ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

வஹீ எனும் இறைச்செய்தியையே முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வஹீ அல்லாத எதுவாயினும் அது பின்பற்றத்தக்கதல்ல என்பதோடு அவைகளைப் பின்பற்றுவது வழிகேடு.!

இறைச்செய்தியை மட்டுமே பின்பற்றுதல் எனும் நேர்வழியில் முஸ்லிம்கள் நாமனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து நாம் விடுத்து வருகிறோம். அநேக மக்கள் இந்த சத்தியப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

முன்னோர்களைப் பின்பற்றுதல், இமாம்களைப் பின்பற்றுதல், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்பன போன்ற தாங்கள் கொண்டிருந்த தவறான கொள்கைகளை விட்டும் விலகி இறைச் செய்தியை மட்டுமே பின்பற்றுவோம் என்று சூளுரைத்து இக்கொள்கையில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

ஆனால் வழிகேட்டை மக்களிடையே பரப்பும் வழிகேடர்கள் அவ்வப்போது ஏதேனும் ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொண்டு, அதை திரித்துக் கூறி வஹீ அல்லாததைப் பின்பற்றுதல் எனும் வழிகேட்டுக்கு ஆள்சேர்க்கும்  தரங்கெட்ட வேலையைப் பார்க்கிறார்கள். இவ்வேலையை ஏதோ கப்ர் வணங்கிகளும் மத்ஹப்வாதிகளும் மட்டுமே பார்க்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.

தவ்ஹீதின் போர்வையில் உலாவரும் கள்ள ஸலபிகளும் கன கச்சிதமாக இதைச் செய்கிறார்கள். சொல்லப்போனால் தர்காவாதிகளை விட மனோஇச்சைக் கருத்தை மார்க்கத்தின் பெயரால் புகுத்துவதில் கள்ள ஸலபிகளே முதலிடத்தில் இருக்கிறார்கள். இறைச்செய்தியை விடுத்து மனிதக்கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எவரிடத்திலும் எக்காலத்திலும் ஆதாரம் இருந்ததில்லை, இருக்காது, இருக்கப்போவதுமில்லை.

ஆனால் இந்தக் கள்ள ஸலபிகளோ நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை மார்க்கத்தின் பெயரால் சொல்லி, மக்களைத் தவறான கொள்கையை நோக்கி அழைக்கின்றார்கள். அதற்காக இறைவசனத்தில் பல தகிடுதத்தங்களை, திருகுதாளங்களைச் செய்கிறார்கள்.

இவர்களின் கள்ளத்தனத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

{ وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا} [النساء: 115]

நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 4:115).)

இவ்வசனத்தைக் கூறி, பின்வருமாறு வாதம் எழுப்புகிறார்கள்.

தூதருக்கு மாறு செய்தாலும் நரகம், சபீலுல் முஃமினீன் அல்லாத வேறு வழியைப் பின்பற்றினாலும் நரகம் என்று இவ்வசனம் கூறுகிறது. அப்படி என்றால் தூதரையும் பின்பற்ற வேண்டும் ஸபீலுல் முஃமினீன் எனும் முஃமின்களின் பாதையையும் பின்பற்ற வேண்டும். இறைவன் குறிப்பிடும் முஃமின்கள் சஹாபாக்கள் ஆவர்.

எனவே முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு இரண்டு வழியை இறைவன் முன்வைத்துள்ளான்.

  1. தூதரின் பாதை
  2. நபித்தோழர்களின் பாதை

இவ்விரண்டையும் பின்பற்றாவிட்டால் நரகம் என்று அல்லாஹ்வே எச்சரிக்கை செய்வதால் நபித்தோழர்களையும் பின்பற்ற வேண்டும்.

இதுதான் கள்ள ஸலபிகள் முன்வைக்கும் கயமை நிறைந்த வாதமாகும்.

முஃமின்களின் பாதை எது?

இவ்வசனத்தில் முஃமின்களின் பாதை என்று தான் சொல்லப்பட்டுள்ளது. நபித்தோழர்களின் பாதை என்று சொல்லப் படவில்லை. நபித்தோழர்களையும் கியாமத் நாள் வரை வரக்கூடிய அனைத்து முஃமின்களையும் குறிக்கும் வகையில் தான் இச்சொற்றொடரை அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். இன்னும் சொல்வதாக இருந்தால் இந்தக் கட்டளை முதலில் நபித்தோழர்களுக்குத்தான். அவர்களை நோக்கியே இவ்வசனம் பேசுகிறது.

‘நீங்கள் முஃமின்களின் பாதையை பின்பற்றுங்கள்’ என்று நபித்தோழர்களுக்கே கட்டளை இடப் பட்டுள்ள போது நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்று பொருள் கொள்வது உளறலாக ஆகிவிடுகிறது.

நபித்தோழர்களே! நீங்கள் நபித்தோழர்களின் பாதையைப் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்வது இறைவார்த்தையின் பொருளை நீர்த்துப் போகச் செய்து, அதை அர்த்தமற்ற உளறலாக்கும் மகா பாவமானதாகும்.

அதேவேளை, இது நபித்தோழர்களுக்கு மட்டுமே உரிய கட்டளையல்ல, நபித்தோழர்கள் காலத்துக்குப் பின்னால் வந்தவர்களுக்கும் இக்கட்டளை உள்ளது. அவர்களும் இக்கட்டளையில் அடங்குபவர்களே. அவர்களும் முஃமின்களின் பாதையைப் பின்பற்ற வேண்டும்.

முஃமின்களின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்றால் யார் முஃமின்கள் என்று நாம் அறிந்தாக வேண்டும். ஆனால் ஈமான் எனும் இறை விசுவாசம், உள்ளம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் யாரிடம் ஈமான் உள்ளது என்பதை நம்மால் அறிய முடியாது.

உள்ளத்தில் உள்ளதை ஊடுருவி அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அல்லாஹ்வையன்றி யாரும் எவருடைய உள்ளத்தில் உள்ளதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களில்லை.

எப்போது ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டதோ அப்போதே யார் ஈமான்தாரிகள், முஃமின்கள் என்பதை மனிதர்கள் அறிய முடியாது; அல்லாஹ் ஒருவனே அறிவான் என்றாகி விட்டது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் என்று ஏராளமான சான்றுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

குழந்தையின் நிலை

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை’’ என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்’’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 5175)

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட இறை நம்பிக்கையாளர் என்ற அடிப்படையில் அவரது நிலையை முடிவு செய்யக் கூடாது என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது. ஒரு குழந்தையின் நிலையே இதுவென்றால் பெரியவர்களின் நிலை குறித்து முடிவு எடுப்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?

முஹாஜிர்

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’’ எனக் கூறினேன்.

உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?’’ என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’’ என நான் கேட்டேன். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது’’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

(புகாரி: 1243)

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்து, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், “அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’’ எனக் கூறுகிறார். நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நம்முடைய பார்வைக்கு இறை நம்பிக்கையாளராக, நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு நபித்தோழரின் நிலையை, தாம் பார்த்த அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது என்றால் நாம் எப்படி அறிய முடியும்? முடிவு செய்ய முடியும்?

உயிர்த்தியாகி என்பதால்…

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் ‘இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்’ என்று கூறிக்கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி ‘இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)

(முஸ்லிம்: 182)

உயிரைத் தியாகம் செய்வதற்கு நிகரான நல்லறம் ஏதும் இல்லை. அவர்களை விட உண்மையான முஃமின்கள் என்று வேறு யாரைத் தான் அடையாளப்படுத்த இயலும்? ஆனால் அத்தகைய ஷஹீதுகள் குறித்து நபித்தோழர்கள் எடுக்கும் முடிவை நபிகள் நாயகம் கண்டிக்கின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். 

(அல்குர்ஆன்: 60:10).)

வெளிப்படையான செயல்களாலும் நடவடிக்கை களாலும் ஒருவர் நமது பார்வைக்கு முஃமின்களாகத் தெரிந்தாலும் உண்மையான முஃமின்கள் யார் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்று இவ்வசனம் தெளிவாக விளக்கி விட்டது.

நாம் யாரை முஃமின்கள் என்று முடிவு செய்கிறோமோ அவர்கள் அல்லாஹ்விடத்திலும் முஃமின்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கணிப்பு தவறாகி விடவே வாய்ப்பு அதிகம் என்றும் இந்த சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. 

இந்நிலையில் அல்லாஹ் மட்டுமே அறிந்த முஃமின்களை நாம் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுவானா? இதனடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்கு கள்ள ஸலபிகள் அளிக்கும் வியாக்கியானம் எத்தகைய தவறான விளக்கம் என்பதை அறியலாம்.

இரு அர்த்தங்கள்

அப்படி என்றால் எது சரியான பொருள்?

முஃமின்களின் பாதை என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளன.

முஃமின்கள் சென்ற பாதை என்பது ஒரு பொருள்.

முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்பது மற்றொரு பொருள்.

முஃமின்கள் சென்ற பாதை என்று பொருள் கொண்டால் முஃமின்கள் யார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் ஆற்றலை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்க வேண்டும். அந்த ஆற்றலை அல்லாஹ் நமக்கு மட்டுமல்ல, இறைத்தூதருக்கே வழங்கவில்லை என்பதை மேலே சான்றுகளுடன் கண்டோம். எனவே அந்தப் பொருள் கொள்ள முடியாது.

முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்று பொருள் கொண்டால் அதை அல்லாஹ் நமக்கு அறிவித்து உள்ளான். வஹீயைப் பின்பற்றுவது தான் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்று அல்லாஹ் நமக்குத் திருக்குர்ஆன் – நபிமொழிகள் மூலம் காட்டி தந்து விட்டதால் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் நாம் பயணிக்க முடியும்.

இவ்வாறு பொருள் கொள்ளும் போது இது நபித்தோழர்களுக்கும் அழகாகப் பொருந்தும். நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் தம் இஷ்டப்படி நடக்கக் கூடாது. மாறாக முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் தான் அவர்களும் செல்ல வேண்டும் என்பது மிகப் பொருத்தமாக அமைந்து விடுகிறது. நபித்தோழர்கள் அல்லாதவர்களும் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் செல்ல வேண்டும் என்பதும் அழகாகப் பொருந்திப் போகிறது.

சரி! முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்ன?

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத் தூதராகவே இருந்தாலும் அவர்களும் இறைவன் காட்டிய வழியில் தான் நடக்க வேண்டும், இறைச்செய்தியையே பின்பற்ற வேண்டும். இதுதான் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை. இக்கருத்தினை எண்ணற்ற இறைவசனங்கள் எடுத்தியம்புகின்றன. இதோ அல்லாஹ் கூறுகிறான்.

ஆதம் நபி

ஆதம் (அலை) அவர்கள் தாம் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் தன் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றே அறிவுரை கூறினான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்.

(அல்குர்ஆன்: 2:38).)

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

(அல்குர்ஆன்: 20:122).)

ஆதம் (அலை) அவர்களும் இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று இவ்வசனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதம் நபி அவர்களே இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வஹீ எனும் இறை வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் – தாம் செல்லும் பாதையை சுயமாகத் தேர்வு செய்ய முடியாது என்றால் நபித்தோழர்கள் மட்டும் தாங்கள் செல்லும் பாதையை சுயமாகத் தேர்வு செய்து விட முடியுமா?

ஆதம் நபிக்கு வழங்காத அதிகாரத்தை அல்லாஹ் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற சஹாபாக்களுக்கு வழங்கிவிடுவானா? இதிலிருந்து ஸபீலுல் முஃமினீன் – முஃமின்களின் பாதை எனும் இறைவார்த்தையில் கள்ள ஸலபிகள் முன்வைக்கும் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்)

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீயைத் தான் பின்பற்றி நடக்க வேண்டும். அதாவது இறைவன் காட்டிய பாதையிலேயே  இறைவழியிலேயே நபிகள் நாயகம் பயணிக்க வேண்டும். மாறாக தாம் விரும்பிய பாதையில் நபிகள் நாயகம் கூடப் பயணிக்க முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106).)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 33:2).)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை’எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 46:9).)

இறைவழியே நபிவழி

நபிவழியே நம்வழி என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் உண்மை என்னவெனில் இறைவழியே நபிவழியாகும். அல்லாஹ்வின் வழியில் தான் நபிகள் நாயகம் செல்ல வேண்டும். நபிக்கு என்று தனிவழி எல்லாம் கிடையாது.

(முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!

(அல்குர்ஆன்: 45:18).)

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ‘இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!’ என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’ என (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:15).)

இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் இறைச்செய்தியிலிருந்து ஒரு சொல்லைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் நபிக்கு வழங்கப் படவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவித்து விட்டான். ஒரு சொல்லை மாற்றியமைக்கும் அதிகாரம் இல்லை என்றால் புதிய பாதையில் போய்விடுவதென்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது.

இந்நிலையில் நபிகள் நாயகமே இறைவன் காட்டாத புதிய பாதையில் செல்ல முடியாது எனும் போது நபித்தோழர்கள் மட்டும் இறைவன் காட்டாத தாங்கள் விரும்பும் புதிய பாதையில் பயணித்து விட முடியுமா? இதிலிருந்து அனைத்து முஃமின்களும் செல்ல வேண்டிய பாதை அல்லாஹ்வின் வஹீ மட்டுமே என்பதை அறியலாம்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என அல்லாஹ் கூறியதாகச் சொல்வது கள்ள ஸலபிகளின் மனோஇச்சைக் கருத்தாகும். இறைவசனத்தை தங்களுக்குத் தோதாகத் திரிக்கும் தீய(வர்களின்) வேலையாகும்.

ஏனெனில் நபித்தோழர்களாயினும் அவர்கள் இறைவனின் புறத்திலிருந்து நேர்வழி வராமல் அதைப் பின்பற்றாமல் அவர்களால் நேர்வழி பெற முடியாது.

“உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழிகாட்டுபவர் உண்டா?’’ என்று கேட்பீராக! “அல்லாஹ்வே உண்மைக்கு வழிகாட்டுகிறான்’’ என்று கூறுவீராக! உண்மைக்கு வழிகாட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழிநடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத்தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

(அல்குர்ஆன்: 10:35).)

இறைவன் நேர்வழி காட்டினாலே தவிர சுயமாக நேர்வழி பெற இயலாத நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அழைப்பது வழிகேட்டிற்கு அழைப்பதாகும்.

அல்லாஹ் காப்பானாக!