வெட்கம் அனுமதியும் தடையும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது.

ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், உறவினர்களிடத்தில், அண்டை வீட்டாரிடத்தில், இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் எல்லாரிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதைப் பற்றியும் எதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வகையில் இஸ்லாமே மனிதனுக்கான நேரான வழிகாட்டுதலாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே இஸ்லாம் கற்றுக் கொடுக்கும்.

அந்த வகையில், மனிதனிடம் இருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் இயல்புகளைப் பற்றியும் மிக விரிவாகவே அலசுகிறது. இப்படி மனித இயல்புகளைப் பற்றியும் குணாதிசயங்களைப் பற்றியும் பேசும்போது மனிதனால் பின்பற்ற முடியாதவற்றை நம்மிடம் ஒருக்காலும் இந்த மார்க்கம் திணிக்காது. இதிலிருந்து, இஸ்லாம் எதைச் சொன்னாலும் மனிதனால் பின்பற்றக்கூடியதையே சொல்லும், பின்பற்றத் தகாததை சொல்லாது என்பதை நாம் நம்பவேண்டும்.

இப்படி மனித குணங்களில் ஒன்றாக உள்ள வெட்கத்தைப் பற்றி நாம் அலசுவோம்.

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கத்தில் வெட்கப்படுவதைப் பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் நாம் அதைப் பற்றி இதில் அதிகமாக எழுதமாட்டோம். மாறாக வெட்கப்படக்கூடாத காரியங்கள், செயல்கள், இடங்கள், சந்தர்ப்பங்கள் என்னென்ன? என்பதை அலசுகிறோம். எனவே வெட்கம் சம்பந்தமான சில அடிப்படைகளைப் பார்த்துவிட்டு வெட்கப்படக்கூடாத காரியங்களைத் தொடர்வோம்.

முதலில் வெட்கம் என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். வெட்கம், வெட்கப்படுதல் போன்றவைகளை விளங்காமல் வெட்கப்படக் கூடாத காரியங்களை விளங்கிக் கொள்ளமுடியாது. எனவே வெட்கம் பற்றி அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்வோம். வெட்கம் என்பதை அரபி மொழி அகராதியில் அல்ஹயா என்பார்கள்.

வெட்கம் என்பது பெயர்ச்சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

இரண்டு பொருள்கள்

மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

1. நாணம்,  திறமையை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது, பெண் மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கப்படுவது போன்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

2. அவமானம், தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.

பார்க்க: கிரியாவின் தமிழ் அகராதி

மேற்சொன்ன கருத்தில்தான், அரபி மொழியின் பிரபலமான, ஆதாரத்திற்கு ஏற்கத் தகுந்த லிஸானுல் அரப் என்ற அகராதியிலும் வெட்கத்திற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

லிஸானுல் அரப்: பாகம் 11, பக்கம் 200

பிறர் பழிப்பிற்கு பயந்து ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து விலக்கிக் கொள்வது அல்லது விலகிக் கொள்வது. (அல்முன்ஜித்: பக்கம் 165)

மேலும் ஹயா என்பதற்கு உயிர்வாழ்தல் என்று கூட பொருள் உண்டு. அதனால்தான் நாம்கூட மானம் இழப்பின் உயிர்வாழ்தல் உடமையா? என்றுகூட கேட்கிறோம். எனவே உயிர்வாழ்வதின் அர்த்தமே மானத்தோடும் மரியாதையோடு வாழ்தலாகும். இதுதான் வெட்கம்.

மார்க்க ரீதியாக வெட்கத்தைப் பற்றிய சில அடிப்படையான செய்திகளைப் பார்த்துவிட்டு தலைப்புக்குள் சென்றுவிடுவோம்.

வெட்கம் ஈமானின் கிளை

வெட்கப்படுவது ஈமானின் ஒருமுக்கிய கிளையாகும். ஏனெனில் வெட்கம் கெட்டுவிட்டால் நமது வெளிப்படையான உள்ரங்கமான ஈமானின் பிற அம்சங்களையும் இது இரும்பைத் துரு அரிப்பதைப்போன்று அரித்துவிடும். வெட்கப்படுகிற குணம் நம்மிடம் இல்லையெனில் நம்மில் அதிகமானோர் அருவறுக்கத்தக்க ஆபாசங்களை சர்வசாதாரணமாக செய்துவிடுவோம்.

வெட்கம் என்பது இருப்பதினால்தான் நம்மை அனைத்து விஷயங்களிலும் அடக்கிக் கொண்டு இருக்கிறோம். எனவே வெட்கம் ஈமானில் மிகமுக்கியம் என்பதினால்தான் நபியவர்கள் ஈமானுக்கு எத்தனை கிளை இருக்கிறது என்பதைச் சொல்லும்போது வெட்கத்தையும் அத்தோடு சேர்த்தே குறிப்பிடுகிறார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் (நாணமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 9) 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ – أَوْ بِضْعٌ وَسِتُّونَ – شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் (வெட்கமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 58) ,59

வெட்கத்தின் முக்கியத்துவம்

பொதுவாகவே வெட்கம் இல்லையென்றால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்றாகிவிடும். இதற்குச் சிறந்த உதாரணமாக, திரைத் துறையினரை சொல்லலாம். காசுபணம் சம்பாதிப்பதற்காக கூத்தடிக்கும் வேலைகளை, அதுவும் கணவன் மனைவி செய்யவேண்டிய அந்தரங்கக் காரியங்களை காட்சியாக்கி அசிங்கமாகவும் ஆபாசமாகவும் வெளியில் பிறருக்குக் காட்டுவதற்குக் காரணம், வெட்கம் கெட்டுவிடுவதினால்தான். எதார்த்தத்தில் இதை யாரும் விரும்புவதில்லை. அப்படி விரும்பினால் அவனிடமும் வெட்கம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.

அதே போன்று சிலர், வெட்கமில்லாமல் எதையும் பத்திரிக்கையிலே எழுதுவார்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில்கூட நக்கீரன் கோபால் தனது பத்திரிக்கையிலே தமிழக முதலமைச்சரைப் பற்றி தவறாக வெட்கமில்லாமல் எழுதியதைச் சொல்லலாம். நக்கீரனைப் போன்று பல பத்திரிக்கைகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறு செய்திகளை வெட்கமில்லாமல்தான் சொல்லுகிறார்கள் என்பதை சாதாரண அறிவுள்ள எவராலும் விளங்கிக் கொள்ளமுடியும்.

அதேபோன்று இன்றைய அரசியல்வாதிகள் மக்களிடத்தில் பொய்வாக்குறுதிகளைச் சொல்லி வெட்கமில்லாமல் மானங்கெட்டு ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் அத்தனை வாக்குறுதிகளையும் மீறுவார்கள். இதுவும்கூட வெட்கங்கெட்ட செயலாகும்.

அதேபோன்று நமது சமுதாயத் தலைவர்களிலும்கூட பல கழிசடைகள் அரசியலுக்காவும் உலக ஆதாயத்திற்காகவும் வெட்கங்கெட்டு இஸ்லாத்தை அடகுவைக்கிற காட்சிகளை சாட்சிகளோடு செய்வதையும் கண்கூடாக நாம் அன்றாட வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.

இப்படி, எந்த மனிதனிடத்தில் வெட்கம் கெட்டுவிடுகிறதோ அவன் எந்தத் தவறையும் செய்வான் என்பதை நபியவர்கள் நமக்கு எச்சரிக்கிறார்கள். மேலும் எல்லா நபிமார்களும் சில அடிப்படையான கொள்கை கோட்பாடுகளை ஒரே மாதிரியாகவே சொல்லுவார்கள். அதே போன்று ஆதமிலிருந்து ஆரம்பித்து நூஹ், இத்ரீஸ், இப்ராஹீம் என்று இறுதி நபி முஹம்மது அவர்கள் வரைக்கும், இப்படி எல்லா நபிமார்களுமே இந்த வெட்கம் கெட்டால் ஒருவன் எதனையும் செய்வான் என்பதையும் சொல்லியுள்ளார்கள் என்பதிலிருந்து வெட்கத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்கிற முக்கியத்துவம் விளங்குகிறது.

 حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்றுதான், “நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்” என்பதும்.

அறி: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி),
நூல்: (புகாரி: 3483) , 3484 , 6120

வெட்கம் எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கவேண்டும் என்பதை யாருமே மறுப்பதற்கில்லை. வெட்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானதாகும். நமது தலைப்பு வெட்கப்படக்கூடாத விஷயங்களைப் பற்றியதுதான். இனி வெட்கப்படக்கூடாதவைகளைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கம் கூடாது

இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான இந்த சத்தியப் பிரச்சாரக் கொள்கையை எவரிடமும் எடுத்துச் சொல்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. அப்படி சத்தியப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும்போது வெட்கம் தடையாக இருப்பின், அல்லது ஆள்பார்த்து ஆளுக்குத் தகுந்தமாதிரியெல்லாம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் நாம் வழிகெட்டு விடுவோம். எனவே யார் முகத்தையும் பாராமல் தயவுதாட்சண்யமின்றி ஒளிவுமறைவு இல்லாமல் காய்தல் உவத்தலின்றி சொல்லவேண்டிய செய்தியை இறைவனுக்குப் பயந்து சொல்லிவிட வேண்டியதுதான். இதுதான் சத்தியப் பிரச்சாரம் செய்கிற, சத்தியக் கொள்கையைக் கடைபிடிக்கிற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு. இதில் வெட்கப்படுவது நூறு சதம் தவறானதாகும்.

இப்படித்தான் நம்முடன் இருந்தவர்களில் எத்தனையோ பேர் வெட்கப்பட்டோ அல்லது தயவுதாட்சண்யத்திற்காகவோ அல்லது ஒருமாதிரியாக இருப்பதற்காகவோ சத்தியத்தை மறைத்ததினால் இன்று வழிகேட்டில் இருப்பதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோன்று நிர்வாகத்திலோ குடும்பத்திலோ ஒரு தவறு நடப்பதை வெட்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ தட்டிக்கேட்காமல் இருந்தால், நாளடைவில் அந்தத் தவறை நாமும்கூட செய்துவிடுவோம். அல்லது நமது மேற்பார்வையிலேயே அந்த தவறு நடைபெறுவதற்கு உறுதுணையாகிவிடுவதையும் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கத்தான் செய்கிறோம்.

எனவே சத்தியத்தைச் சொல்வதற்கு, உண்மையை உரைப்பதற்கு எவரும் வெட்கப்படவே கூடாது.

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக்கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர்.

இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.

(அல்குர்ஆன்: 2:26)

மேற்சொன்ன வசனத்தில் இறைவன் கொசுவையோ அதைவிட அற்பமானதேயோ உதாரணம் கூறுவதற்கு வெட்கப்படமாட்டான் என்று சொல்வதிலிருந்தே இறைவன் சத்தியத்தை எடுத்துரைக்க தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே நாமும் சத்தியக் கருத்தை உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும்? வெட்கப்படவேண்டும்? எனவே வெட்கப்படக்கூடாது. இறைவன் நபிக்குச் சொன்னதைப் போன்று ஏவப்பட்டதைப் போட்டு உடைத்துவிட வேண்டியதுதான்

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

(அல்குர்ஆன்: 15:94)

சில இயக்கத்தவர்களும் தனிமனித வழிபாட்டை ஆதரிப்பவர்களும் இப்படி தயவு தாட்சண்யம் என்கிற வெட்கத்தினால் தான் நன்மையை மட்டும் ஏவினால் போதும். தீமை தானாகவே ஓடி ஒளிந்துவிடும் என்று ஏகவசனம் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வெட்கம்தான் தடையாக நிற்கிறது. அல்லது வேறெதாவது காரணமாக இருக்கும். எந்தக் காரணமாக இருந்தாலும் தவறு தவறுதான். இதை சரியென வாதிடுவது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும்.

மேலும் நபியவர்களின் வாழ்விலும்கூட இதற்கு சான்றுகள் இருக்கின்றன.

 عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ

جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَتِ الْمَاءَ فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ – تَعْنِي وَجْهَهَا – وَقَالَتْ يَا رَسُولَ اللهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ نَعَمْ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا.

(அபூதல்ஹா ரலி அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்.

உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, “பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.

அறி: உம்மு சலமா (ரலி),
நூல்: (புகாரி: 130) , 282, 3328,(முஸ்லிம்: 520, 521, 522, 523, 524)

சில விஷயங்களில் பிறர் வருத்தம் பாராமல் வெட்கமில்லாமல் நடந்து கொள்வது பொதுவாக அந்தஸ்து, உயர்வு அல்லது ஏற்றத்தாழ்வு இப்படி ஏதேனும் ஒன்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு பிறர் மனம் நோகாமல் பழகவேண்டும் என்று சொல்லிக் கொண்டு, யானை தன்மீது மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டதைப் போல் சிலர் தனக்குத்தானே தர்ம சங்கடத்தை விலைகொடுத்து வாங்குவதைப் பார்க்கிறோம். இதுவெல்லாம் தேவையில்லாத வீண்சிரமத்தை தனக்காகவே ஏற்படுத்திக் கொள்வதாகும்.

எனவே பிறர் மனம் நோகுமே என்று எல்லா இடத்திலும் வெட்கப்பட்டுக் கொண்டு தேவையற்ற சிரமத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. யாராக இருந்தாலும் தெளிவாக விஷயத்தைச் சொல்லிவிட்டு இடத்தைக் காலிபண்ணிவிட வேண்டியதுதான். இல்லையெனில் நமது நேரமும் நமது உழைப்பும் நமது வாய்ப்புகளும் வீணாகி பாழாகிவிடும்.

இதை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். நாம் முக்கியமான அவசரமான பிரயாண நேரத்திலோ அல்லது வேலையிலோ இருக்கிற போது நம்மால் மறுத்துப் பேச முடியாத சிலர் நம்மிடம் மிகமுக்கிய விஷயத்தை சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த நேரம் நமக்கான மிகமுக்கிய நேரமாக இருக்கும். அது அவருக்குத் தெரியாது. அவர் எப்போதும் போலவே நம்மை அணுகுவார்.

இந்தநேரத்தில் நீங்கள் எப்படி அவரிடம் நமது தேவையை அல்லது அவசரத்தைச் சொல்வது என்று வெட்கப்படுவீர்களானால் அதனால் ஏற்படுகிற இழப்புக்கு நீங்கள்தான் காரணம். அவரைக் குறைகூற முடியாது. எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உண்மை நிலையை சொல்லி அந்த அறுவை கேசிடமிருந்து நகர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம். இல்லையேல் தேவையற்ற கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பிறரது முக்கியத்தை உணர்ந்து இதுபோன்று பேசுவதையும் சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக் கொள்வது மிகவும் நல்ல பண்பாகும்.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெட்கப்படக் கூடாது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளிவாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். அதற்கு நான், “(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். ஆகவே, அவர்கள் பேரீச்சம்பழம், நெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றை எடுத்து “ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள்.

அதை என்னிடம் கொடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி நடந்(துசென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், “அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களைத் தம(து மண விருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கின்றவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து(முடித்து)விட்டு, நான் திரும்பிவந்தேன்.

அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்தனைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப்பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், “அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.

அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒருசிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (வழக்கம் போல் தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். “(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்” என்று நான் கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்து ஸைனப் (ரலி) அவர்களது அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (அல்குர்ஆன்: 33:53) ஆவது வசனத்தை ஓதினார்கள்:

  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் (சிறுவயதில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.

(புகாரி: 5163) 

இந்தச் செய்தி புகாரியிலும் முஸ்லிமிலும் (பார்க்க: (முஸ்லிம்: 2796) ,2798,2802,2083) பல்வேறு அறிவிப்புகளில் பல வார்த்தைகளில் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் அறிவிப்பில் இன்னும் தெளிவாகவே உள்ளது. பலமுறை, நபியவர்கள் பேசிக் கொண்டிருந்த ஸஹாபாக்களை எழுந்துபோகச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லாமலே செயலில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அல்லாஹ்வே இதுகுறித்து வசனம் இறக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதில் நபியவர்கள் ஸஹாபாக்களிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு ஏதேதோ செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்காக இன்னும் சில அறிவிப்புக்களைத் தருகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸைனப் பின்த் ஜஹ்ஷ்’ (ரலி)அவர்களை மணமுடித்துக் கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை.

அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
: لَمَّا تَزَوَّجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ابْنَةَ جَحْشٍ دَعَا الْقَوْمَ فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ ، وَإِذَا هُوَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ وَقَعَدَ ثَلاَثَةُ نَفَرٍ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقْتُ فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدِ انْطَلَقُوا فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ فَأَنْزَلَ اللَّهُ : {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ} الآيَةَ

ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி,
நூல்: (புகாரி: 4791)

قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ
 أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذِهِ الآيَةِ آيَةِ الْحِجَابِ لَمَّا أُهْدِيَتْ زَيْنَبُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَانَتْ مَعَهُ فِي الْبَيْتِ صَنَعَ طَعَامًا وَدَعَا الْقَوْمَ فَقَعَدُوا يَتَحَدَّثُونَ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْرُجُ ثُمَّ يَرْجِعُ وَهُمْ قُعُودٌ يَتَحَدَّثُونَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ} إِلَى قَوْلِهِ {مِنْ وَرَاءِ حِجَابٍ} فَضُرِبَ الْحِجَابُ وَقَامَ الْقَوْم

அப்போது நபி (ஸல்) அவர்கள் (“வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போது தான் அல்லாஹ்” இறைநம்பிக்கை கொண்டவர்களே!.. (அல்குர்ஆன்: 33:53) வது வசனத்தை அருளினான்.

நூல் : (புகாரி: 4792) 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
لَمَّا تَزَوَّجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- زَيْنَبَ بِنْتَ جَحْشٍ دَعَا الْقَوْمَ فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ – قَالَ – فَأَخَذَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ مِنَ الْقَوْمِ. زَادَ عَاصِمٌ وَابْنُ عَبْدِ الأَعْلَى فِى حَدِيثِهِمَا قَالَ فَقَعَدَ ثَلاَثَةٌ وَإِنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- جَاءَ لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقُوا – قَالَ – فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَنَّهُمْ قَدِ انْطَلَقُوا – قَالَ – فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِى وَبَيْنَهُ – قَالَ – وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِىِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ) إِلَى قَوْلِهِ (إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்து விட்டார்கள்.

அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்து விட்டனர்… ஆனால், மூன்றுபேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் சென்று, அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள்…

நூல் : (முஸ்லிம்: 2801) 

 عَنْ أَنَسٍ قَالَ لَمَّا تَزَوَّجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- زَيْنَبَ أَهْدَتْ لَهُ أُمُّ سُلَيْمٍ حَيْسًا فِى تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَقَالَ أَنَسٌ

فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اذْهَبْ فَادْعُ لِى مَنْ لَقِيتَ مِنَ الْمُسْلِمِينَ ». فَدَعَوْتُ لَهُ مَنْ لَقِيتُ فَجَعَلُوا يَدْخُلُونَ عَلَيْهِ فَيَأْكُلُونَ وَيَخْرُجُونَ وَوَضَعَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَدَهُ عَلَى الطَّعَامِ فَدَعَا فِيهِ وَقَالَ فِيهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَلَمْ أَدَعْ أَحَدًا لَقِيتُهُ إِلاَّ دَعَوْتُهُ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَخَرَجُوا وَبَقِىَ طَائِفَةٌ مِنْهُمْ فَأَطَالُوا عَلَيْهِ الْحَدِيثَ فَجَعَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَسْتَحْيِى مِنْهُمْ أَنْ يَقُولَ لَهُمْ شَيْئًا فَخَرَجَ وَتَرَكَهُمْ فِى الْبَيْتِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِىِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ) قَالَ قَتَادَةُ غَيْرَ مُتَحَيِّنِينَ طَعَامًا وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا حَتَّى بَلَغَ (ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ)

அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 33:53) ஆவது வசனத்தை அருளினான்.

நூல் : (முஸ்லிம்: 2804)

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும். சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.

நமது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமான பாபரி மஸ்ஜிதை இந்துத்துவ பாசிச வெறியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி இந்தியாவின் இறையாண்மையையும் கட்டுக்கோப்பையும் தகர்த்தெறிந்தனர். அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர், நரசிம்மராவ் சிறுபான்மை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதை யாரும் மறந்திருக்கமாட்டோம். மன்னிப்பு மட்டும் கேட்காமல் இடித்த இடத்திலேயே கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை நிறைவேற்றவே இல்லை. இருந்தாலும் வெட்கப்படாமல் அல்லது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்காவது மன்னிப்புக் கேட்டதை தலைப்புக்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், பாபரி மஸ்ஜிதை இடித்த இந்துத்துவ வெறியர்களோ அதன் தலைவர்களோ தார்மீக பொறுப்பேற்று நம்மிடம் செய்த தவறை ஒத்துக்கொண்டு வெட்கப்படாமல் மன்னிப்புக் கேட்டு தவறை ஒத்துக் கொண்டதற்கு அடையாளமாக அதே இடத்தில் பள்ளிவாசலையும் கட்டிக் கொடுத்திருந்தால் அறுபது வருடமாக இருசமூக மக்களிடையே இந்தப் பிரச்சினை இருந்திருக்காது. மேலும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் இழுக்கு ஏறப்பட்டிருக்காது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அதேபோன்று நம்நாட்டின் அரசியல்வாதிகளும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் செய்த தவறை வெட்கப்படாமல் ஒத்துக் கொண்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலேயே நாட்டில் நடக்கிற சாதிய,மதக் கலவரங்களில் தொண்ணுறு விழுக்காடு பிரச்சினை தீர்ந்துவிடும்.

அதேபோன்று குடும்பத்திலோ இயக்கத்திலோ ஏதேனும் நிர்வாகத்திலோ தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் வெட்கப்படாமல் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், இன்று இந்தியாவின் வழக்காடு மன்றங்களில் இருக்கிற குடும்பப் பஞ்சாயத்துகள் இன்றே தீர்ந்துவிடும். அதுபோன்றே எந்த நிர்வாகமும் சீராக இயங்குவதற்கு இந்தப் பண்பு மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பதை அறிவுடைய யாரும் மறுக்கமாட்டார்கள்.

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 3:135)

மேலும் இதுபோன்று வெளிப்படையாக ஒரு பிரமுகர் செய்த தவறுக்காக அவர் வெளிப்படையாகவே வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்பதினால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருப்பதற்கு இப்பண்பு கேடயமாக அமைந்து விடுகிறது.

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் இதற்கு சரியான தீர்வைத் தருவதாகவும் நமது ஜமாஅத்தினருக்கு இது மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது.

இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பற்றி ஆராய்ந்து சரியான முடிவைச் சொல்பவர்களுக்கு இரண்டு கூலி இருக்கிறது. தவறாகச் சொன்னாலும்கூட ஒருகூலி இருக்கத்தான் செய்கிறது. தண்டனை எதுவும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே தவறாகச் சொன்னால் அது இறையச்சத்திற்கு உகந்ததில்லை. மேலும் மறுமையில் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவதாகவும் இருக்கும்.

நமது ஆய்வில் சில தவறுகள் ஆங்காங்கே ஏற்படுவதுண்டு. நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவர்களைத் தவிர இப்படி தவறே ஏற்படாத எந்த மனிதனும் உலகில் இல்லவே இல்லை. அதனால்தான் இமாம்களில்கூட பழைய சொல், புதிய சொல் போன்ற மார்க்கத் தீர்ப்பெல்லாம் நிகழ்ந்துள்ளது.

எனவே இவ்வளவு நாள் ஏன் தவறாகச் சொன்னீர்கள் என்ற கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்விற்கு பயந்து ஆராய்ச்சியின் முடிவு எப்படி இருக்கிறதோ அதை மக்களுக்குப் பயப்படாமல் நமது சுயகவுரவத்தைப் பார்க்காமல் அதாவது வெட்கப்படாமல் சரியானதை சரியென்றும் தவறானதை தவறு என்றும் மாற்றி திருத்திக் கொள்வதே இறையச்சத்திற்கு நெருக்கமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்பது இறைவனது மார்க்கம். இதில் தவறுதலாக விளங்கிவிடுவது நமது குறை என்பதை கட்டாயம் வெட்கமில்லாமல் ஒத்துக் கொள்வதே இஸ்லாத்தில் தூய்மை பேணுவதாக அமையும்.

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏ اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:159,160)

தாம் செய்த தவறை ஒத்துக் கொண்ட நபித்தோழர்கள்
 عَنْ أَبِي الدَّرْدَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذًا بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ فَسَلَّمَ وَقَالَ إِنِّي كَانَ بَيْنِي وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَيْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِي فَأَبَى عَلَيَّ فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ ثَلاَثًا ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ فَأَتَى مَنْزِلَ أَبِي بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ فَأَتَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ مَرَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي مَرَّتَيْنِ فَمَا أُوذِيَ بَعْدَهَا.

ஒரு முறை அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தவறிழைத்ததாக எண்ணியதால் உமர் (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி ஸல் அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் ரலி அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க வீட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். “பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

அறி : அபுத்தர்தா (ரலி),
நூல் : (புகாரி: 3661)

வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு வெட்கப்படக்கூடாது

ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை, வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது என்பதை ஆழமாக நம்பி செயல்படவேண்டும்.

நபிகள் நாயகம் காலத்தில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தும் ஒரு நபித்தோழர் வெட்கத்தினால் தவற விட்டதற்கான ஆதாரங்களையும், அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய சஹாபிகளும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் காணமுடிகிறது.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ أَخْبِرْنَا بِهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது.

(மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.

அறி: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: (புகாரி: 131) , 4698, 6144,(முஸ்லிம்: 5415, 5416)

عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ : أَلاَ أُخْبِرُكُمْ ، عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فَآوَاهُ اللَّهُ ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ.

அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

அறி: அபூவாக்கித் (ரலி),
நூல்: (புகாரி: 66) , 473, 474,(முஸ்லிம்: 4389)

 عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
، قَالَ : كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِيمَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لاَ نَدْرِي ، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ : لاَ قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَال عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.

(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110வது “அந்நஸ்ர்’) அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.

பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 4264) 

கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

பொதுவாகவே எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படுகிற ஒருவனால் ஒருக்காலும் முன்னேறவே முடியாது.

அதேபோன்று எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று எண்ணுபவன் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. நம்மில் பலர் சிறுவயதில் குர்ஆனை நன்றாக அரபியில் ஓதக் கற்றிருப்பார்கள். நாளடைவில் அறவே ஓதத் தெரியாதளவிற்கு மறந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நம்மை யாரும் குர்ஆனைக்கூட ஓதத் தெரியாதவராக இருக்கிறார் என்று தவறாக நினைப்பாரோ என்றெண்ணி வெட்கத்தினால் மீண்டும் ஓதுவதற்கு வெட்கப்படுவார்கள். இவர்களால் ஒருக்காலும் குர்ஆனை ஓதவோ அல்லது மனனம் செய்யவோ முடியாது.

எனவே கல்வியைக் கற்பதற்கு, பிறர் நம்மைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்றெண்ணி வெட்கப்படாமல், கற்றால் கண்டிப்பாக அவர் சமூகத்தினராலும் பாராட்டுக்குரியவர். மறுமைப்பேறையும் பெற்றிடுவார் என்பதில் ஐயமில்லை எனவே கற்பதற்கு வெட்கப்படக்கூடாது.

இதற்கு ஆதாரமாக மேற்சொன்ன மூவர்களின் சம்பவமே சரியான சான்றாக அமையும். மேலும் சத்தியத்தை சொல்ல வெட்கம் கூடாது என்கிற தலைப்பிலுள்ள உம்முசுலைம் நபியவர்களிடம் குளிப்புக்கடமை பெண்களுக்கும் ஏற்படுமா? என்று கேள்வி கேட்ட செய்தியையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

عَنْ عَائِشَةَ
أَنَّ أَسْمَاءَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطَهَّرُ بِهَا فَقَالَتْ أَسْمَاءُ وَكَيْفَ تَطَهَّرُ بِهَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِينَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ تَأْخُذُ مَاءً فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تُبْلِغُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ عَلَيْهَا الْمَاءَ فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ…

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்’ என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன்.

மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறி: ஆயிஷா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 552) 

மார்க்கத்தைக் கற்க அறவே வெட்கப்படக் கூடாது

பொதுவான கல்வியைக் காட்டிலும் இம்மை வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும் மார்க்கக் கல்வியைப் படிப்பதிலும் மார்க்க அறிவைக் கற்பதிலும் பெறுவதிலும் அறவே நம்மிடம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூச்சமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் மனிதனால் பின்பற்ற முடிந்ததையும் மனிதன் பிறமனிதனுக்கு எடுத்துச் சொல்லத் தகுந்த செய்தியையுமே சொல்லுவார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேசமயத்தில், மார்க்கம் என்ற பெயரில் தனிமனிதக் கருத்துக்களை சொல்வதில் பரிமாறிக் கொள்வதில் இந்தச் சான்றைக் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு மார்க்கம் என்ற பெயரில் குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத மத்ஹபு சட்டங்களையும் அதில் இருக்கும் ஆபாசக் கூற்றுக்களையும் சொல்வதற்கு வேண்டுமானால் வெட்கப்படாலாமே தவிர குர்ஆனையும் நபிவழியையும் சொல்வதற்கு வெட்கப்படத்தேவையில்லை என்பதை உணர வேண்டும். இந்த ஆதாரத்தை சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை என்ற தலைப்பிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

عَنْ أَبِى مُوسَى قَالَ
اخْتَلَفَ فِى ذَلِكَ رَهْطٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّونَ لاَ يَجِبُ الْغُسْلُ إِلاَّ مِنَ الدَّفْقِ أَوْ مِنَ الْمَاءِ. وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ. قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ. فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِى فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ – أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ – إِنِّى أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَىْءٍ وَإِنِّى أَسْتَحْيِيكِ. فَقَالَتْ لاَ تَسْتَحْيِى أَنْ تَسْأَلَنِى عَمَّا كُنْتَ سَائِلاً عَنْهُ أُمَّكَ الَّتِى وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ. قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா, அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர்.

அன்சாரிகள், ” “விந்து வெளியானால்தான்’ அல்லது “துள்ளல் இருந்தால்தான்’ குளியல் கடமையாகும்” என்று கூறினர். முஹாஜிர்கள், “இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)” என்று கூறினர். உடனே நான், “இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ” “அன்னையே!’ அல்லது “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!’ நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்” என்றார்கள். நான், “குளியல் எதனால் கடமையாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறி: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல்: (முஸ்லிம்: 579) 

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-
قَالَتْ إِنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ هَلْ عَلَيْهِمَا الْغُسْلُ وَعَائِشَةُ جَالِسَةٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنِّى لأَفْعَلُ ذَلِكَ أَنَا وَهَذِهِ ثُمَّ نَغْتَسِلُ ».

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா’ என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்” என்றார்கள்.

அறி: உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்),
நூல்: (முஸ்லிம்: 580) 

எனவே மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களை வெட்கப்பட்டு விட்டுவிடாமல் தகுதியுடையவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தும் முக்கிய விஷயமாகும்.

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!