ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டுமா?

குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நாஃபிஉ மூலம் அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள்.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் என்பதற்குப் பதிலாக உபைதுல்லாஹ் பின் உமர் என்ற தொடருடன் இதே கருத்தைக் கொண்ட ஹதீஸ் ஹாகிமில் பதிவாகியுள்ளது. இவர் நம்பகமானவர், எனினும் இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஸஜ்தா வசனத்தை ஓதும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.