01) அறிமுகம்

நூல்கள்: பைபிளில் நபிகள் நாயகம்

01) அறிமுகம்

உலகில் ஏராளமான மதங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பல மதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. ஆயினும், வாழுகின்ற மதங்களில் முக்கியமான இடத்தை, இஸ்லாமும், கிறிஸ்தவமும் பிடித்திருக்கின்றன. இவ்விரு மதங்களும் நுழையாத நாடுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு முழு உலகையும் இவ்விரு மதங்களும் வசப்படுத்தியுள்ளன.

இவ்விரு மதங்களுக்கிடையே முக்கியமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போலவே, பல ஒற்றுமைகளும் இவ்விரு மதங்களுக்கிடையே நிலவுகின்றன.

  • இயேசு தந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாமும் வழிமொழிகிறது.
  • இயேசுவிற்கு முன்னாள் ஏராளமான தீர்க்கதரிசிகள் தோன்றியதாகவும், அவர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டதாகவும், கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இதை இஸ்லாமும் ஒப்புக் கொள்கிறது.
  • இயேசுவைக் கூட அத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
  • இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் பரலோக ராஜ்யம் இருக்கிறது. அங்கே, கர்த்தர் நியாயத் தீர்ப்பு வழங்குவார்; எனவே அந்த நாளை அஞ்சி இவ்வுலக வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இஸ்லாம் அத்தகைய நியாயத் தீர்ப்பு நாள் இருப்பதை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.

இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகளில் இவை சில :

அதே நேரத்தில், ஒரு சில அடிப்படைக் கொள்கைகளில் இஸ்லாம் கிரிஸ்தவத்துடன் முரண்படுகிறது. ”இயேசு கடவுளின் குமாரர் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கை”.

”கடவுளுக்குப் பெற்றோரும், பிள்ளைகளும், மனைவியரும், ஏனைய உற்றார் உறவினரும் இருக்க முடியாது என்று இஸ்லாம் தெளிவாகப் பரகடனம் செய்து, இயேசு கடவுளின் குமாரர் என்பதை அடியோடு மறுக்கிறது”

ஆபிரகாம், மோசே போன்ற தீர்க்கதரிசிகளில் இயேசுவும் ஒருவர். அவர் கடவுளின் குமாரர் இல்லை என திட்டவட்டமாக இஸ்லாம் தெரிவித்து விடுகிறது.

”முதல் மனிதர் ஆதாம் கர்த்தரின் கட்டளையை மீறி, பாவம் செய்தார். எனவே, அவரது வழித்தோன்றல்களாகிய மனிதர்கள் பிறக்கும் பொழுதே பாவிகளாகப் பிறக்கின்றனர்” என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாகும்.

முதல் மனிதர் ஆதாம் பாவம் செய்ததை இஸ்லாம் ஒப்புக் கொண்டாலும், அந்த பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர முடியாது எனவும் ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது எனவும், எதையும் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தை பிறக்கும் போதே பாவியாகப் பிறக்கிறது என்பது பொருத்தமற்ற வாதம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.

இந்த வகையிலும் கிறிஸ்த்தவத்திலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது.

மேலும், பாவிகளாக மனிதர்கள் பிறப்பதால் அதற்குப் பரிகாரம் காணும் வகையில் ஒரு ”பலி” கொடுத்தாக வேண்டும். இயேசு நாதர் தம்மையே ”பலி” கொடுத்து பாவிகளாகப் பிறக்கும் மனிதர்களின் பாவங்களைச் சுமந்த கொண்டார் எனக் கிறிஸ்தவம் கூறுகிறது.

பைபிளின் கூற்றுப்படி இயேசு தாமாக முன் வந்து பலியாகவில்லை. மாறாக, அவர் விரும்பாத நிலையில் எதிரிகளால் பலியிடப்பட்டார். ”என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்” என, அங்கலாய்த்திருக்கிறார். எனவே தாமாக முன்வந்து தம்மையே பலியாக்கினார் என்று கூறுவது பைபிளுக்கே முரண் என்று இஸ்லாம் கூறுகிறது.

அத்துடன் ஒரு வாதத்திற்காக இயேசு தாமாக முன்வந்த பலியாகி இருந்தாலும், அவரது பாவத்திற்குத் தான் அது பரிகாரமாக முடியுமே தவிர, மற்றவர்களின் பாவத்திற்கு அது பரிகாரமாக ஆகாது என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு தந்தை கொலை செய்துவிட்டால் அதற்காக அவரது மகனை உலகில் எந்த நாட்டுச் சட்டமும் தண்டிப்பதில்லை. சாதாரண மனிதர்களே சம்பந்தமில்லாதவர்களைத் தண்டிக்கக் கூடாது என்பதை உணர்ந்திருக்கும் போது, கர்த்தராகிய கடவுள் ஒருவர் பாவத்திற்காக மற்றவர் பலியாவதை எப்படி ஒப்புக் கொள்வார்? மனிதர்களை விட கடவுளின் அறிவு குறைவானதா? என்று அறிவுப் பூர்வமான கேள்விகளை இஸ்லாம் எழுப்புகிறது. இவை இஸ்லாத்திற்கும், கிறித்தவத்திற்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடுகள்.

அது போல், இயேசுவுக்கும், இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் கர்த்தரிடமிருந்து வேதங்கள் அருளப்பட்டதாக கிறித்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டாலும், அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என இஸ்லாம் கூறுகிறது.

ஆயினும், கர்த்தருடைய வார்த்தைகள் முழு அளவுக்கு மாற்றப்பட்டு விட்டன என்று இஸ்லாம் கூறவில்லை. இன்றைக்கு கிறிஸ்தவர்களிடம் வேத நூலாக மதிக்கப்படுகின்ற பைபிளில் கர்த்தருடைய வார்த்தைகள் எஞ்சியிருக்க முடியும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த வார்த்தைகளில் முஸ்லிம்களால் இறுதித் தீர்க்கதரிசியென நம்பப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி எராளமான முன் அறிவிப்புகள் காணப்படுகின்றன.

இயேசுவுக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்தரிசிகளுடைய வேத நூல்களின் தொகுப்பாகக் கருதப்படும் ”பழைய ஏற்பாட்டிலும்” இயேசுவின் போதனைகள் மற்றும் அவரது வரலாற்றுத் தொகுப்பான ”புதிய ஏற்பாட்டிலும் இத்தகைய முன்னறிவிப்புகளை நாம் காண முடிகிறது.

அந்த முன்னறிவிப்பகளை, கிறிஸ்துவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டி, நபிகள் நாயகத்தை அவர்கள் கர்த்தரின் தூதராக ஒப்புக் கொள்வது பைபிளின் கட்டளை என்பதை உணர்த்தவே இந்நூலை நாம் வெளியிடுகிறோம்.

காய்தல், உவத்தல் இன்றி கிறிஸ்தவர்கள் இந்த முன் அறிவிப்புகளை, தீர்க்க தரிசனங்களை சிந்திப்பார்களானால் அவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள் என்பதே நம் நம்பிக்கை அந்த நம்பிக்கை நிறைவேற கர்த்தரைப் பிரார்த்திக்கிறோம்.

P. ஜைனுல் ஆபிதீன்