ஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து
முன்னுரை
ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம்.
ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.
இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகத் தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.
இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள்.
அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க
பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது. துன்பங்களை
நீக்குபவன் யார்?
மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.
قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ
ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.
நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!(அல்குர்ஆன்: 7:188) ➚
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا
قُلْ اِنِّىْ لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا
قُلْ اِنِّىْ لَنْ يُّجِيْرَنِىْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!(அல்குர்ஆன்: 72:20) ➚, 21, 22
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பியவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்
اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ؕ
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!(அல்குர்ஆன்: 27:62) ➚
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா? இதனை ஓதி வருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?
மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.
நபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِيْنَ مَرَّةً فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்(அல்குர்ஆன்: 9:80) ➚
நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.
ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُؕ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்(அல்குர்ஆன்: 28:56) ➚
மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَؕ اَفَلَا تَعْقِلُوْنَ
”அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்”(அல்குர்ஆன்: 6:32) ➚
நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.
அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?
நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.
ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
மேற்கண்ட ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இறைவனின் நாட்டப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பதை மிக உறுதிப்படுத்துகிறது. எனவே, நபியவர்கள் மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்களைக் கடவுளாக வணங்குவதாகும்.
மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மழை பொழிவிப்பவன் யார்?
ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.
மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?
அல்(அல்குர்ஆன்: 56:68) ➚, 69, 70
وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ
அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன். அல்(அல்குர்ஆன்: 42:28) ➚
اَللّٰهُ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَيَبْسُطُهٗ فِى السَّمَآءِ كَيْفَ يَشَآءُ وَيَجْعَلُهٗ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَۚ
அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.
அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்
கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 3445)
இந்த ஸலவாத்துன் நாரியாவை ஓதினால் நரகம் தான் பரிசாகக் கிடைக்கும். அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.
ஸலவாதின் சரியான முறை
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது? என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்லிம், முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்
தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. (பார்க்க: நஸயீ 2728)
யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நபியின் பரிந்துரை
முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்
பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந்நாரிய்யாவை இனியும் ஓதலாமா?
ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.
வெள்ளிக் கிழமையில் ஒதுங்கள்
”உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்”
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்(அபூதாவூத்: 883)
நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: நஸயீ 1265
நபிக்கு மரணமே இல்லையா?
அதே நேரம், நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.
நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இனிவரும் காலங்களில், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.
அப்துந்நாஸிர்