ஷியாக்களின் அபத்தம்

பயான் குறிப்புகள்: கொள்கை

ஷியாக்களின் அபத்தம்
இறங்கிய குர்ஆன் வேறு, இருக்கின்ற குர்ஆன் வேறு

அல்குர்ஆன் இறங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை அடித்தல், திருத்தலுக்கு இடமில்லாத வகையில் தனிப்பெரும் அற்புதமாக அது திகழ்ந்து வருகின்றது.

   اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியின்படி திருக்குர்ஆன் இதுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றது. இனியும் யுகமுடிவு நாள் வரை பாதுகாக்கப்படும். ஆனால் ஷியாக்களோ திருக்குர்ஆன் திருத்தப்பட்டது என்ற ஒரு குருட்டுத்தனமான வாதத்தை முன்வைக்கின்றனர். அலீ (ரலி) தனிக் குர்ஆன் ஒன்றைத் தொகுத்ததாக ஷியாக்கள் பொய்யான கதைகளைப் புனைந்து வைத்துள்ளனர்.

அலீ (ரலி) தொகுத்த குர்ஆனை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தான் அலீ (ரலி)யை உமர் (ரலி) கொலை செய்யத் திட்டமிட்டதாக ஒரு கொலைப் பழியை உமர் (ரலி) மீது ஷியாக்கள் துணிந்து சுமத்துவதை பார்கிறோம்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைவது இறங்கிய குர்ஆன் வேறு! இருக்கின்ற குர்ஆன் வேறு என்ற ஷியாக்களின் அபத்தமான வாதம் தான். அது தொடர்பாக இன்னும் அவர்கள் என்னென்ன கதைகளை அளக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்:

அபுல்ஹசன் என்னிடம் ஒரு குர்ஆன் ஏட்டைத் தூக்கிக் காட்டி, ‘‘இதை நீ பார்க்காதே’’ என்றார். இருப்பினும் அதை நான் திறந்து பார்த்து, லம் யகுனில்லதீன கஃபரூ (அல்பய்யினா என்ற 98வது) அத்தியாயத்தை ஓதினேன். அதில் குரைஷிகளில் 70 பேர்களை அவர்களுடைய தகப்பனார்களின் பெயர்களுடன் பதிந்திருப்பதைக் கண்டேன். அவர் என்னிடம் அந்த ஏட்டை அனுப்பி வை என்றார். இவ்வாறு அஹ்மத் பின் முஹம்மத் பின் அபீநள்ர் என்பவர் அல்காஃபி என்ற நூலில் அறிவிக்கின்றார்.

அல்காஃபி என்பது அவர்களிடம் நம்முடைய புகாரியை போன்று மதிக்கப்படும் நூலாகும்.

உஸ்மான் (ரலி) மீது ஒரு குற்றாச்சாட்டு

மீஸம் அல்பஹ்ரானி என்பவர் சதாவும் உஸ்மான் (ரலி)யைக் குறை காண்பவர், அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர். அவர் நஹ்ஜுல் பலாகா என்ற நூலில் குறிப்பிடுவதாவது:
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கிராஅத் அடிப்படையிலேயே மக்கள் அனைவரும் ஒருமித்து ஓத வேண்டும் என்று உத்தரவிட்டு மற்ற குர்ஆன் ஏடுகளை உஸ்மான் (ரலி) தீயிட்டுக் கொளுத்தி விட்டார். கொளுத்தப்பட்ட அந்த ஏடுகளும் இறக்கப்பட்ட குர்ஆன் தான் என்ற உண்மையை சந்தேகமின்றி பாழடித்து விட்டார்.

அல்அன்வார் என்ற தன்னுடைய நூலில் அஸ்ஸய்யித் நிஃமத்துல்லாஹ் ஹுசைனி கூறுவதாவது: இறக்கப்பட்ட அதே மாதிரியான குர்ஆனை அலீ (ரலி)யைத் தவிர வேறு யாரும் தொகுக்கவில்லை.

இதை வலியுறுத்தும் விதமாகப் பின்வரும் பிரபலமான அறிவிப்பு அமைந்துள்ளது. ஜாபிர் அல்ஜுஃஃபி வழியாக யஃகூப் பின் அல்கலீனி அறிவிப்பதாவது: ‘இறக்கப்பட்ட மாதிரியே குர்ஆன் முழுவதையும் தொகுத்தேன்’ என யார் வாதிட்டாலும் அவர் பொய்யர் தான். அதை இறக்கப்பட்ட மாதிரி தொகுத்துப் பாதுகாத்தவர் அலீ (ரலி)யையும் அவருக்குப் பின்னால் வந்த இமாம்களைத் தவிர வேறு எவரும் கிடையாது என்று அபூஜஃபர் கூற நான் செவிமடுத்தேன்.

மேற்கண்ட இந்த அறிவிப்புகள் அனைத்தும் நம் கைவசமிருக்கின்ற இந்தக் குர்ஆன், பாதுக்காக்கப்பட்ட அந்தக் குர்ஆன் இல்லை. அதாவது, இறங்கிய குர்ஆன் வேறு! இருக்கின்ற குர்ஆன் வேறு! இது தான் ஷியாக்களின் அடிப்படை வாதமாகும்.

மாற்றப்படாத குர்ஆன் யார் கைவசமுள்ளது?

இப்போது ஷியாக்களிடம் மாற்றப்படாத, அலீ (ரலி) அவர்கள் திரட்டித் தொகுத்த அந்தக் குர்ஆன் யார் கைவசமுள்ளது? அதற்கு ஸாலிம் பின் ஸலமாவிடமிருந்து கலீனீ அறிவிக்கின்ற ஷியாவின் ஹதீஸ் பின்வருமாறு பதிலளிக்கின்றது:

அபூஅப்தில்லாஹ்விடம் ஒருவர் ஓதிக் கொண்டிருந்தார். குர்ஆனிலிருந்து மற்ற மக்கள் ஓதுகின்ற மாதிரி இல்லாமல் வித்தியாசமான சில எழுத்துக்களை நான் செவியுற்றேன். ‘‘இதற்கு என்று உரிமை கோருகின்ற நமது இமாம் (மஹ்தீ) வருகின்ற வரை, மக்கள் (உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்) ஓதுகின்ற வரை இந்தக் கிராஅத்தை ஓதாமல் நிறுத்திக் கொள்.

நமது இமாம் வந்ததும் அல்லாஹ்வின் வேதத்தை முறையாக ஓதிக்காட்டுவார்’’ என்று கூறி அலீ (ரலி) எழுதிய குர்ஆன் ஏட்டை எடுத்துக் காட்டினார். இந்த ஏட்டை அலீ (ரலி) எழுதி முடித்து விட்டு மக்களிடம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். ‘‘இது தான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய மாதிரியே தொகுத்த குர்ஆன் ஆகும்.

இதை நான் முதல் அட்டையிலிருந்து இறுதி அட்டை வரை தொகுத்திருக்கின்றேன்’’ என்று சொன்னதும் மக்கள், ‘‘இதோ எங்களிடம் குர்ஆன் தொகுப்பட்ட ஏடு இருக்கின்றது. நீங்கள் சொல்கின்ற அந்த ஏடு எங்களுக்கு தேவையில்லை’’ என்று பதிலளித்தனர். அதற்கு அலீ (ரலி), ‘‘என்னுடைய பணி நீங்கள் ஓதுவதற்காக நான் இந்தக் குர்ஆனை தொகுத்திருக்கின்றேன் என்று அறிவிப்பது மட்டும் தான். இனி இதற்குப் பிறகு இந்த ஏட்டை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்’’ என்று சொன்னார்கள்.

மாற்றப்படாத குர்ஆன் மஹ்தியின் கைவசம்?

மேற்கண்ட இந்தச் சம்பவம் அலீ (ரலி) தொகுத்த குர்ஆன் மக்களிடமிருந்து மாயமாகி விட்டது. யாருடன் மாயமானது? ஷியாக்களின் நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான மஹ்தீ என்பவர் திரைமறைவான உலகத்திற்குள் பிரவேசித்து விட்டார். அங்கிருந்து அவர் தனது பிரதிநிதிகளான இமாம்கள் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் திரைமறைவிற்குள் செல்லும் போது இந்தக் குர்ஆனைத் தன் கையோடு எடுத்துச் சென்று விட்டார். அவர் வெளியே வரும்போது அந்தக் குர்ஆனை வெளியே கொண்டுவருவார் என்று அல்இஹ்திஜாஜ் மினல் லிஜாஜ் என்ற நூலில் அபூமன்சூர் அஹ்மத் பின் அபீதாலிப் அத்தப்ரஸீ என்பவர் தெரிவிக்கின்றார்.

அவர் வெளியே வருகின்ற போது ரசூல் (ஸல்) அவர்கள் வைத்திருந்த துல்ஃபிகார் என்ற வாளையும் கொண்டுவருவார். (இன்றைய அணு ஆயுத, ஏவுகணைகள் நிறைந்த இந்த உலகத்தில் துல்ஃபிகார் வாளைத் தூக்கிக் கொண்டு வந்து எப்படி சுழற்றப் போகின்றாரோ தெரியவில்லை.) இறுதி நாள் வரையில் உள்ள ஷியாக்கள் பெயர்கள் அடங்கிய ஏட்டையும் அவர் கொண்டு வருவார்.

ஆதமின் மக்கள் தேவையாகின்ற அனைத்து விஷயங்களும் அடங்கிய எழுபது முழ ஏடு அவர் வசமிருக்கும். அதற்கு அல்ஜாமிஆ என்று பெயர். அனைத்து ஞானமும் அடங்கிய ஏடும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் ஏடும் அவரிடம் இருக்கும் என்று அந்த நூலில் அபூமன்சூர் அஹ்மத் பின் அபீதாலிப் அத்தப்ரஸீ குறிப்பிடுகின்றார்.

ஃபஸ்லுல் கிதாப் ஃபீ இஸ்பாத்தி தஹ்ரீஃப் கிதாபி ரப்பில் அர்பாப் (எஜமானர்களுக்கு எஜமான் ஆன இறைவனின் வேதத்தில் திருத்தலை நிரூபிக்கும் தெளிவுரை) என்ற நூலில் ஷியாவைச் சார்ந்த முஹம்மது தகியுத்தீன் என்பவர் நிஃமத்துல்ல்லாஹ் அல்ஜஸாயிரியை மேற்கோள் காட்டிக் கூறுவதாவது: திருத்தலைக் காட்டுகின்ற அறிவிப்புகள் அவை இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை என்று தெரிவிக்கின்றன. அது பிரபலமானது என்று ஒரு முஃபீத், முஹக்கிக் அத்தமாத், அல்லாமா அல்மஜ்லிஸி இன்னும் பிற அறிஞர்கள் அதை உறுதி செய்திருக்கின்றனர்.

மொத்தத்தில் மேற்கண்ட வாதங்களின் மூலம் ஷியாக்கள் துணிந்து பதியவைக்கின்ற செய்தி, இப்போது நம் கைவசத்தில் தவழ்கின்ற இந்தத் திருக்குர்ஆன் திருத்தப்பட்டது; மாற்றப்பட்டது; அடித்தலுக்கு உள்ளானது; தணிக்கைச் செய்யப்பட்டது என்பது தான். அல்லாஹ் காப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வேதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதைத் தானே பாதுகாப்பதாகவும், இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், இதில் எந்த மாறுதலும் இல்லை என்றும் பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றான்.

   ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

(அல்குர்ஆன்: 2:2)

  لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.

(அல்குர்ஆன்: 41:42)

اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ  ۖ‏
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ۚ
ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ

அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

(அல்குர்ஆன்: 75:17-19)

   الٓرٰ‌كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ

அலிஃப், லாம், ரா. (இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

(அல்குர்ஆன்: 11:1)

   يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ‌

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்!

(அல்குர்ஆன்: 5:67)

  وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ

அவர் (முஹம்மது நபி) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

(அல்குர்ஆன்: 81:24)

وَبِالْحَـقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَـقِّ نَزَلَ‌ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا ‌ۘ‏

உண்மையுடனேயே இதை அருளினோம். உண்மையுடனேயே இது இறங்கியது. உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 17:105)

  اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

(அல்குர்ஆன்: 47:24)

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழிகாட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது’’ என்று நற்செய்தியும் கூறுகிறது.

(அல்குர்ஆன்: 17:9)

மாற்றத்திற்கோ, திருத்தத்திற்கோ இடந்தராத திருக்குர்ஆன் என்று இந்த வசனங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான். ஆனால் ஷியாக்களோ பகிரங்கமாக இப்படிப்பட்ட பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விடுகின்றார்கள்.

சில எடுத்துக்காட்டுகள்.
اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

இதன் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு தூக்கமோ ஆழ்ந்த தூக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம்.

ஆயத்துல் குர்ஸியியை நம்மில் யாரும் தெரியாமல் இருக்க மாட்டோம்.  இது (அல்குர்ஆன்: 2:255) வசனமாக இடம் பெறுகின்றது.

மேலே உள்ளது போன்று தான் ஆயத்துல் குர்ஸிய்யில் இடம் பெறுகின்றது. ஆனால் ஷியாக்கள் இவற்றை ஆயத்துல் குர்ஸிய்யில் சேர்த்து வைத்துள்ளனர்.

وما بينهما وما تحت الثرى عالم الغيب والشهادة الرحمن الرحيم

இதன் பொருள்: அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவையும் பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம். மறைவானவற்றையும் நேரில் உள்ளவையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

பன்னிரண்டு இமாம்களில் ஒருவரான அபுல்ஹசன் மூஸா அர்ரிளா என்பவர் ஆயத்துல் குர்ஸிய்யை இப்படித்தான் ஓதியதாக அலீ பின் இப்ராஹீம் அல்கிம்மிய்யு அறிவிக்கின்றார்.

(ஆதாரம் தஃப்ஸீருல் கிம்மி)

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ

மனிதனுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ந்து வருவோர் (மலக்குகள்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை பாதுக்காக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 13:10)

மேற்கண்ட வசனத்தை ஷியாக்கள் லஹு முஅக்கிபாத்துன் மின் கல்ஃபிஹி வ ரகீபுன் பைன யதைஹி என்றும் ‘மின் அம்ரில்லாஹ்’ என்பதை ‘பி அம்ரில்லாஹ்’ என்றும் மாற்றி ஓதுகின்றனர்.

له معقابات من خلفه ورقيب بين يديه يحفظونه بأمر الله

இதற்கு என்ன காரணம்?
அபூஅப்தில்லாஹ்விடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது.

مِنْ بَيْنِ يَدَيْهِ

ஒருவருக்கு முன்னர் வருபவர்களுக்கு

مُعَقِّبَاتٌ

எப்படி பின் தொடர்பவர்கள் என்று சொல்ல முடியும்? நீங்கள் அரபிகள் கிடையாதா? என்று அபூஅப்தில்லாஹ் கேட்டதும் பக்தர் ஒருவர் அப்படியானால், ‘‘இதற்கு என்ன விளக்கம்?’’ என்று திரும்பக் கேட்டார்.

அதற்கு அபூஅப்தில்லாஹ்,

له معقابات من خلفه ورقيب بين يديه يحفظونه بأمر الله

(மனிதனுக்கு பின்னர் தொடர்பவர்கள் இருக்கின்றனர். அவனுக்கு முன்னால் கண்காணிப்பவர்கள் இருக்கின்றனர். அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு அவனை பாதுக்காக்கின்றனர்)
என்று தான் குர்ஆன் வசனம் இறங்கியது என்று பதிலளித்தார்.

ஆதாரம்: தஃப்ஸீருல் கிம்மி