ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும்

ஹிஜ்ரி 1439 பூத்திருக்கின்றது. பிறை அடிப்படையில் அமைந்த புத்தாண்டு உதயமானதும் முஸ்லிம்கள் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

குல்ல ஆம் வ அன்தும் ஃபீ கைர் – நீங்கள் நலமாயிருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மலரட்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் உதயமாகட்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று அரபியில் சொன்னதும் இது மார்க்கத்தில் உள்ள ஒரு துஆ அல்லது வாழ்த்து என்று பாமர முஸ்லிம்கள் தவறாக விளங்கி விடுகின்றனர்.

ஆங்கில ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துச் சொல்லக் கூடாது; இது இஸ்லாமிய ஆண்டு, அதனால் நாம் வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியுமா? என்று கருதுகின்றனர்.

சூரிய ஆண்டு துவங்கினாலும், சந்திர ஆண்டு துவங்கினாலும் அதற்கு வாழ்த்துச் சொல்வது மார்க்கத்தில் இல்லை. இது போன்ற  வாழ்த்துக்கள் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டியும் கற்றும் தராத பித்அத்தாகும்.

பிறைக் கணக்கில் அமைந்த ஆண்டுக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது. அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த – நாடு துறந்து சென்ற – தியாகப் பயணத்தைப் பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.

பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா படையெடுத்து வந்த நிகழ்வு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.  அதை வைத்து ஆமுல் ஃபீல் – யானை ஆண்டு என்று அரபியர்கள் கணக்கிட்டனர்.  நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்பட்ட பிறகும் இந்நிலை தொடர்ந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணமாகின்ற வரையிலும் இதே நிலை தான் நீடித்தது.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னால் உமர் (ரலி) காலத்தில்  ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் தான் நபியவர்களின் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஹிஜ்ரி ஆண்டு முஸ்லிம்களிடம் அறிமுகமாகின்றது. உமர் (ரலி) அவர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்கள்.

பிறந்த நாளுக்கு மார்க்கத்தில் முக்கியத்துவம் இல்லை என்பதால், கிறித்தவர்கள் ஈஸா நபி பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வருடங்களைக் கணக்கிட்டது போல் நபிகள் நாயகத்தின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிடாமல், ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்த நிகழ்வை வைத்து ஆண்டைக் கணக்கிட்டிருந்தால் அது மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது நபி (ஸல்) யானை ஆண்டை வைத்துக் கணக்கிட்டது போல் கணக்கிட்டிருக்கிலாம். இருப்பினும், ஹிஜ்ரத்தை வைத்து உமர் (ரலி) அவர்கள் கணக்கிட்டார்கள்.  இவ்வாறு கணக்கிட்டது வஹீயின் அடிப்படையில் இல்லை என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கைக்காக மக்காவிலிருந்து நாடு துறந்து வந்த (ஹிஜ்ரத் என்ற) இந்த தியாகப் பயணமும், மதீனாவில் உள்ள மக்களின் (நுஸ்ரத் என்ற) ஆதரவும் அரவணைப்பும் தான் இஸ்லாமிய எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்ற காரணத்தால் ஹிஜ்ரி ஆண்டு உண்டாக்கப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டுக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அது நிர்வாக வசதிக்காக நபியின் காலத்துக்குப் பின் உருவாக்கப்பட்டதாகும்.

ஹிஜ்ரத் என்ற இந்த தியாகப் பயணம் அல்லது புனிதப் பயணம் பல இறைத்தூதர்கள் மேற்கொண்ட பயணமாகும். ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இறைத்தூதர்கள் இந்த ஹிஜ்ரத்தை விட்டும் தப்ப முடியாது எனும் அளவுக்கு அல்லாஹ் சொல்கின்றான். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்க முடியும்.

“உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்’’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இ(ந்தச் செய்தியான)து, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.

(அல்குர்ஆன்: 14:13-14)

இப்ராஹீம் நபி அவர்கள் ஹிஜ்ரத் செயததை நாம் பார்க்க முடிகின்றது.

“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ என்று (இப்ராஹீம்) கூறினார்.

(அல்குர்ஆன்: 29:26)

ஜிஹாத் பெண்களுக்குக் கடமையல்ல. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்’ என்றார்கள்.

(புகாரி: 1520)

ஆனால் ஹிஜ்ரத் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையான வணக்கமாகும்.

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 8:72)

இந்த வசனம்  இறை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதாது. அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் அவசியம் ஏற்பட்டால் ஹிஜ்ரத்தும் செய்ய வேண்டும்; அவ்வாறு   ஹிஜ்ரத் செய்யாதவர்களிடம் அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்று தெரிவிக்கின்றது. இவ்வசனத்தில் ஆண்களுக்கு மட்டும் ஹிஜ்ரத் என்று வரவில்லை.

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’’ என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்’’ என்று இவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?’’ என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 4:97)

இந்த வசனம் ஹிஜ்ரத் செய்யாதவரை மரணவேளையில் கடுமையாக மலக்குகள் பிடிப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இந்த வசனங்களும், இன்னும் பல வசனங்களும் ஹிஜ்ரத் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கடமை என்று  கூறுகின்றன. பின்வரும் வசனம் இதை உறுதிப்படுத்தி விடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 60:10)

நபித்தோழர்களில் ஆண்கள், பெண்கள், அனைவருமே ஹிஜ்ரத் செய்தனர். முதலில் அபீசீனியாவுக்கும் பின்னர் மதீனாவுக்கும் ஹிஜ்ரத் செய்தனர்.

நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்’ என்று கூறினார்கள். ‘அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்’ என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் செய்த சிறப்பு தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு’ என்று கூறினார்கள் என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.

(புகாரி: 4231)

ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஹிஜ்ரத் கடமை என்பதை மேற்கண்ட  குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஒரு சாரார் இப்படி ஏகத்துவக் கொள்கைக்காக நாட்டைத் தியாகம் செய்து வரும் போது இன்னொரு சாரார் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, அடைக்கலம் கொடுத்து அரவணைக்கவும் சொல்கின்றது மார்க்கம். இதோ அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன்: 8:74)

உண்மையாக நம்பிக்கை கொண்டோர் என்றால் அவர்கள் நாட்டைத் தியாகம் செய்து வரக்கூடிய மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் அல்லாஹ் அடித்துச் சொல்கின்றான்.

இந்த வசனத்திற்கேற்ப, அன்சாரிகள் என்ற மதீனாவாசிகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள். தங்களிடமிருந்தவற்றை எல்லாம் அகதிகளின் மறுவாழ்விற்காகத் தாரை வார்த்தார்கள். தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதனால்தான் ஹிஜ்ரத் எனும் சொல் உலக முஸ்லிம்களை தன்னை நோக்கித்  திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

ஆனால் சமுதாயம் அதை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றதா? என்றால் இல்லை. அதன் விளைவு தான், சிதைந்து சிதிலமாய்ப் போன, சின்னாபின்னமாகி விட்ட சிரியாவிலிருந்து குடும்பத்துடன்  தப்பி ஐரோப்பாவை நோக்கி அடைக்கலம் தேடி, பயணம் சென்ற அப்துல்லாஹ் ஆயிலானின் படகு கவிழ்ந்து தனது 35 வயது மனைவி ரீஹானையும், 5 வயது காலிபையும் 3 வயது ஆயிலான் குர்தியையும் கடல் நீருக்குப் பலி கொடுத்து, கண்ணீரில் மிதந்த சம்பவம்.

கரை ஒதுங்கிய 3 வயது ஆயிலான் குர்தியின் உடல் உலகின் உள்ள மக்களின் இதயங்களை உலுக்கியது. இரத்த நாளங்களை உறையச் செய்தது. குறிப்பாக, அவனது அந்த ஈர உடல் உலக இஸ்லாமிய மக்களை நோக்கி, ‘உங்களிடம் நுஸ்ரத் என்ற உதவும் மனப்பாங்கும் மனித நேய மாண்பும் இருக்கின்றதா? அன்சாரிகளின் அந்த இதயங்கள் உங்களுக்கு இல்லையா?’ என்று உரக்க கூவிக் கேட்டது.

‘பல இலட்சக்கணக்கான மக்களுக்கு  கிறிஸ்துவத்தை மார்க்கமாக, முக்கடவுள் கொள்கையைக் கொண்ட ஐரோப்பா அடைக்கலம் கொடுத்தது! ஆதரித்தது! அரவணைத்தது!

இஸ்லாத்தை மார்க்கமாக, ஏகத்துவத்தை கொள்கையாகக் கொண்ட அரபியாவே! நீ அரவணைத்தாயா? அடைக்கலம் கொடுத்தாயா? ஆதரவுக் கரம் நீட்டினாயா?’ என்று ஆய்லான் குர்தியின் ஈர உடல் கேட்டது. அதற்கு இஸ்லாமிய உலகம் அளித்த பதில், இல்லை என்ற இரத்தினச் சுருக்கமான வார்த்தையைத் தான்!

ஹிஜ்ரத், நுஸ்ரத் என்ற வார்த்தைகள், சக்தியுள்ள முஸ்லிம் நாடுகளிடத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான்.

இப்போது அதே கேள்வியை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளை நோக்கி ரோஹிங்கியா முஸ்லிம்கள் கேட்கின்றனர். சிரியா முஸ்லிம்களைப் போலவே அடைக்கலம் தேடி, ஆதரவு தேடி  நீர், நிலம் வழியாக மியான்மைரை ஒட்டி அமைந்திருக்கின்ற இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சீனா, பங்களாதேஷ் என்று திக்கற்ற முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Arakan Rohingya Salvation Army (ARSA) – அராக்கன் ரோஹிங்கியா விடுதலைப் படை கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமிலும் ஏராளமான காவல்துறை சோதனைச் சாவடிகளிலும் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடுத்தது. இதில்  12 இராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் படையில் 59 பேர்கள் பலியாயினர்.

இதனையடுத்து மியான்மர் ராணுவம் ராக்கைன் மாநிலத்தில் தனது அராஜக வேட்டையைத் துவக்கியது. குடிமக்களான ஆண்களை வீடுகளுக்குள் குண்டுக் கட்டாக அடைத்து விடுகின்றனர். பின்னர் குய்யோ முறையோ அவர்கள் எழுப்புகின்ற கதறல் குரல் கூட வெளியே கேட்க முடியாத அளவுக்குத் தீ வைத்து அவர்களை உயிருடன் எரித்தே கொன்று விடுகின்றனர். இவர்களின் நிலை உண்மையில் அல்குர்ஆன் வசனங்கள் கூறுகின்ற முஸ்லிம்களுக்கு ஒத்த நிலையாகவே இருக்கின்றது.

எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

(அல்குர்ஆன்: 85:4-7)

வீடுகளுக்கு உள்ளே வெந்து வெடித்து சிதறி, கரிக்கட்டையாகிக் கொண்டிருக்கும் தங்கள் கணவன்கள், பிள்ளைகள், சகோதரர்கள் பற்றிய சோகத்திலிருந்து அந்தப் பெண்கள் வெளியே வருவதற்கு முன்னால் அவர்களை இராணுவ வெறியர்கள், வேட்டை நாய்கள் கதற கதற கற்பழித்தே கொன்று விடுகின்றார்கள். பச்சிளங் குழந்தைகளையும் பாரபட்சமின்றி படுகொலை செய்து விடுகின்றனர்.

கற்பழிப்பு என்பது உலக ராணுவத்தினர் ஒருங்கிணைந்து சந்திக்கின்ற ஒரு மையப் புள்ளியாகும். அதில் பர்மீய ராணுவம் என்ன விதிவிலக்கா பெறப் போகின்றது? ஒரு போதும் கிடையாது. இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் உடுத்திய உடைகளுடன் தப்பி ஓடி வருகின்றார்கள். அவர்கள் செய்த பாவமென்ன?

“புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்’’ என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.

(அல்குர்ஆன்: 85:8)

தப்பி வரக்கூடிய அவர்களை உயிருடன் தப்பவும் விடவில்லை. கால் கடுக்க தூக்கி வரும் குழந்தைகள், முதியோர்களுடன் அவர்கள் கடந்து வருகின்ற கரடு முரடான பாதைகளில் கன்னி வெடி வைத்து அவர்களைக் கொல்கின்றார்கள்.  இப்படிக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!

கட்டிய துணியோடு கண்ணீரும் கம்பலையுமாக வரக் கூடிய அவர்களைக் கடல் அக்கரையிலும் கொண்டு போய் சேர்க்கின்றது.  அதே சமயம் அதே கடல் அவர்களை அடுத்த உலகுக்கும் அனுப்பி விடுகின்றது. அப்படிக் கடலால் மறு உலகிற்கு அனுப்பப்பட்டவர்களின் சடலங்கள் சலனம்,     சஞ்சலமில்லாமல் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய சடலங்களின் எண்ணிக்கை இதுவரை நூறு!

இப்படிப்பட்ட வெறியர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நீர், நிலம் எந்த மார்க்கமாக இருந்தாலும் வரும் வழிகளில் சாவே வழி மறித்தாலும் அவற்றில் எதையும் கடந்து வர அந்த மக்கள் தயாராகி விட்டார்கள். மியான்மரிலிருந்து 81 கிலோ மீட்டரில் பங்களாதேஷ் நாட்டின் காக்ஸ் பஜார் என்ற மாவட்டம்! இது வரைக்கும் வயற்காடு, மலைப்பாதை என்ற நிலம் மற்றும் வழியாக அங்கு வந்தோர் எண்ணிக்கை மட்டும் 6 இலட்சம்! ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த உலக நாடுகளில் பாராட்டப்பட வேண்டிய ஒரு நாடு என்றால் அது பங்களாதேஷ் நாடு தான்!

முஸ்லிம்களை இந்தக் கொடுமையான நிலைக்குத் தள்ளியது  மியான்மரின் ராணுவம். அந்த ராணுவத்தை எதிர்த்து அரை நூற்றாண்டு காலம் போராடி வீர மங்கை என்று பெயரெடுத்த, அதற்காக நோபல் பரிசும் பெற்ற ஆங் சான் சூகி  இப்போது ஆட்சியில் வீற்றிருக்கின்றாள். ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவள் இன்று அரக்கியாக மாறிவிட்டாள். அதனால் தான் இதுவரையிலும் பிணத்தை விடவும் கேடு கெட்டப் பேசாமடந்தையாக வாய்க்குப் பூட்டுப் போட்டு விட்டு மவுன விரதம் காத்துக் கொண்டிருக்கின்றாள்.

ஹிட்லரின் உடன் பிறந்த சகோதரன் மோடியோ இந்தியாவில் அடைக்கலமாகியிருக்கின்ற 40,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி, பர்மா வெறி நாய்களிடமே, வேட்டை நாய்களிடமே திரும்ப அனுப்பவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நேரத்தில் உலக முஸ்லிம் சமுதாயமே! இஸ்லாமிய ஆட்சியாளர்களே! சொந்த நாட்டை விட்டு உயிர் காக்க ஓடி வரும் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீ செய்யப் போவதென்ன?

“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ் வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

(அல்குர்ஆன்: 4:75)

அல்லாஹ் சொல்வது போன்று போர் தொடுக்க வேண்டும். சரி அதைச் செய்ய முடியவில்லையா? அவர்களுக்கு உங்கள் நிலத்தில் அடைக்கலம் கொடுக்கலாம் அல்லவா?

இதை நீங்கள் செய்யவும், அவர்களுக்கு உதவவும் முன் வரவில்லை என்றால்  மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உண்மையான முஸ்லிம்கள் அல்லர் என்பதே அதன் பொருள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது என்று உங்களை எச்சரித்துக் கொள்கின்றோம்.