72) வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்
நியாயத்துக்காக நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது.
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
‘அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி)
ஆயினும் இது கட்டாயமானது அல்ல.
ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ஸஃபிய்யா அவர்கள் இரண்டு ஆடைகளைப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்து அதில் தனது சகோதரர் ஹம்ஸாவுக்குக் கஃபனிடுமாறு கூறினார்கள். ஹம்ஸாவுக்கு அருகில் மற்றொருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததால் இருவரையும் தலா ஒரு ஆடையில் கஃபனிட்டோம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
ஹம்ஸாவும், மற்றொருவரும் போரின் போது அணிந்திருந்த ஆடையில் கஃபனிடப்படாமல் வேறு ஆடையில் கஃபனிடப் பட்டார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்திருப்பார்கள்.