10) ஹிஜாப்
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.