் அவர்கள் உண்மை முஸ்லிம்களாக மாறி விடுவார்கள்.

எனவே தான் இப்புத்தகத்தின் பெரும்பகுதி இணை வைப்பைப் பற்றி விளக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

இப்படிக்கு

S. அப்பாஸ் அலி MISC