5) ஸஹாபாக்களை பின்பற்றலாமா?
ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா?
ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஏதும் இல்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் கண்டோம்.
இதற்கு மறுப்பு கூற முடியாதவர்கள், ‘நபிவழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் சில நபித் தோழர்களின் கூற்றும், செயல் விளக்கமும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றன’ என்று வாதிடுகின்றனர்.
முஸ்லிம்கள் வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை, செய்ததைக் கூட மார்க்கமாகச் செய்ய வேண்யதில்லை என்பதையும் விளங்காத காரணத்தால் நபித் தோழர்களின் கூற்றை ஏற்க வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர்.
வஹீ இல்லாமல் தேனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித் தோழர்களின் கூற்றைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன்: 7:3) ➚
என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:38) ➚
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! (அல்குர்ஆன்: 6:106) ➚
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 24:51) ➚
‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!’ என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (அல்குர்ஆன்: 24:54) ➚
‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:31) ➚
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன்: 8:46) ➚
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன்: 6:153) ➚
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன்: 4:59) ➚
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன்: 33:36) ➚
எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3) ➚
இந்த வசனங்கள் யாவும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.
நபித்தோழர்கள் சிறப்பு
நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள்; நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).(புகாரி: 3673)
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி).(புகாரி: 2651)
அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன்: 9:100) ➚ இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (அல்குர்ஆன்: 9:117) ➚
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன்: 57:10) ➚
இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.