ஸைத் இப்னு ஹாரிஸா-வுக்கு நபி அறிவுரை கூறிய போது
அனஸ் (ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்’ என்று கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும்(அல்குர்ஆன்: 33:37) ➚வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்’ எனும் (அல்குர்ஆன்: 33:37) ➚வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது’ என்று அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்.’ எனும் இந்த (அல்குர்ஆன்: 33:27) ➚வது) வசனம் (நபி (ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது.