053. ஹஜ்ஜில் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடாதா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா?

பதில்

முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன்: 2:197)

எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.  எனினும், எதனையும் மிகவும் மென்மையான முறையில் புரியும் படி எடுத்துச் சொல்லித் தடுப்பதே சிறந்த முறையாகும். இல்லையெனில் நன்மைக்கு பதில், தீமையில் தான் முடியும்.