02) ஹஜ்ஜின் சிறப்புக்கள்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

ஹஜ்ஜின் சிறப்புக்கள்

ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.

அமல்களில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவதுஎன்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுஎன்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 26, 1519)

ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1773)

அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத், ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1520, 2748)

உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1521, 1819, 1920)

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.
அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவை யாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.

ஹஜ்ஜின் அவசியம்

மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(அல்குர்ஆன்: 3:97)

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 2380).