51) வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று பலரும் ம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன.

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.

இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ்(திர்மிதீ: 994)வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பலவீனமானது என்பதை திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்.

எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மரணித்தால் அது சிறப்பானது என்பது தவறாகும்.

ஒரு மனிதர் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த வயதில், எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.