ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டால்
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அது, இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.
சஹீஹ் இப்னி ஹுஸைமா
இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.
முக்கிய குறிப்பு
இங்கே, இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரம் என்பதைத் தான் பலவீனம் என்கிறோம். எனினும், வெள்ளிக் கிழமையில் ஜும்ஆ தொழுகையில் அந்த நேரம் இருக்கிறது என்று கருத்துப்படும் வகையில் வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.