01) கிராமவாசியின் ஆசை
கிராமவாசியின் ஆசை
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான்.
அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும்.
அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.
(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),