ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம்
ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம்
அனைவரின் கைகளிலும் செல்போன்கள் தவழும் இந்தக் காலத்தில் டப்ஸ்மாஷ் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தால் அதிகம் விரும்பப்படும் சீரழிவாக இந்த டப்ஸ்மாஷ் உள்ளது. செல்போன் முகப்பு கேமிராவில் வீடியோ எடுத்தபடி சினிமாவில் வரும் வசனங்களுக்கு வாயசைத்து முகபாவனை காட்டுவதன் பெயர்தான் டப்ஸ்மாஷ் ஆகும். இதில் தனியாக வசனம் பேசுவதும் உண்டு,
அதுபோல ஆண்கள் பெண்கள் இணைந்து பேசுவதும் உண்டு. அவ்வாறு ஆண்களும் பெண்களும் இணைந்து பேசும் டப்ஸ்மாஷ் மூலமாக பல தகாத உறவுகள் உண்டாகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம்,
குன்றத்தூர் அபிராமி. தன் கள்ளக்காதலுக்காக தன் பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு இன்றைக்கு ஜெயிலுக்குள் கிடக்கும் அபிராமியும், அவளது கள்ளக்காதலன் சுந்தரமும் இணைந்து சினிமா வசனத்திற்கு வாயசைத்து முகபாவனைகள் காட்டும் பல டப்ஸ்மாஷ்கள் இப்போது வலைதளம் முழுவதும் வைரலாகப் பரவி வருகின்றது. தன் அன்பான குழந்தைகளை ஒருமுறை கூட அடித்து துன்புறுத்தாத அபிராமி, அந்த அப்பாவிக் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு அவளைத் தூண்டிய கள்ளக்காதல் வலையில் விழ காரணம் இந்த டப்ஸ்மாஷ்.
இதில் அபிராமியும் சுந்தரமும் நெளிந்து குழைந்து பேசி தங்களின் கள்ளக்காதலை வளர்த்துள்ளனர். வீட்டில் பருவமடைந்த பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் விதவிதமான அதிக வசதிகள் கொண்ட செல்போன்களை வாங்கிக் கொடுப்பதோடு சரி, அந்தப் பிள்ளை யாருக்கு போன் செய்கிறது? யார் யாருடன் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளது, அவர்களது செல்போன்களில் எந்த மாதிரியான அப்ளிகேஷன்கள் உள்ளது என்பதை எந்த பெற்றோரும் கண்காணிப்பதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை.
அதுவும் பருவமான பெண் பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுக்கும் வேலையையும் பெற்றோர்கள் செய்து வருகின்றனர். அவர்களின் படிப்புத் தோழமை, வெளிசகவாசம் மற்றும் தனிமை என அனைத்தும் சேர்ந்து அந்தப் பெண்ணை வழிகெடுத்து விடுகின்றது. முன்பெல்லாம் விபச்சாரம் சார்ந்த விசயங்களை வெளியே தேடி போக வேண்டிய காலம் இருந்தது. அதன்பிறகு தொலைக்காட்சி சினிமா வழியாக வீட்டுக்குள் வந்தது விபச்சார தொடர்புகள்.
ஒரு வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி இருக்கும் என்பதால் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும், காரணம் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் நிலை தொலைக்காட்சியில் இருக்கிறது. ஆனால் செல்போன்களின் நிலையோ வேறு. உள்நாட்டு சைத்தான் வெளிநாட்டு சைத்தான் என ஒட்டுமொத்த சைத்தான்களும் இப்போது செல்போன்களைத்தான் தங்களின் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.
அதில் ஒருவகையான சைத்தானிய பார்வைதான் இந்த டப்ஸ்மாஷ் கலாச்சாரம். தங்கள் பிள்ளைகள் டப்ஸ்மாஷ் செய்து அந்த வீடியோவை இணையதளத்தில் பரப்புவதைக் கண்டு பல பெற்றோர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் பிள்ளைகள் வழிதவறி வீட்டை விட்டு வெளியேறிப் போகும் போதுதான் அதனுடைய விபரீதம் பெற்றோர்களுக்குத் தெரியவரும். அதற்கு இந்த குன்றத்தூர் அபிராமி ஒரு சிறந்த உதாரணம், எனவே பெற்றோர்களே உஷார்!
Source: unarvu ( 14/09/18 )