வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள்
வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள்
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நோக்கி வீடுகளில் அடங்கி இருக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே இந்த வசனத்தின்படி ஒரு பெண் காலா காலம் வீட்டில் தான் அடங்கியும் முடங்கியும் கிடக்க வேண்டுமா? என்று கேட்டால் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நமக்கு தெளிவான விளக்கத்தை வழங்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களை பள்ளிக்கு வரும்படியும், பெருநாள் திடலுக்கு வருமாறும், போர்க்களத்தில் வந்து காயம் பட்ட போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மக்காவிற்கு வந்து ஹஜ்ஜை நிறைவேற்றவும், மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் அனுமதி அளித்ததிலிருந்து பெண்கள் வெளியே வரலாம்; ஆனால் சில நிபந்தனைகளுக்கும் வரைமுறைகளுக்கும் உட்பட்டு வெளியே வரவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் மாறுபடும் பட்சத்தில் அவர்கள் வீடடங்கித் தான் இருக்க வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு மாறுபட்டு அவர்கள் செல்லும் பயணம் நிச்சயமாக மறுமையில் நிந்தனைக்குரிய பாவமாக ஆகி விடும்.
இன்றைய காலத்துப் பெண்கள் இத்தகைய பயணங்களைத் தான் மனதில் கடுகளவு கூட கவலையில்லாமல் மேற்கொள்கின்றனர். இத்தகைய பயணங்களை இங்கே பார்ப்போம்.
ஹஜ் பயணம்
இன்று பல பெண்கள் ஹஜ்ஜுக்காக தன்னுடன் மஹ்ரம் இல்லாதவர்களுடன், அதாவது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரர்கள், தாய் மாமன்கள் போன்றவர்கள் அல்லாதவர்களுடன் பயணம் செய்வதைப் பார்க்கின்றோம்.
எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
(புகாரி: 1086)
(புகாரி: 1088)வது ஹதீஸில், “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிய எந்தப் பெண்ணும் ஒரு பகல், ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது” என்று கூறுகின்றார்கள். இந்த விஷயத்தை ஈமானுடன் தொடர்பு படுத்திக் கூறுவதிலிருந்து இது எந்த அளவுக்குக் கடுமையான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையை ஹஜ் செய்யும் பெண்கள் கொஞ்சமும் பொருட்படுத்துவது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்கள் கண்டிப்பாக போரில் கலந்து கொண்டாக வேண்டும். போரில் கலந்து கொள்ளாதவர்கள் நயவஞ்சகர்கள் என்று கருதப்படுவார்கள். அல்லாஹ்வும் தனது திருமறையில் போரில் கலந்து கொள்ளாதவர்களைப் பற்றி கடுமையாகச் சாடுகின்றான்.
இந்த அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள இந்தப் போர் கடமையில் ஒரு நபித்தோழர் தன் பெயரைப் பதிவு செய்து கொள்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட தடையை அறிவிக்கின்றார்கள். அப்போது அந்தத் தோழர், “நான் போரில் கலந்து கொள்ளப் பதிவு செய்திருக்கின்றேன். என்னுடைய மனைவி ஹஜ் செய்ய விரும்புகின்றார்” என்று தெரிவித்ததும் நபி (ஸல்) அவர்கள், “நீ உன்னுடைய மனைவியுடன் சென்று ஹஜ் செய்” என்று அவரை அனுப்பி வைக்கின்றார்கள்.
(பார்க்க(புகாரி: 1862, 3006)
ஒரு பெண் செல்வது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் புனிதத் தலமாக இருந்தாலும் உரிய உறவினர் இல்லாமல் அப்பெண் செல்லக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு கண்டிப்புடன் இருந்த இந்த விஷயம் தான் இன்று காற்றில் விடப்படுகின்றது. எனவே பெண்கள் தூரப் பயணம் என்று வருகின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
பள்ளிக்கு தொழச் செல்லுதல்
இஸ்லாம் பெண்களுக்கு பள்ளிக்குச் சென்று தொழுவதற்கு அனுமதியளிக்கின்றது. (பார்க்க(புகாரி: 900) ஆனால் அப்பெண்கள் இரவு நேரத்தில் நறுமணம் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் நிபந்தனை இடுகின்றார்கள்.
உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும்போது அவள் நறுமணத்தைத் தொட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸில் பொதுவாக நறுமணம் பூச வேண்டாம் என்று இடம் பெற்றாலும் பின்வரும் ஹதீஸில் இரவு நேரங்களில் நறுமணம் பூச வேண்டாம் என்று இடம் பெற்றுள்ளது.
உங்களில் ஒருத்தி பள்ளிக்கு இஷா தொழுகைக்கு வரும் போது அந்த இரவு அவள் நறுமணம் பூச வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸைனப் ஸகபிய்யா (ரலி),
(முஸ்லிம்: 673)
பள்ளிக்குத் தொழ வருவது ஒரு நன்மையான காரியம் தான். ஆனால் அந்த நன்மையைச் செய்வதாக இருந்தால் இரவு நேரங்களில் நறுமணம் பூசிக் கொண்டு வரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்களே! ஏன்?
பொதுவாகவே ஒரு பெண் வெளியே புறப்பட்டு விட்டாலே பல ஆயிரம் கண்கள் அவளை மொய்க்க ஆரம்பித்து விடுகின்றன. அதிலும் இரவு நேரத்தில் என்றால் கேட்கவே வேண்டாம்.
பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகளை எவரேனும் மறுக்க இயலுமா? யாராவது ஒரு ஆண் போனால், ஆடைகளை அவிழ்த்து விட்டுப் போனால் கூட அவனை ஏறிட்டுப் பார்க்க நாதி உண்டா? ஆனால் பெண் போனால் அவள் பின்னால் கண் போகின்றது. அதனால் தான் பெண்களுக்கு அல்லாஹ் ஆடைகள் என்ற கவசத்தை அணியச் சொல்கின்றான்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:59) ➚
இத்தனை கவசங்கள், கட்டுப்பாடுகள் இருந்தும் ஆணின் பார்வைகள் தாவிக் குதிக்கின்றன எனும் போது அவர்கள் நறுமணம் பூசி விட்டு வந்தால் அது கவர்ந்திழுக்காமல் சும்மா இருக்குமா? அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய தடையை விதிக்கின்றார்கள்.
அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வருவதற்கே இத்தகைய தடை என்றால் பொது இடங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குப் பெண்கள் கொஞ்சமும் மதிப்பளிப்பதில்லை. இரவு நேரங்களில் மல்லிகைப் பூவை சூடிக் கொண்டு பிற ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் பெண்கள் வெளியில் நடமாடுகின்றனர்.
களங்கப்படும் கடைத் தெருப் பயணங்கள்
இன்று கடைத் தெருவுக்குச் செல்லும் பெண்களை இரு வகைப்படுத்தலாம். 1. புர்கா அல்லது துப்பட்டி அணிந்து செல்லும் பெண்கள். 2. புர்காவோ, துப்பட்டியோ அணியாமல் செல்லும் பெண்கள்.
இன்று மாற்று மதப் பெண்கள் கடைத் தெருவுக்கு வரும் காட்சிகளை நம்மால் வர்ணிக்க இயலாது. இலைமறை காயாக தெரியும் சேலை, ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு தலை நிறைய வாசனைப் பூவை சூடிக் கொண்டு வருகின்றனர். இதற்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று முஸ்லிம் பெண்களும் கிளம்பி வருகின்றனர். இவர்கள் அணிந்து வரும் ஆடையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
இவர்களின் இந்தப் போக்கு நிச்சயமாக சுவனத்திற்கு ஒரு தடைக்கல்லாக ஆகி விடும். அல்லாஹ் காப்பானாக!
நிரம்பி வழியும் பேருந்தில் நெரிலில் மாட்டும் பெண்கள்
இப்போதுள்ள டவுண் பஸ்ஸின் கொள்ளளவு 60 என்றால் அதை விட இரண்டு மடங்கு அளவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நிறை மாத கர்ப்பிணி போல் உள்ளே எள்ளளவுக்குக் கூட இடமில்லாமல் குண்டு, குழிகளில் விழுந்து நகர முடியாமல் ஊர்ந்து செல்கின்றது. இதிலுள்ள நெரிசலில் இந்தக் கற்பு நெறியுள்ள பெண்கள் மாட்டித் தவிப்பது வேதனைக்குரிய விஷயம். இதில் இவர்கள் பர்ஸ் வைக்கும் இடமும், அதை எடுக்கும் விதமும் ஆபாசத்திற்குரியது.
(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், “உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை(அல்குர்ஆன்: 48:10) ➚வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
ஆனால் பஸ்ஸின் நெருக்கத்தில் கை மட்டுமல்ல. மொத்த மேனியும் அந்நிய ஆண்களுக்கு மேல் படுகின்றது.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
விபச்சாரத்தின் பல படித்தரங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் ஒரு சேர இல்லை அதையும் தாண்டி மேனியும் மேனியும் ஒட்டி உரசி நிற்கும் நிலை! எத்தனை சபலப் புத்திக்காரர்கள் இந்தச் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கிடக்கின்றார்கள். பெண்களை நெருக்கித் தள்ளுகின்றார்கள். இப்படி ஒரு மானம் போகின்ற ஒரு பயணம் தேவையா? பெண்களே சிந்தியுங்கள்.
இது போன்ற கட்டங்களில் நம்முடைய தன்மானத்தைக் காக்கும் வகையில் கட்டுப்பாட்டுணர்வுடன், கற்பு நெறியுடன் கொஞ்சம் காசு போனாலும் பரவாயில்லை. காரிலோ ஆட்டோவிலோ பயணம் செய்யும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர்.
எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாத கட்டத்திலும், என்ன நெரிசலாக இருந்தாலும் பரவாயில்லை என்று காலணா பெறுமான கத்தரிக்காய் வாங்குவதற்காக கடைத் தெருவுக்குக் கூட பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் இந்தப் பயணங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏதோ தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் போது வேறு வழியே இல்லையே என்று நாணி, கூனிக் குறுகிப் போய் தான் இந்த டவுண் பஸ் பயணங்கள் அமைய வேண்டும்.
கடைத் தெருக்கள்
கடைத் தெருக்குச் செல்லும் பெண்கள் கடைக்காரர்களிடம் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. கடைத் தெருக்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (அல்) அவர்கள் கூறுவதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவை அங்குள்ள பள்ளிவாசல்கள் ஆகும். ஊர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபத்திற்குரியவை அங்குள்ள கடைத் தெருக்கள் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
எனவே இத்தகைய கோபத்திற்குரிய இடங்களில் எவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும்.
பெண்கள் வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் அல்லாஹ் விதித்திருக்கும் விதிகளைப் பேணி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!
எம். ஷம்சுல்லுஹா