099. ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா?

சரி தான்

மக்காவில் ஸம்ஸம் என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

நூல்: (திர்மிதீ: 963) (886) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தமது மகன்) பழ்லு அவர்களிடம், நீ உன் தாயாரிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வாஎன்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குடிக்கத் தருவீராகஎன்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரேஎன்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதையே குடிக்கத் தருவீராகஎன்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம்கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்என்று கூறிவிட்டு, மற்றவர்கள் உங்களுடன் போட்டியிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறங்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: (புகாரி: 1635) 

ஸம்ஸம் நீரைக் கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ஸம்ஸம்நீர் புனிதமானது என்பதையும் இதிலிருந்து அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ஸம்ஸம் நீ ரை வேண்டிப் பெற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்தும் இதனை நாம் அறியலாம்.

ஸம்ஸம் நீரை நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை.